இலங்கையில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக, சிங்கள மக்கள் மத்தியில் அசைக்க முடியாத ஆட்சியாளர்கள் என எண்ணிய ராஜபக்ஷ குடும்பத்தை, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக அதிகாரத்தில் இருந்து அகற்றினர்.

ஆனால் தற்போது கட்சிப் பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக அவர்கள் மக்களைச் சந்தித்து வருகின்றனர். இது ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிகுறியா?

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, ராஜபக்ஷ குடும்பத்தினரே பிரதான காரணம் என தெரிவித்து, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான பகுதியிலுள்ள வீட்டிற்கு முன்பாக, கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி முதல் மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி காலி முகத்திடலில் ஒன்று கூடிய மக்கள், தொடர் தன்னெழுச்சி போராட்டத்தை ஆரம்பித்தனர்.

 

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்குடன் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், மே மாதம் 9ம் தேதி காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதி போராட்டம், வன்முறையாக மாற்றம் பெற்றது.

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர், அங்கிருந்து வெளியேறிய ராஜபக்ஷ ஆதரவாளர்கள், காலி முகத்திடலுக்கு சென்று, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதையடுத்த, மே மாதம் 9ம் தேதி ஒரு சில மணித்தியாலங்களில் நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்தன.

இந்த வன்முறைகளின் காரணமாக உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.

அதேபோன்று, ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் அவரின் நெருக்கமானோர் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.

பல கோடி ரூபாய் பெறுமதியாக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ஷ மே மாதம் 09ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததுடன்,

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அமைச்சு பொறுப்புக்களை ராஜினாமா செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஜுன் மாதம் 09ம் தேதி, பஷில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், ஜுலை மாதம் 09ம் தேதி கொழும்பு நகருக்குள் வருகைத் தந்த பல லட்சக்கணக்கான மக்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் வாசஸ்தலம் உள்ளிட்ட பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

இதையடுத்து, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகியிருந்தார்.

இந்த நிலையில், இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக, ஜுலை 13ம் தேதி மாலைத்தீவு நோக்கி பயணித்து, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

இவ்வாறு சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து தமது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்தார்.

இலங்கை வடக்கில் போதைப்பொருள் புழக்கம் – கடல் கடந்து வரும் ஆபத்து – கள நிலவரம்
சீன வகை உணவுகளில் மிக அதிகளவில் உப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு

இதையடுத்து, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டதுடன், பின்னர் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக அவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டும் இலங்கைக்கு வருகைத் தந்தார்.

தற்போது கொழும்பில் அதிவுயர் பாதுகாப்புடன் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் தங்கியுள்ளனர்.

இந்தநிலையில், ராஜபக்ஷ குடும்பத்திற்கான செல்வாக்கு மொத்தமாகவே வீழ்ச்சி கண்டது.

இவ்வாறு வீழ்ச்சியடைந்த ராஜபக்ஷ குடும்பத்தின் செல்வாக்கை, மீண்டும் நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ராஜபக்ஷ குடும்பத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை ராஜபக்ஷ தலைமையிலான சிலர் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ளனர்.

நாவலபிட்டி பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் கூட்டமொன்று கடந்த வாரம் நடத்தப்பட்டது

எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வலுப் பெற செய்வதற்கு பாரிய பங்களிப்பை வழங்கிய, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டலஸ் அழகபெரும, ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் தற்போது சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது இரண்டாக பிளவடைந்திருந்தாலும், அந்த கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளன.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டங்களுக்கு சில பகுதிகளில் எதிர்ப்புக்கள் வலுப் பெற ஆரம்பித்த நிலையிலும், கூட்டத்தை முன்னோக்கி நடத்தியிருந்தனர்.

குறிப்பாக நாவலபிட்டி பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் கூட்டமொன்று கடந்த வாரம் நடத்தப்பட்ட போதிலும், அங்கு வருகைத் தந்த பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்ப்பை வெளியிட்டவர்கள் போலீஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் நடத்தப்பட்டது.

ராஜபக்ஷ குடும்பத்திற்கு செல்வாக்கு அதிகரிக்கின்றதா?

ராஜபக்ஷ குடும்பத்திற்கு மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருவதாக கூறப்படும் கருத்து தொடர்பில் பிபிசி தமிழ், மூத்த அரசியல்வாதியும், அரசியல் ஆய்வாளருமான மயில்வாகனம் திலகராஜிடம் வினவியது.

”செல்வாக்கு எந்தவிதத்திலும் அதிகரிக்கவில்லை. செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஊதி பெரிதாக்கின்றார்கள்.

ராஜபக்ஷ குடும்பம் வீழ்ந்து விட்டது. வீழ்ந்தவர்கள் என்ன செய்வார்கள்? எப்படியாவது எழ முடியுமா என்று பார்க்கின்றார்கள். இந்த வீழ்ச்சியானது, மஹிந்த, கோட்டா, பசில் ஆகியோருக்கு இறுதியான வீழ்ச்சி.

ஆனால், நாமல் ராஜபக்ஷவிற்கு இது இறுதி வீழ்ச்சி கிடையாது. இதை இறுதி வீழ்ச்சி என்று கருதினால், ராஜபக்ஷ பரம்பரைக்கே அது வீழ்ச்சியாக அமைந்து விடும். நாமல் அரசியலில் எழுந்து நிற்பதற்கான களமாக இது இருக்காது.

நாமல் ராஜபக்ஷவை சாரதி ஆசனத்தில் அமர்த்துவதற்காக, காற்று போன நான்கு சில்லுகளுக்கும், காற்றடிக்கும் கதையே நடக்கின்றது. மஹிந்த, பஷில், சமல், கோட்டா ஆகியோரே அந்த நான்கு சில்லுகள். நாமலை சாரதி ஆசனத்தில் வைத்து, ஓட்டுவதற்கு முயற்சிக்கின்றார்கள்” என்றார் அவர்.

நாமல் ராஜபக்ஷவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சியா, தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என்று அவரிடம் கேட்டோம்.

நாமல்

 

”ஆம். முயற்சி தான். நிச்சயமாக முயற்சி தான். அதிகாரத்திற்கு உடனடியாக நிறுத்தா விட்டாலும், பரவாயில்லை. வீழ்ந்த வீழ்ச்சியோடு, அவரை விழ செய்யாமல், எழுந்து விட்டோம் என தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சி தான் முன்னெடுக்கப்படுன்கின்றது.” என்றார் மயில்வாகனம் திலகராஜ்.

அதே நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவில் கூட்டங்களை வைக்க ஆரம்பித்துள்ளதற்கு தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிதான் என்றும் மயில்வாகனம் திலகராஜ் குறிப்பிடுகிறார்.

சில மாதங்களுக்கு முன்புவரை ராஜகபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்த நிலையில், தற்போது அந்தச் சூழல் சற்று மாறியிருப்பதையே களத்தில் காண முடிகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version