கோவை: காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த நபரை அடையாளம் காணப்பட்டு உள்ள நிலையில் ஏற்கனவே அவர் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும், அவரது காரில் ஆணிகள் கைப்பற்றப்பட்டதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் உக்கடத்தில் இன்று அதிகாலை மாருதி கார் திடீரென வெடித்து விபத்துக்கு உள்ளானது.
காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலிண்டர் வெடிப்பு
விபத்துக்குள்ளான கார், வேகத் தடையில் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.
கார் வெடித்து விபத்து ஏற்பட்ட பகுதியின் 4 திசைகளிலும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் பாதுகாப்பையும் தீவிரப்படுத்தினர்.
யார் அவர்?
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷ் முபின் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திர பாபு, “காரில் ஆணிகள், கோழி குண்டு போன்ற பொருட்களை கைப்பற்றியுள்ளோம்.
அவற்றை தடைய அறிவியல் துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த நபருடைய வீட்டில் சோதனை செய்ததில் ஸ்லோ என்டென்சி எக்ஸ்பிளோசிஸ் பொட்டாசியம் நைட்ரேட் அலுமினிய பவுடர் சல்பர் போன்ற சில பொருட்களை கைப்பற்றியுள்ளோம்.
என்.ஐ.ஏ விசாரணை
12 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளி யார் என்பதையும் இந்த நபர் யார்? சம்பவம் எப்படி நடந்துள்ளது என்பதையும் கண்டுபிடித்து உள்ளோம்.
அவர் ஓட்டி வந்த காரை 9 பேர் விற்று உள்ளார்கள். பத்தாவது நபர்தான் இந்த கார் வாங்கி உள்ளார். சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்துள்ளோம். 2019 ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இறந்த நபரை விசாரணை செய்து உள்ளனர்.
தீவிர விசாரணை
ஜமேஷ் முபின் மீது வழக்குகள் கிடையாது. பொறியியல் பட்டதாரியான இவர் தற்கொலை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. இவரது செல்போனில் கடைசியாக தொடர்புகொண்ட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ. விசாரணைக்கு கொண்டு செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.” என்றார்.