ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி 20 உலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா, மயிர் கூச்செரியவைக்கும் போட்டியின் கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால், இந்திய அணி பேட் செய்ய வந்தபோது அதற்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் என்று முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், ஒரு கட்டத்தில் இந்தியா 11வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அப்போது முகமது நவாஸ் பந்து வீசிய 12-வது ஓவர் இந்தியாவுக்கு திருப்புமுனை ஓவரானது.

இந்த ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்ட்யா சிக்சருக்கு பறக்கவிட, தனது பங்கிற்கு 4வது பந்தை விராட் கோலியும் சிக்சருக்கு விளாசினார். கடைசி பந்தில் மீண்டும் ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்ததால் ஒரே ஓவரில் 20 ரன்களை சேர்த்தது இந்தியா.

இதன் பிறகு இந்தியாவிந் ஆட்டத்தில் சூடு பிடித்தது. ரன்கள் வேகமாக வரத் தொடங்கின. இந்நிலையில், விராட் கோலி தனது அரை சதத்தை பூர்த்தி செய்து ஆட்டத்தில் முன்னேறினார்.

இந்நிலையில், கடைசி ஓவர் இரண்டு அணிகளுக்குமே சவாலானதாக இருந்தது. இரு அணி வீரர்களுமே பதற்றத்தில் இருந்தனர்.

16 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஓவரை எதிர்கொண்டது இந்தியா. பாகிஸ்தான் பௌலர் முகமது நவாஸ் இந்த ஓவரை வீசினார்.

விராட் கோலி

விராட் கோலியோடு இணைந்து நின்று உறுதியாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டுவந்த ஹர்திக் பாண்ட்யா முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

இது தவிர அடுத்து ஆட வந்த தினேஷ் கார்த்திக் விக்கெட்டும் இந்த ஓவரில் பறிபோனது. அதே நேரம், பாகிஸ்தான் அணியும் பதற்றத்தில் நோ பாலும், வைடுமாக வீசியது. ஃப்ரீஹிட் பந்தில் ஸ்டம்ப்பில் பந்து பட்ட நிலையிலும் இந்தியா அந்த பந்தில் 3 ரன்கள் எடுத்தது. இப்படி பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதிப் பந்தில் இந்தியா வெற்றி பெற்றது.

கடைசி பந்தில் இந்தியாவுக்கு வெற்றி பெற ஒரு ரன் தேவைப்பட்டது.

நவாஸ் முழுவதும் ஸ்டம்பை குறிவைத்து இந்தப் பந்தை வீசினார். மிட் ஆஃப் திசையில் பந்தை ஆடிய அஸ்வின், வெற்றிக்குத் தேவையான அந்த கடைசி ரன்னை எடுத்தார்.

அணியை மீட்ட ஜோடியில் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அவர் 4 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடித்திருந்தார். இறுதியில் இயல்பாகவே ஆட்டநாயகன் விருது அவருக்குச் சென்றது.

ஹர்திக் பாண்ட்யா 37 பந்தில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆகியிருந்தார்.

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

கடைசி ஓவரில் என்ன நடந்தது?

19-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழந்து 144 ரன்கள் சேர்த்திருந்தது. விராட் கோலி 74 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களுடனும் களத்தில் உறுதியாக நின்றிருந்தனர்.

ஆனால், கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்தது. இது கொஞ்சம் அதிகம் என்பதால், ஆட்டம் எந்த திசையில் செல்லும் என்ற நிச்சயமற்ற நிலையே இருந்தது.

ஓவரை வீச வந்த நவாஸ் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டை வீழ்த்தினார். பேட் முனையில் பட்ட பந்தை பாபர் ஆசம் கேட்ச் பிடித்து, ஹர்திக்கை அனுப்பிவைத்தார்.

அடுத்து களம் புகுந்த கார்த்திக் ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். ஓவரின் இரண்டு பந்துகள் முடிந்துவிட்ட நிலையில், இந்தியாவுக்கு இன்னும் 15 ரன் தேவையாக இருந்தது.

ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட கோலி இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். கிட்டத்தட்ட இந்தியாவின் வாய்ப்புகள் மங்கிவிட்டதாகத் தோன்றியது.

ஆனால், ஓவரின் 4-வது பந்தில் இருந்து கதை மாறியது. ஃபுல்டாசாக வந்த ஓவரின் நான்காவது பந்தை சிக்சருக்கு விரட்டினார் கோலி.

இந்த ஃபுல்டாஸ் மிக உயரமாக வந்ததாக கருதிய அம்பயர் அதை நோ பால் என்று அறிவித்தார். எனவே, இந்த பந்தில் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது.

அதே நேரம், ஒரு பந்தும் கூடுதலாக கிடைத்தது. அந்த பந்து அவ்வளவு உயரமெல்லாம் இல்லை என்று கூறி பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் அம்பயரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்தப் பரபரப்பினாலும், ஒரு பந்து செலவில்லாமல் இந்தியா எடுத்த 7 ரன்களாலும் பாகிஸ்தான் முகாமில் குழப்பமும் பதற்றமும் தொற்றிக் கொண்டதுபோலத் தெரிந்தது.

பௌலரின் மீது அழுத்தம் அதிகரித்தது. மீண்டும் ஓவரின் 4-வது பந்தை வைட் ஆக வீசினார் நவாஸ். மீண்டும் பந்து செலவில்லாமல் ஒரு ரன் பெற்றது இந்தியா.

ஆட்ட நாயகன் கோலி.

ஃப்ரீஹிட் தரப்பட்ட நிலையில், மீண்டும் பந்து வீச வந்தார் நவாஸ். கோலி எதிர்கொண்டார். பந்து ஸ்டம்பை பதம் பார்த்துவிட்டாலும், பைசாக 3 ரன்களை ஓடி எடுத்தது கோலி – கார்த்திக் ஜோடி. ஒரு வழியாக 4-வது பந்து முடிவுக்கு வந்தது.

ஓவரின் ஐந்தாவது பந்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவசரப்பட்ட கார்த்திக்கின் விக்கெட்டை ஸ்டம்பிக் செய்து வீழ்த்தினார் முகமது ரிஸ்வான்.

அடுத்து களத்துக்கு வந்தார் அஸ்வின்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு ஒரே பந்தில் இரண்டு ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால், பந்தினை கோலி எதிர்கொள்ளவில்லை என்பதால் நிச்சயமில்லாத நிலை இருந்தது.

மீண்டும் வைட் வீசி இந்தியாவை பதற்றத்தில் இருந்து காத்தது பாகிஸ்தான். அவர்களுக்கும் பதற்றம்தான். இந்த நிலையில், இந்தியா ஸ்கோரை சமன் செய்துவிட்டிருந்தது.

கடைசி பந்தை மீண்டும் வீசினார் நவாஸ். பந்தை அழகாக மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு, அந்த வெற்றி ஓட்டத்தை எடுத்தார் அஸ்வின்.

கடைசி வரை நின்று ஆடி அணியை வெற்றிக் கோட்டுக்கு இட்டுச் செல்லும் வீரராக கோலி மீண்டும் தன்னுடைய ஃபார்முக்கு திரும்பி இருப்பது இந்திய அணிக்கு நல்ல செய்தி.

இதற்கு முன்பாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 11 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் எட்டு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. பாகிஸ்தான் மூன்றில் வென்றுள்ளது.

இந்த 11 போட்டிகளில் இரண்டு போட்டிகள் இந்த ஆண்டு நடந்தவை. அவற்றில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

 

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இரண்டுமே சம பலம் உள்ளவை என்றே சொல்லலாம். ஐசிசி-யின் ஆண்கள் டி20 தர வரிசையில் இந்தியா முதலிடத்திலும் பாகிஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளனர். இந்தியாவின் சூரியகுமார் யாதவ் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஆனால், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இரு நாடுகளையும் சேர்ந்த ஒருவர்கூட இல்லை. ஆல்-ரவுண்டர்களில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா ஆறாம் இடத்தில் உள்ளார்.

இந்திய அணி விபரம்: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சமி

பாகிஸ்தான் அணி விபரம்: பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, இஃப்திகார் அஹ்மத், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், சதாப் கான், நசீம் ஷா, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்
சிவப்புக் கோடு

Share.
Leave A Reply

Exit mobile version