லண்டனில் ஆடம்பர வீடு, அடுக்குமாடிக் குடியிருப்புகள், நார்த் யார்க்ஷயரில் பாரம்பரிய பங்களா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வீடு என சொகுசு வாழ்க்கை வாழும் குடும்பம்.

”வாழ்த்துகள் ரிஷி. உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம். புதிய பதவியில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். ஒரு பிரதமராக பிரிட்டன் மக்களுக்கு மிகச் சிறப்பான சேவையை நீங்கள் செய்வீர்கள்” என்று தன் மருமகன் ரிஷி சுனக்கை வாழ்த்தியிருக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி.

ரிஷி சுனக் திருமணப் புகைப்படம்

42 வயதில் பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக், பல வரலாறுகளை இதன்மூலம் படைத்திருக்கிறார்.

இரண்டு நூற்றாண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஒரு தேசத்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பதவி ஏற்பது இதுவே முதல் முறை.

இந்து மதத்தைப் பின்பற்றும் ஒருவர் பிரிட்டன் பிரதமராவதும் இதுவே முதல் தடவை. எம்.பி-யாகத் தேர்வாகி நாடாளுமன்றத்தில் பதவியேற்றபோது, பகவத் கீதையின் மீது அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இங்கிலாந்தில் இப்படி பகவத் கீதை மீது பதவிப் பிரமாணம் ஏற்ற முதல் எம்.பி இவர்தான்.

 

பிரிட்டன் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 222-வது இடத்தில் இருக்கிறார் ரிஷி. அந்த வகையில் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்கும் பெரும் பணக்காரர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

 

பக்கிங்காம் அரண்மனையில் இருந்தபடி கௌரவ ஆட்சியாளராக செயல்படும் பிரிட்டிஷ் மன்னரை விட பணக்காரர் யாரும் இதுவரை பிரதமர் ஆனதில்லை. ரிஷியின் சொத்து மதிப்போ, மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகம்.

ரிஷியை இந்தியர் என்பதைவிட பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்டவர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

ஆம், ரிஷி பிறந்தது பிரிட்டன் நாட்டின் சவுதாம்டன் நகரில். பிறப்பால் அவர் பிரிட்டிஷ் இந்தியர் என்றே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

பஞ்சாபி இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ரிஷி. அவரின் தாத்தா, தற்போது பாகிஸ்தானில் இருக்கும் குஜ்ரன்வாலா நகரைச் சேர்ந்தவர். தாத்தா காலத்தில் பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவாக இருந்தது.

ரிஷியின் தாத்தா ராம்தாஸ் சுனக், கென்யா நாட்டின் நைரோபி நகரில் வேலைக்குப் போனார். அங்குதான் ரிஷியின் அப்பா யாஷ்விர் பிறந்தார். ரிஷியின் அம்மா பிறந்தது, ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டில். திருமணத்துக்குப் பின் இருவருமே பிரிட்டனில் குடியேறினார்கள். ரிஷியின் அப்பா அங்கு பொது மருத்துவராக இருந்தார். பார்மஸி முடித்த அம்மா, மருந்துக் கடை வைத்திருந்தார்.

நன்கு படிக்கும் மாணவரான ரிஷி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியலும் பொருளாதாரமும் முடித்தார்.

அமெரிக்கா சென்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை அங்குதான் சந்தித்தார். இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

2009-ம் ஆண்டு இவர்களின் திருமணம் பெங்களூரில் நடைபெற்றது. இந்துப் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற திருமணத்துக்கு இந்தியாவின் அத்தனை பிரபலங்களும் வந்திருந்தனர்.

தன் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு மரபுகள் குறித்து எப்போதும் பெருமையுடன் பேசுகிறவர் ரிஷி. ஏற்கெனவே போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தபோது, தன் அரசு இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய பெருமைக்குரியவர்.

ரிஷி -அக்‌ஷதா தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்தவர் கிருஷ்ணாவுக்கு 11 வயது, இளைய மகள் அனோஷ்காவுக்கு 9 வயது.

குழந்தைகள் பிறந்தபோது தாத்தா நாராயணமூர்த்தியும் பாட்டி சுதா மூர்த்தியும் பொறுப்பான தாத்தா பாட்டியாக பிரிட்டன் சென்று பிரசவத்தின்போது உடன் இருந்து பணிவிடைகள் செய்தனர். விடுமுறைகளில் குடும்பத்துடன் பெங்களூரு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் ரிஷி.

தன் மனைவியுடன் ரிஷி சுனக்

அப்பா நாராயணமூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அக்‌ஷதாவுக்கு கணிசமான பங்குகள் இருக்கின்றன.

இதுதவிர நாராயணமூர்த்தியின் கட்டாமரான் வென்சர்ஸ் முதலீட்டு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறது ரிஷி குடும்பம்.

இதுதான் அவர்களை பிரிட்டிஷ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது. லண்டனில் ஆடம்பர வீடு, அடுக்குமாடிக் குடியிருப்புகள், நார்த் யார்க்ஷயரில் பாரம்பரிய பங்களா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வீடு என சொகுசு வாழ்க்கை வாழும் குடும்பம்.

கடந்த முறை லிஸ் டிரஸ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டபோதே, அவருடன் போட்டி போட்டவர் ரிஷி.

ஆடம்பர உடைகள், காஸ்ட்லி ஷூக்கள் என ரிஷியின் வாழ்க்கைமுறை அப்போதே விமர்சனத்துக்கு ஆளானது. பதவி ஏற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் லிஸ் டிரஸ் பதவி விலக, இம்முறை ரிஷியைத் தேடி பிரதமர் பதவி வந்திருக்கிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version