என்னைக் கொலை செய்ய முற்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களை சிறையிலடைத்து வைத்திருப்பதால் எனது கண் மீளக் கிடைக்கப் போவதில்லை.

அவர்களுக்கு தண்டனை வழங்கி 8 ஆண்டுகள் கடந்த போதே , அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பமாகக் காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

என்னைக் கொலை செய்ய முற்பட்ட சந்தேகநபருக்கு கொழும்பு – கொட்டாஞ்சேனை ஆலய பூசகர் ஒருவரும் அவரது மனைவியும் உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 20 ஆண்டுகள் அவர்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். அவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்காக என்னுடைய கண் எனக்கு மீளக் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டப் போவதுமில்லை.

அவர்களை சிறையிலடைக்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் கடந்த போதே அப்போதைய ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்து அவர்களை விடுதலை செய்யுமாறு கோருவதற்கு எண்ணியிருந்தேன்.

இந்நிலையிலேயே அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த தீர்மானம் தொடர்பில் தெரிவித்தார்.

அவர் என்னிடம் கேட்ட அந்த சந்தர்ப்பத்திலேயே நான் சரி என்று பதிலளித்தேன். அந்த தீர்மானத்தை நான் விரும்புவதாகவும் அவரிடம் தெரிவித்தேன்.

அவர்களுக்கு புனர்வாழ்வளித்தேனும் , அவர்கள் செய்த செயல் தவறு என்பதை உணர்த்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

என்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சில தினங்களின் பின்னர் உரையாற்றும் போதும் , பதவிப் பிரமாண உரையின் போது விடுதலை புலிகள் அமைப்பிலிருந்த இளைஞர் , யுவதிகளை எம்முடன் இணைந்து பயணிக்குமாறு அழைப்பு விடுத்தேன் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version