சரியாக அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக கியூபா ஏவுகணை நெருக்கடி (Cuban missile Crisis) உலகை அச்சுறுத்திய அபாயகரமான காலகட்டமாகும்.

அதேநிலமை மீளவும் வந்துவிட்டதுபோல தற்போதைய ரஷ்ய – உக்ரேனிய போர், அணுஆயுத போராக மாறும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்டோபர் 1962இல் பதிமூன்று நாட்களாக உலகை உலுக்கிய சோவியத் ஒன்றியம் – கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போரின் உச்சக்கட்டமாக நிகழ்ந்த ‘நிழல்மோதலே’ கியூப ஏவுகணை நெருக்கடியாகும்.

தற்போது ரஷ்ய – உக்ரேனிய போர் உக்கிரம் அடைந்துள்ள வேளையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ‘அணுஆயுத தடுப்புப் படைகளை ஒரு சிறப்பு போர்ச் சூழலுக்கு நகர்த்துங்கள்’ என்று தமது இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார் என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

ரஷ்ய அணுஆயுதங்களுக்கான தயார் நிலைகள் பற்றிய புட்டின் பயன்படுத்திய மொழி தெளிவாக இல்லை என்று மேற்கத்திய ஆய்வாளர்களும், பிரித்தானிய உளவு அதிகாரிகளும் கூறுகின்றனர்.

மேலை நாடுகள் அணுஆயுதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வல்லவை என்று அறிந்த புட்டின், ஆணுஆயுதங்களைப் பயன்படுத்த விரும்பமாட்டார் என்று பொதுவானதொரு நிலைப்பாடு காணப்படுகின்றது.

அதனடிப்படையில் புட்டினின் அறிவிப்பு வெறும் வாய்ச்சவாலாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

1962ஒக்டோபரில் நிலவிய கியூபா ஏவுகணை நெருக்கடி நிலமை கட்டுப்பாட்டை மீறியிருந்தால் கூட பனிப்போர் உண்மையான போராக மாறியிருக்கும்.

அந்தப்போர் ஒரு அணுஆயுத போராக உருவெடுத்தும் இருக்கும். அணுஆயுதங்களோடு மூன்றாம் உலகப்போருக்கு மிக நெருக்கத்தில் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் சென்றன.

1961இல் பன்றிகள் விரிகுடா படையெடுப்பு (Bay of pigs invasion) அமெரிக்க இராணுவத்தினரால் கியூபா மீது மேற்கொள்ளப்பட்ட தோல்வியடைந்த தாக்குதலாகும்.

பிடெல் காஸ்ட்ரோ
இப்படையெடுப்பு பிடெல் காஸ்ட்ரோவின் அரசைக்கவிழ்ப்பதற்காக ஜோன் எஃப். கென்னடி ஜனாதிபதியாகியவுடன் அமெரிக்காவினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை அடுத்து கியூபா-அமெரிக்க உறவுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கியூப அரசாங்கமும் சோவியத் ஒன்றிய அரசாங்கமும் சேர்ந்து இரகசியமாக ஏவுகணைத்தளங்களை அமைக்க ஆரம்பித்தன. 1961இல் இத்தாலி மற்றும் துருக்கியிலும் மொஸ்கோ வரை தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகே இந்தச்சர்ச்சை ஆரம்பிக்கப்பட்டது.

SM-78 Jupiter

துருக்கியில் சோவியத் யூனியனுக்கு அருகிலேயே ஜுபிட்டர் ஏவுகணைகளை நிறுத்தியிருந்த அமெரிக்காவுக்கு எதிராக, கியூபாவில் சோவியத் அரசு இரகசியமாக அணுஆயுத ஏவுகணைகளை களமிறக்கியது.

1962 அக்டோபர் 14 அன்று, அணுசக்தி ஏவுகணைகள் இரகசியமாக கியூபாவிற்கு அனுப்பப்பட்டது என்பதையும், சோவியத் நடுத்தர தொலைவு ஏவுகணை ஏவுதளங்களை உருவாக்குகிறது என்பதையும் நிரூபிக்கும் வகையில் அமெரிக்க உளவு விமானம் புகைப்படம் எடுத்தது.

அக்காலகட்டத்தில் மிகப்பெரிய அணுசக்தி நாடாக இருந்த அமெரிக்காவால், கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் நிறுத்தப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவில், நடுத்தரத் தொலைவு ஏவுகணை ஏவுதளங்கள் கட்டுமானத்தில் இருப்பதை அமெரிக்கா கண்டறிந்த உடன் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.

ஜான் எப் கென்னடி.

1962 ஒக்டோபர் 22இல் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கியூபாவின் மீது கடற்படை முற்றுகையை அறிவித்தார்.

சோவியத்தில் இருந்து எந்த வித ஆயுதங்களும் கியூபாவுக்கு கொண்டு வரப்படக்கூடாது என்றும், மீறி கொண்டு வரப்பட்டால், அதை பறிமுதல் செய்யும் வகையில் கியூபாவைச் சுற்றி போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டன.

13 நாட்கள் நீடித்த கியூப ஏவுகணை நெருக்கடியானது, இறுதியில் பேச்சுவார்த்தைகள் மூலம் வெற்றி பெற்றது.

ரஷ்ய ஏவுகணைகள் திரும்பப் பெறப்பட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது. பதிலுக்கு, துருக்கியில் இருந்து தங்கள் சொந்த ஏவுகணைகளை அகற்ற அமெரிக்கா இரகசியமாக ஒப்புக்கொண்டது. இது பனிப்போரின் மிக ஆபத்தான அத்தியாயம் நீக்கப்பட்டது.

அன்றைய இரு வல்லரசு நாட்டின் தலைவர்களும் எச்சரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தனர்.

ஒக்டோபர் 26 அன்று, அமெரிக்கா கியூபாவை ஆக்கிரமிக்காது என்று உறுதியளித்தால் ஏவுகணைகள் திரும்பப்பெறப்படும் என்று சோவியத்கூறியது.

அதைத் தொடர்ந்து துருக்கியில் இருந்து அமெரிக்க ஏவுகணைகளை அகற்றக் கோரும் மற்றொரு ஒப்பந்தம் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டது

பிடல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்த பிறகு கியூபாவை தாக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது என்றும், அந்த திட்டங்களை அவ்வப்போது புதுப்பிக்குமாறு ஜளாதிபதி கென்னடி தொடர்ந்து தனது இராணுவத்துக்கு அறிவுறுத்தி வந்தார் எனவும் இரகசிய தகவல்கள் கசிந்தன.

When on October 22, 1962, President John F. Kennedy denounced the deployment of Soviet nuclear missiles in Cuba, the world was placed on the brink of an atomic war.

இத்தகவல்களின்படி கியூபாவில் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, வடக்கில் 10முதல் 15 நாட்களில் திட்டமிட்ட 250000 துருப்புக்களை கியூபாவில் தரையிறக்கி, காஸ்ட்ரோவை வெளியேற்றி நாட்டின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது.

இந்த முற்றுகையை முறியடிக்கவே கியூபாவில் அமெரிக்காவுக்குத் தெரிந்ததை விட அதிகமான சோவியத் ஆட்களும், அணு ஆயுதங்களும் தரையிறக்கப் பட்டன.

இதை எல்லாம் விட முக்கியமாக ஏவுகணைகளை செலுத்துவதற்கான அதிகாரம், கியூபாவில் கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனவே படையெடுப்பைத் தடுத்து நிறுத்த சிறிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அணுஆயுத பரிமாற்றத்தைத் தொடங்க அதுவே காரணமாக இருந்திருக்கும்.

அவ்வேளையில் அமெரிக்க அரசு விடாப்பிடியாக கியூபாவிற்கு ஆயுதம் வழங்குவதை அனுமதிக்க முடியாது என்று அறிவித்தது.

அதேநேரத்தில் சோவியத் ஒன்றியம், கியூபாவில் ஏற்கனவே அமைத்துள்ள மற்றும் அமைத்துக்கொண்டிருக்கும் ஏவுகணைத் தளங்களை அழிக்க வேண்டுமென வற்புறுத்தியது.

இதற்கு கிரெம்ளின் ஒத்துக்கொள்ளா விட்டால், கியூபா மீதான இராணுவ மோதலை கென்னடி நிர்வாகம் எதிர்பார்த்திருந்தது.

ஆயினும் சோவியத் ஒன்றியத்தின் நிக்கிட்டா குருசேவ் கென்னடிக்கு எழுதிய கடிதத்தில் உங்களின் சர்வதேச கடல் மற்றும் வான்வெளி முற்றுகையானது மனித குலத்தை அணுஆயுதப் போர் எனப்படும் நரகத்தில் தள்ள வழிவகுக்கிறது என்று எழுதியிருந்தார்.

அதன் பின்னரே உலகின் மிகநெருக்கடியான சிக்கல் இறுதியில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு பெற்றது.

அன்று அபாயகரமான அணுஆயுத போர் நடந்திருந்தால் 20ஆம் நூற்றாண்டில் முழு உலகத்தின் தலைவிதியை மாற்றும் நிகழ்வாக உருவெடுத்து இருக்கும். இதன் பின்னரே சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தை உருவாக்குவதில் நாடுகள் இணைந்து கொண்டன.

சோவியத் படைகளும் எதிர்த்தாக்குதல் நடாத்தி இருந்தால், ஐரோப்பாவை ஒரு மோதலுக்குள் இழுத்திருக்கும். அதன் விளைவாக மூன்றாம் உலகப்போர் மற்றும் உலகளாவிய அணுஆயுத தாக்குதலுக்கு வழிவகுத்திருக்கலாம். பல மில்லியன் மக்கள் அழிந்திருப்பார்கள்.

அப்படிஅணு ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தால், சோவியத் யூனியன் மீது ஏவுகணை மழை பொழிந்திருக்கும். அப்போரில் அமெரிக்கா ஆதிக்கம் கூட செலுத்தி இருக்கலாம், இருப்பினும் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் நிச்சயமாக அழிக்கப்பட்டு இருக்குமென அன்றைய தகவல்களின் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

அதேவிதமான அணுஆயுத ஆபத்தை உலகம் தற்போது எதிர்கொண்டுள்ளது. உக்கிரமடையும் உக்ரேனிய போர் எத்திசையில் செல்லும் என்பதை எவராலும் கணிப்பிட முடியாதுள்ளது.

-ஐங்கரன் விக்கினேஸ்வரா-

Share.
Leave A Reply

Exit mobile version