உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட போர் மத்திய ஆசிய முஸ்லிம் நாடுகள் பலவற்றுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் அமைந்துள்ளது. கசகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மனிஸ்தான் ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.

ஒருபுறம் ரஷ்யாவின் மோசமான இராணுவ செயற்பாடுகள் இரண்டு தசாப்த கால ரஷ்யாவின் கொடிய ஆதிக்கத்தில் இருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்வதற்கு மத்திய ஆசிய நாடுகளுக்கு வழியமைத்துள்ளது.

மறுபுறத்தில் ரஷ்யாவில் இருந்து கட்டாயமாகத் தப்பியோட வேண்டிய நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் தமது நிபுணத்துவ ஆற்றல்களுடன் இந்த நாடுகளுக்குள் பிரவேசித்துள்ளனர். இது மத்திய ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது

முன்னாள் சோவியத் யூனியனும் அதன் பிறகு ரஷ்யாவும் மத்திய ஆசிய பிராந்திய நாடுகளின் மக்களை போதிய படிப்பறிவற்றவர்களாக்கி தமது இரும்புப்பிடிக்குள் நசுக்கி வைத்திருந்தனர்.

மத்திய கிழக்கில் தமக்குத் தேவையான சர்வாதிகாரிகளைப் பதவியில் அமர்த்தி அவர்கள் ஊடாக அந்தப்பிரதேச மக்களை தமது பிடிக்குள் வைத்திருந்தனர்.

புறூஸ் பென்னியர் என்ற பத்தி எழுத்தாளர் இது பற்றிக் குறிப்பிடுகையில் “இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் உக்ரேன் மீது ரஷ்யா ஆரம்பித்த போர் புவிசார் அரசியல் மேல் தட்டுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் இதன் அதிர்வலைகளை உணரவும் முடிகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சர்வதேச சமூக அரங்கில் ரஷ்யா புறந்தள்ளப்பட்டு வந்த நிலை அதிகரித்ததன் காரணமாக மத்திய ஆசிய நாடுகளுக்கு வேறு வெளிநாட்டு பங்காளர்களைத் தெரிவு செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சுமார் 200 வருடங்களுக்கு மேலாக ரஷ்யாவையே பூகோள சக்தியாக மத்திய ஆசிய நாடுகள் பார்த்து வந்தன. தேவையேற்பட்டால் பலவந்தமாகக்கூட தனது சக்தியை இந்தப் பிராந்தியத்தில் திணிக்கக் கூடிய ஆற்றல் மிக்க நாடாக ரஷ்யாவை அவர்கள் கருதி வந்தனர்.

மத்திய ஆசிய நாடுகள் எல்லாவற்றினதும் பிரதான வர்த்தகப் பங்காளியாக ரஷ்யாவே காணப்படுகின்றது. மேற்குலக நாடுகளுடனான மத்திய ஆசிய பிராந்தியத்தின் வர்த்தகத்தில் பெருமளவு ரஷ்யா ஊடாகவே இடம்பெறுகின்றது.

மத்திய ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நாடாகவும் ரஷ்யாவே காணப்பட்டது.

ஆனால் உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தின் மந்தமான செயற்பாடுகள் மத்திய ஆசிய பிராந்தியத்தை பாதுகாக்கக் கூடிய ரஷ்ய இராணுவத்தின் வல்லமையை கேள்விக்கு ஆளாக்கி உள்ளது.

மத்திய ஆசிய நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாகவும் மிகவும் கஷ்டமான விடயமாகவும் காணப்படுவது பாதுகாப்பு இடைவெளியே ஆகும். கடந்த தசாப்த காலத்தில் மத்திய ஆசிய நாடுகள் தமது ஆயுத கொள்வனவுக்கு பல்வேறு வழிகளை நாடியுள்ளன.

துருக்கி மற்றும் சவூதி அரேபியாவுடன் அந்த நாடுகள் மிக நெருக்கமான உறவுகளை ஆரம்பித்துள்ளன.

இன்னும் பல நாடுகளின் தலைவர்களும் இந்தப் பிராந்தியத்துக்கு அவ்வப்போது விஜயம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மத்திய ஆசியாவில் துருக்மனிஸ்தானில் தான் இஸ்லாம் முதன் முதலாகப் பிரவேசித்தது. இந்தப் பகுதியின் கராக்குல் பாலைவனத்தின் பெரும் பகுதியை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த தஸ்மானிய பேரரசை அரபு முஸ்லிம்கள் வெற்றி கொண்டதன் மூலம் இது நடந்தது.

இறைதூதுர் முஹம்மது நபி (ஸல்) மரணித்து 19 வருடங்களின் பின் கி.பி 651இல் முஸ்லிம்கள் புராதன நகரமான மார்வ் நகரைக் கைப்பறியதன் மூலம் தமது படையெடப்பு வெற்றியைப் பூர்த்தி செய்தனர்.

இந்தக் காலப்பகுதியில் துருக்மனிஸ்தானில் வாழ்ந்தவர்கள் துருக்கி இனத்தவர்கள் அல்ல. அப்போது பாரசீக மக்களே அங்கு பெரும்பாலும் காணப்பட்டனர். அவர்கள் மிக விரைவாக இஸ்லாத்தை தழுவி ரஷீஉத்தீன் கிலாபத்துக்கு விசுவாசம் மிக்கவர்களாக மாறினர்.

மார்வ் நகருக்கு விஜயம் செய்த சீன வர்த்தகர்கள் அங்கு அரபியர்களும் பாரசீகத்தவர்களும் இரண்டறக் கலந்து எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி அந்நியோன்யமாக வாழ்வதை அவதானித்தனர்

இந்நிலையில், மத்திய ஆசிய பிராந்தியத்தில் இருந்து தான் பெரும்பாலான இஸ்லாமிய விஞ்ஞானிகளும், கல்விமான்களும் தத்துவ ஞானிகளும் தோற்றம் பெற்றுள்ளனர்.

திம்ரோத் சாம்ராஜ்ஜியம், முகலாய சாம்ராஜ்ஜியம் என்பன உட்பட மிகப்பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்கள் இந்தப் பிரதேசத்தில் இருந்து தான் தோற்றம் பெற்றன.

இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவைப் பாதுகாக்க பிரிட்டன் நேபாளம், பூட்டான், சிக்கிம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக விரிவான தடுப்பு வலையத்தை ஏற்படுத்த முயன்றது.

மேலும் அதை அவர்கள் திபெத் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை விரிவு படுத்தவும் முயன்றனர். இந்த செயற்பாடுகள் பிற்காலத்தில் பெரும் விளையாட்டுக்கள் என்று வரலாற்றியலாளர்களால் வர்ணிக்கப்பட்டன.

இவற்றின் விளைவாக மத்திய ஆசியாவில் உள்ள முஸ்லிம் சனத்தொகை 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்ட ஒரு சனத்தொகையாயிற்று.

இஸ்லாத்தை ஒரு மார்க்கம் என்ற ரீதியில் இந்த வெளிநாட்டு சக்திகள் தாக்கத் தொடங்கின. இங்கு காணப்பட்ட உள் கட்டமைப்பு, நாடோடி வாழ்க்கை முறை என்பனவும் தாக்கப்பட்டன.

மத்திய ஆசியாவில் இஸ்லாத்தின் வரலாறு மிகவும் நீளமானது. இந்த பிரதேசத்தைக் கைப்பற்ற பல்வேறு தரப்பினரும் மோதிக் கொண்டதால் மீண்டும் மீண்டும் அது ஒரு யுத்த பூமியாக மாறியது.

சீனா, பாரசீகம், துருக்கி ஆகிய பேரரசுகளிடமிருந்து தமது கிலாபத் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும் தக்க வைத்துக் கொள்ளவும் முஸ்லிம்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

ஆனால் இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும் மத்திய ஆசியாவில் இஸ்லாம் மிக வேகமாகப் பரவியது. தற்போது அந்த பிரதேசத்தில் செயல்முறையில் உள்ள மார்க்கங்களில் மிகவும் பிரதானமானதாகவும் அதிகளவான மக்களால் பின்பற்றப் படுவதாகவும் இஸ்லாம் திகழ்கின்றது.

முன்னதாக, 1920களின் முற்பகுதியில், ரஷ்யா மத்திய ஆசிய பிராந்தியத்தில் இஸ்லாத்துக்கு தடை விதித்தது. அங்கு அரபியில் எழுதப்பட்ட புத்தகங்கள் யாவும் தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்கள் எந்த அலுவலகங்களிலும் எவ்வித பதவிகளும் வகிக்க அனுமதிக்கப்படவில்லை.

குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் விசாரணை மன்றங்கள் யாவும் மூடப்பட்டன. முஸ்லிம்கள் தமது வழியாடுகளில் ஈடுபடுவது கூட முற்றிலும் முடியாத காரியமாயிற்று.

எவ்வாறாயினும் 1990இல். முன்னாள் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் கிடைத்த சுதந்திரத்துக்குப் பின் இஸ்லாம் பற்றிய தேவையும் தேடுதலும் இங்கு மீண்டும் அதிகரித்தன. மக்கள் ஆர்வத்தோடு அதில் ஈடுபட்டனர். இஸ்லாமிய ரீதியான அரசியல் குழுக்களின் செயற்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கின.

புதிய குடியரசுகளிலும் அவற்றின் அரசுகளிலும் காணப்பட்ட மதச்சார்பற்ற நிலைமைக்கு அவை சவாலாக மாறின. இந்த இஸ்லாமிய ரீதியான அரசியலின் ஆரம்ப கட்ட வெளிப்பாடுகள் மீது பிரயோகிக்கப்பட்ட கடுமையான அடக்குமுறைகள் அங்கு தீவிரவாதம், பயங்கரவாதம், மற்றும் வன்முறை கும்பல்களின்; தோற்றத்துக்கும் வழியமைத்துள்ளன.

லத்தீப் பாரூக்

Share.
Leave A Reply

Exit mobile version