ராஜஸ்தானில் கடனை அடைக்க பெற்றோர் தங்களது மகளை விற்பனை செய்யும் சம்பவங்கள் நடந்து வருவது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளது.
நாட்டில் இன்னும் சில இடங்களில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் ஆவர். அவர்களில் சிலரை அவர்களின் பெற்றோரே அனுப்பி இருக்கின்றனர் என்பதுதான் வேதனையின் உச்சம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடனுக்காக பெண்களை ஏலத்தில் விட்டு கடனை அடைக்கும் கொடூரச் சம்பவங்கள் நடந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்ட கிராமங்களில் கடன் வாங்குபவர்கள் சரியான நேரத்தில் அதனை திரும்ப கொடுக்க முடியவில்லையெனில், அவர்கள் தங்களது மகளை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் கடனை அடைக்கும் அவல நிலை இருந்து வருகிறது.
இங்கு கடன் வாங்குபவர்கள் மற்றும் கடன் கொடுத்தவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டால் உடனே காவல் நிலையத்திற்கு செல்வது கிடையாது.
மாறாக பஞ்சாயத்திற்கு பிரச்னையை கொண்டு செல்கின்றனர். அங்கு கடன் வாங்கியவர்கள் கடனை எப்படி அடைப்பது என்பது குறித்து பஞ்சாயத்து நடக்கும். இதில் கடன் வாங்கியவர்களின் மகள், சகோதரிகளை ஏலத்தில் விடுவார்கள்.
ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுப்பவர்கள் கொடுக்கும் பணத்தை கொண்டு கடன் தொகையை அடைப்பார்கள்.
பெண்களை ஏலத்தில் எடுப்பவர்கள் ஸ்டாம்ப் பேப்பரில் எத்தனை ஆண்டுகள் அப்பெண்ணை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்பது குறித்து பஞ்சாயத்தில் எழுதிக்கொடுப்பார்கள்.
அப்பெண்கள் பாலியல் தொழிலுக்காக உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, மும்பை, வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
இப்பெண்கள் பல முறை விற்பனை செய்யப்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அப்பெண்களை ஒப்பந்த அடிப்படையில் ஏஜெண்டுகள் வேறு ஒருவருக்கு வழங்குவது வழக்கம்.
சில நேரங்களில் கடனுக்காக நடத்தப்படும் ஏலத்தில் பெண்கள் விற்பனையாகவில்லையெனில் கடன் வாங்கியவரின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்களும் நடக்கிறது என்கிறார்கள்.
இது குறித்து ஏலத்தில் தனது மகளை இழந்த ஒருவர் கூறுகையில், “ரூ.15 லட்சம் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடனுக்காக முதலில் எனது சகோதரியை விற்பனை செய்தேன்.
அடுத்து 3 இளம் மகள்களையும் விற்பனை செய்துவிட்டேன். அப்படி இருந்தும் கடன் தீரவில்லை.
இதனால் கடைசியாக எனது 12 வயது மகளையும் 8 லட்சத்திற்கு 15 ஆண்டுகளுக்கு விற்பனை செய்துள்ளேன்.
ஆனாலும் இன்னும் கடன் தீரவில்லை” என்று தெரிவித்தார். இது குறித்து மற்றொருவர் கூறுகையில், “எனது மனைவியின் சிகிச்சைக்காக முதலில் 6 லட்சம் கடன் வாங்கினேன். ஆனால் எனது மனைவி இறந்துவிட்டார்.
அடுத்து எனது தாயாரின் சிகிச்சைக்காக 6 லட்சம் கடன் வாங்கினேன். இக்கடனுக்காக எனது இளைய மகளை 6 லட்சத்திற்கு விற்பனை செய்தேன்.
அவர்கள் அவளை ஆக்ராவிற்கு கொண்டு சென்றார்கள். அவளை மூன்று முறை மறுவிற்பனை செய்துள்ளனர். நான்குமுறை கர்ப்பம் அடைந்துள்ளார்” என்று கண்ணீர் விட்டார்.
இந்த அவல நிலை குறித்து Bhaskar என்னும் இந்தி ஊடகம் ஒன்று விரிவாக ஆய்வு செய்து செய்தி வெளியிட்டது. அதன் பிறகே இது குறித்து வெளிச்சத்திற்கு வந்தது.
இச்சம்பவங்களின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த தேசிய பெண்கள் ஆணையம் இரண்டு பேர் கொண்ட கமிட்டியை அமைத்திருக்கிறது.
அதோடு பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி குற்றவாளிகள் மீது நான்கு வாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ராஜஸ்தான் டிஜிபிக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். தேசிய மனித உரிமை கமிஷனும் இது தொடர்பாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
ஆனால் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக வெளியாகி இருக்கும் செய்தியை ராஜஸ்தான் அமைச்சர் பிரதாப் மறுத்துள்ளார். எனினும் இக்குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.