குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகரின் அடையாளம் என்று அழைக்கப்படும் இந்தத் தொங்கு பாலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் நிறைந்த இந்தப் பாலம் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர்.
மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த பாலம் உள்ளூர் மக்களிடையே ஒரு கவர்ச்சியான சுற்றுலா தலமாக இருந்தது. இதனைக் காணச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர்.
இந்த வழக்கில், அரசு தரப்பு நீதிமன்றத்தில், தடயவியல் அறிக்கையை மேற்கோள் காட்டி, பாலத்தின் தளம் மாற்றப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு ஆதாரமான கேபிள்கள் மாற்றப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் வரும் சனிக்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களில் ஓரேவா நிறுவனத்தின் இரண்டு மேலாளர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்கள் அடங்குவர்.
குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள 5 பேரையும் நீதிமன்றக் காவலுக்குத் தலைமை ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் எம்.ஜே.கான் அனுப்பி வைத்துள்ளதாக அரசு வழக்கறிஞர் எச்.எஸ்.பஞ்சால் தெரிவித்தார். இவர்களில் டிக்கெட் புக்கிங் கிளார்க்குகள் மற்றும் பாதுகாவலர்களும் அடங்குவர்.
ஒரேவாவின் மேலாளர்கள் தீபக் பரேக் மற்றும் தினேஷ் தவே, ஒப்பந்ததாரர்கள் பிரகாஷ் பர்மர் மற்றும் தேவங் பர்மர் ஆகிய நான்கு பேர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அரசு தரப்பு வக்கீலின் வாதம்
தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை அரசு வழக்கறிஞர் பஞ்சால், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தடயவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, பாலம் புதிய தளத்தின் எடையைத் தாங்க முடியாமல் அதன் கேபிள்கள் உடைந்ததாக அவர் கூறினார்.
குஜராத் பாலம் விபத்து
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சால், “தடவியல் அறிக்கையை மூடிய உறையில் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்த போதிலும், பாலத்தின் கேபிள்கள் மாற்றப்படவில்லை. தரைத்தளம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என்று ரிமாண்ட் விண்ணப்பத்தில் எழுதப்பட்டுள்ளது” என்கிறார்.
“தளம் நான்கு அடுக்கு அலுமினியத் தகடுகளால் ஆனது. அதன் எடை மிகவும் அதிகரித்து, பாலத்தை தாங்கியிருந்த கேபிள் அதன் எடையைத் தாங்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்தது.”
மராமத்து பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் அதைச் செய்யத் தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்த விவரம்
மோர்பியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொங்கு பாலத்தின் பழுது மற்றும் பராமரிப்பு, மோர்பியின் தொழில்துறை நிறுவனமான ஓரேவா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தக் குழு அஜந்தா பிராண்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்கிறது. இது தவிர, பல்புகள், விளக்குகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களையும் தயாரிக்கிறது.
இந்த நான்கு பக்க ஒப்பந்தத்தில் டிக்கெட் கட்டண விவரங்கள், பாலத்தின் பராமரிப்பு விதிமுறைகள் குறித்துத் தெளிவாக இல்லை. இந்த ஒப்பந்தத்தின் நகல் பிபிசியிடம் உள்ளது.
ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பினரும் “ஓ&எம் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு), பாதுகாப்பு, தூய்மை, பராமரிப்பு, கட்டண வசூல், பணியாளர்கள் ஆகிய அம்சங்களை நிர்வகிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.”
ஒப்பந்தத்தில், மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி, ஒரேவா குழு மூலம் பாலத்திற்கான நுழைவுக் கட்டணம், 2027-28ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு எவ்வளவு உயர்த்தப்படும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது 15 ரூபாயாக உள்ள டிக்கெட் கட்டணம் 2027-28ம் ஆண்டுக்குள் 25 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. 2027-28ம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் நுழைவு கட்டணம் இரண்டு ரூபாய் அதிகரிக்கும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.
தொங்கு பாலம் என்றால் என்ன?
கேபிள் கம்பிகளில் தொங்கும் இத்தகைய பாலங்கள் ஸ்விங் பாலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பொறியியல் மொழியில், அவை தொங்கு பாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இத்தகைய பாலங்கள் கீழே எந்தத் தளத்தையும் ஆதாரமாகக் கொள்ளாமல், கேபிள்களின் உதவியுடன் இருபுறமும் வலுவான தளத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.
“இந்த வகை கேபிள் பாலத்தில், இருபுறமும் இரண்டு வலுவான ஆதரவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜ்கோட்டைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் சுரேஷ் சங்வி, “தொங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கேபிள் அல்லது கயிற்றின் சுமந்து செல்லும் திறனும் சோதிக்கப்படுகிறது.
அத்தகைய கட்டுமானத்தின் தரம் ஒவ்வொரு கட்டத்திலும் சரிபார்க்கப்படுகிறது.” என்கிறார். முழு கட்டுமானமும் இந்திய தரநிலைகளின் பணியகத்தின்படியே முடிக்கப்பட்டுள்ளது என்று ஜெயந்த்பாய் லக்லானி தெரிவிக்கிறார்.
அதிக அளவிலான மக்கள் செல்லக்கூடிய மற்றும் விபத்து ஏற்படக்கூடிய இடங்களை நிர்மாணிப்பதில் விசேட கவனம் செலுத்தப்படுகிறது.
ரிஷிகேஷின் லக்ஷ்மண் ஜூலா மற்றும் ராம்ஜுலா பாலங்கள் பிரபலமான தொங்கு பாலங்களாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பவன் சிங் அதுல்