• பகலில் மின்தகடுகள் வழங்கும் மின்சக்தி வீடுகளில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

• உற்பத்தியை விட நுகர்வு குறைவாக இருந்தால் அதற்குரிய பணம் வழங்கப்படுகிறது

மோதிரா: இந்தியாவின் முதல் சோலார் கிராமம் என்ற பெருமையை குஜராத் மாநிலம் மோதிரா கிராமம் பெற்றிருக்கிறது.

வீட்டின் கூரைகளெங்கும் சூரிய தகடுகளாக காட்சியக்கும் இந்த கிராமத்தின் மக்கள், முழுக்க முழுக்க சூரிய மின்சக்தியை 24 மணி நேரமும் பயன்படுத்துகின்றனர்.

சூரிய கோவிலுக்கு புகழ்பெற்ற இந்த கிராமம் இப்போது சூரிய மின்சக்திக்கும் உதாரணமாகியிருக்கிறது.

மண்பாண்டத் தொழில், தையல் தொழில் மற்றும் விவசாயம் செய்யும் 6500 குடும்பங்கள் கொண்ட இந்த கிராமத்தில் எல்லாம் இயந்திரத்தில் இயங்குகிறது.

இதற்கு சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. பகலில் மின்தகடுகள் வழங்கும் மின்சக்தி வீடுகளில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் இரவில் பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.

அங்கு மண்பாண்டத் தொழில் செய்யும் பிரஜாபதியிடம் பேசியபோது, சூரியசக்தி தங்களை மிளிரச் செய்வதாக தெரிவித்தார்.

சூரிய மின்சக்தியால் வேலைகள் எல்லாம் இப்போது சீக்கிரமாக முடிந்துவிடுவதாக கூறினார், கையால் சக்கரங்களை சுற்றியபோது கடினமாக இருந்ததாகவும், சூரிய மின்சக்தியால் சக்கரம் சுழல்வதால் அதிக மண்பாண்டங்களை தயாரிக்க முடிவதாகவும் கூறினார்.

கிராமங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின்மீட்டர்களை கணக்கிட்டுக்கொண்டிருக்கும் ஸ்வேதா பட்டேல் பேசுகையில் மாற்றங்களை விளக்கினார்.

வீடு வீடாக சென்று மீட்டர்களை கணக்கிட்டு, மின்சார உற்பத்தியை விட நுகர்வு அதிகமாக இருந்தால் அதற்குரிய கட்டணத்தை கட்டச் சொல்கிறோம்.

மாறாக உற்பத்தியை விட நுகர்வு குறைவாக இருந்தால் அதற்குரிய பணம் அவர்களது கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படுகிறது என்றார் ஸ்வேதா.

அதாவது, அதிகப்படியான மின்சாரத்தை அரசாங்கம் வாங்குகிறது. அங்குள்ள சூரிய கோவிலில் பாரம்பரிய விளக்குகள் மற்றும் வரலாற்றை விளக்கும் 3டி புரொஜெக்சன் காட்சிப்படுத்தலுக்கும் சூரிய மின்சக்தியே பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா 2030ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் மின்சாரத்தை சூரிய மின்சக்தி, காற்றாலை, நீர்மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நோக்கத்தை அடைய மத்திய அரசும் குஜராத் அரசும் 80.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மோதிரா கிராமத்தில் இந்த சூரிய மின்சக்தி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version