“என் தம்பி சிறையில் இருப்பதை என்னால் தாங்க முடியவில்லை. என்னையும் உள்ளே தள்ளுங்கள் பிக் பாஸ்” என்று வீர வசனம் பேசி அமுதவாணன் ஜாலியாக சீன் போட்ட நேரம், கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும்.
ஒரு முரட்டுத்தனமான குதிரையை அடக்கும் மாஸ்டர் போல, அசிமையும் தனலக்ஷ்மியையும் சரியான பாதையில் திருப்பும் நல்லாசிரியனாக இந்த எபிசோடில் கமல் செயல்பட்டது சிறப்பு.
குறிப்பாக அசிமைக் கையாண்ட விதம் மிகவும் நன்று. “என் பேச்சைக் கேட்டு இப்பத்தான் முதல்படில ஏறியிருக்கார்.
வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S6 05-11-2022 Day 27 Episode 28 Vijay Tv Show
அதைப் பாராட்டலைன்னா கீழே இறங்கிடுவார். மாறுவதுதான் அவருக்கும் எனக்கும் பெருமை” என்று கமல் சொன்னது சிறந்த உளவியல் அணுகுமுறை.
அசிமிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கணிசமான அளவில் மாற்றம் இல்லை. நாள் 23-ன் இரவில் அசிமிற்கும் தனலக்ஷ்மிக்கும் நடந்த வாக்குவாதத்தைக் கவனித்தால் தெரியும்.
ஒருவருக்கொருவர் சளைக்காமல் மற்றவர் மீது பாய்ந்து கொண்டே இருந்தார்கள். வயதில் மூத்த நபராக அசிமை கமல் பொறுமையுடன் கையாள்கிறார். ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்கிற அசிமும் அதே நிதானத்தை தனலக்ஷ்மியிடம் காண்பித்தால் இன்னமும் அதிக மதிப்பைப் பெறுவார்.
‘இக்கு’ வைத்துப் பாராட்டாமல் கமலும் மனம் திறந்து பாராட்டும் சூழல் வருங்காலத்தில் ஏற்படும்.
நாள் 27-ல் நடந்தது என்ன?
கண்ணுக்கு இதமான டெனிம் சட்டையில் நேர்த்தியான ஹேர்ஸ்டைலில் வந்தார் கமல். ஆனால் பேண்ட்தான் ஒட்டு போட்டு ரிப்பேர் செய்தது மாதிரி இருந்தது. ஃபேஷன் உலகில் இதற்கு நிச்சயம் ஏதாவது பெயர் வைத்திருப்பார்கள். எதற்கு வம்பு?!
“ஒரு பக்கம் பொலிட்டிக்கலி கரெக்ட்டா பேசற ஆளு… இன்னொரு பக்கம் மரியாதையில்லாம பேசற ஆளு… இப்ப ரெண்டு பேரும் நெருங்க ஆரம்பிச்சிட்டாங்க..
. யோசிச்சு ஸ்கீரீன் பிளே எழுதினா கூட இப்படி அமையாது. இங்க இருபது பேர் அதை எழுதிட்டு இருக்காங்க. கண்ணியத்தை விடவும் கணிதம் அதிகம் இருக்கு” என்கிற பொழிப்புரையுடன் அசிம் – விக்ரமன் நெருக்கத்தைச் சூசகமாகக் குறிப்பிட்ட கமல், வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காண்பித்தார்.
ராமும் விக்ரமனும் சிறைக்குள் நுழைய முதலில் ஓடிச் சென்று கர்ச்சீப் போட்டு கட்டிலில் இடம் பிடித்தார் ராம். (மனுஷன் வாழறான்யா!). ராமின் மெத்தனத்தை அமுதவாணன் அவ்வப்போது கிண்டலடிப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தாலும் சமயங்களில் எல்லை தாண்டி விடுகிறது.
‘போ… சாப்பிடு… தூங்கு’ என்று வெறுப்பேற்றுகிறார். “எல்லா வாரமும் ஜெயிலுக்கு ராம்தானா?” என்று தனலக்ஷ்மியும் கூட சோ்ந்து கொள்ள, அப்போது மட்டும் கோபம் கொண்ட ராம், “நான் செம காண்டுல இருக்கேன்” என்று எரிச்சலைக் காட்டினார்.
“என் தம்பி சிறையில் இருப்பதை என்னால் தாங்க முடியவில்லை. என்னையும் உள்ளே தள்ளுங்கள் பிக் பாஸ்” என்று வீர வசனம் பேசி அமுதவாணன் ஜாலியாக சீன் போட்ட நேரம், கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும்.
“அப்படியே ஆகட்டும் யுவர்ஆனர்” என்று சொன்ன பிக் பாஸ், அமுதவாணனையும் உள்ளே தள்ளி கதவைப் பூட்டினார். ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும். ‘மவனே… மாட்னியா! என்னா வாயி…’ என்பது போல் மற்றவர்கள் கிண்டலடித்தார்கள்.
சிறிது நேரம் கழித்து மற்ற இருவரையும் ரிலீஸ் செய்தாலும் ‘அஞ்சா நெஞ்சன்’ அமுதவாணனை மட்டும் சிறையிலேயே வைத்து அழகு பார்த்தார் பிக் பாஸ்.
‘தல தோனி மாதிரி செயல்பட்ட கேப்டன் மணிகண்டன்’
அகம் டிவி வழியே உள்ளே வந்த கமல், தன்னைப் போலவே உடையணிந்த ராபர்ட்டிடம் ‘சேம் பின்ச்’ சொல்லி விட்டு “மணிகண்டனின் கேப்டன்சி எப்படி இருந்தது?” என்று விசாரிக்க ‘தல தோனி மாதிரி கூலா ஹாண்டில் பண்ணாரு’ என்று கோரஸாகப் பாராட்டினார்கள். ‘பெண்கள் நாட்டின் கண்கள் மாதிரி பார்த்துக்கிட்டாரு’ என்று குயின்சி வித்தியாசமாகப் பாராட்ட “அப்போ ஆண்கள் என்ன சொல்றாங்க?” என்று கமல் சொன்ன டைமிங் நல்ல குறும்பு.
‘தலைமைத் தொண்டன், அன்புக்கட்டளை’ என்றெல்லாம் வித்தியாசமான வார்த்தைகளைப் போட்டு மணியைப் பாராட்டினார் அசிம்.
“கிச்சன் பக்கமே வந்து கேப்டன் விசாரிக்கலை” என்று ரச்சிதா ஜாலியாக கம்ப்ளெண்ட் சொல்ல, “அந்தப் பக்கம் யாருமே வர விடாம ராபர்ட் மாஸ்டர் துரத்தினாரு” என்று யாரோ கொளுத்திப் போட நகைச்சுவை புஸ்வாணங்கள் சபையில் ஒளிர்ந்தன.
விக்ரமன் மட்டும் “பாரபட்சங்கள், முன்முடிவுகள் இல்லாமல் நடந்திருக்கலாம். மத்தபடி ஓகே” என்று இக்கு வைத்துப் பாராட்டினார். ராபர்ட்டின் மாடுலேஷன் நடிகர் ஜனகராஜை நினைவுபடுத்தியது. இதை மிகச் சரியாக கமலும் குறிப்பிட்டார். (ஜனகராஜ்… ஹ… என்னவொரு நடிகன்!).
அடுத்த தலைப்பிற்கு நகர்ந்த கமல் “நோகாம நுங்கு சாப்பிடறதை நினைவுப்படுத்தறதுக்காக நுங்கு கொடுத்து அனுப்பிச்சா.
நீங்க அதைக் கூட இன்னமும் சாப்பிடாம இருக்கீங்களே?” என்று கதிரவனை நாசூக்காகக் கலாய்த்தது அருமை. ‘தானே சென்று சிறையில் அமர்ந்த தானைத் தலைவன் அமுதவாணனை’ நமட்டுச் சிரிப்புடன் விசாரிக்க ஆரம்பித்தார் கமல்.
“சிக்கன் கேட்டா கூட பிக் பாஸ் கமுக்கமா இருப்பாரு சார்… டக்குன்னு ஜெயிலுக்கு அனுப்பிடுவாருன்னு எதிர்பார்க்கலை. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ன்றதை இன்னிக்குத்தான் புரிஞ்சுக்கிட்டேன்” என்று அமுதவாணன் சொன்ன விளக்கத்தை ரசித்துச் சிரித்தார் கமல்.
“என்ன ராம்… எப்படி இருக்கீங்க?” என்று வீட்டின் வெளியிலேயே வாழும் ராமைப் பற்றி கமல் விசாரிக்க “என்னைத்தான் ஜெயிலுக்கு அனுப்புவாங்கன்னு தெரியும். அதான் நானே போயிட்டேன்” என்று சுயவாக்குமூலம் தந்த ராமைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.
இன்னமும் கூட நேரமிருக்கிறது. அடுத்த வாரத்திலாவது அவர் செயலாக ஏதாவது செய்தால் மேலும் சில வாரங்கள் வீட்டிற்குள் இருக்க முடியும். “அவருக்கேத்த மாதிரி டிரஸ் தைச்சிட்டாங்க சார். அதை வேஸ்ட் பண்ண பிக் பாஸ் விரும்பலை’ என்கிற மாதிரி அமுதவாணன் அடித்த கமென்ட் சிரிப்பை வரவழைத்தது.
“படுக்கறதுக்கு இடம் இருக்கில்லை?” என்று கமல் நையாண்டியாக கேட்டது, வாழைப்பழ ஊசி. “கிராமங்களில் இருக்கிற ஹோட்டல்களில் நாம்தான் இலையை எடுத்துப் போடணும்.
ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி இவ்வளவு பிளாஸ்டிக் இல்லை. போய் அடைச்சுக்கும். குப்பையைக் கவனமாக கையாளுங்க” என்று அறிவுறுத்தியது பிக் பாஸ் வீட்டிற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டிற்கும் பொருந்தும்.
‘டிஆர்பி ரேட்டிங் உயர யார் காரணம்..?’
அடுத்ததாக ‘டிவி சேனல் டாஸ்க்’ விவகாரத்திற்கு நகர்ந்த கமல், ‘நிகழ்ச்சிகள் சுவாரஸ்யமாக இருந்தன. டிஆர்பி அதிகமாக ஆனதற்கு காரணமான நபர், குறைவாகப் போனதற்கு காரணமான நபர்… யார், யார்ன்னு சொல்லுங்க” என்று கேட்டார். ‘சிறப்பாகச் செயல்பட்ட நபர்’ என்கிற பிரிவில் அமுதவாணனை பலரும் சுட்டிக் காட்டினார்கள்.
தனது அணியை அத்தனை திறமையாக வழிநடத்திச் சென்றாராம். ஆனால் மகேஸ்வரியின் அணியில் ஒரே குளறுபடி. அசிம் – தனலக்ஷ்மி சண்டை, அசிம் சொன்னதை மகேஸ்வரி, மைனா கேட்காதது, அசிமின் முன்கோபம் என்று பல காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டன. ‘முதல்ல ஒரு பாயின்டை கொடுத்துட்டு பின்னாடி அதைக் குறைச்சிட்டாரு’ என்று சொல்லி விக்ரமன் மீதும் சில புகார்கள் எழுந்தன.
சுமாரான போட்டியாளர் என்கிற வகையில் நிவாவை சுட்டிக் காட்டியும் சில கைகள் உயர்ந்தன. ‘Blind’ என்கிற வார்த்தையை உபயோகித்த ஷெரினாவிடம் ‘Visually Challenged’—ன்னு சொல்லுங்க என்று கமல் திருத்தியது நல்ல குறிப்பு.
ரெட் மார்க் அதிகம் வாங்கிய அசிம், விக்ரமன், நிவா ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. “என்னால டிஆர்பி டவுன் ஆகலை. ஆக்சுவலி எங்க டீம்தான் வெற்றி பெற்றது. பாயின்ட் மாத்தினது பிழைதான்.
ஆனா அதை பிக் பாஸ் கிட்ட அதிகாரபூர்வமாக அறிவிக்கலை.. .சில சமயம் பாயின்ட்டுகளை உயர்த்திக் கொடுத்திருக்கோம். அப்ப பிரச்னை வரலை. குறைச்சப்பதான் குறை சொல்றாங்க. சக நீதிபதியான ரச்சிதாவும் எனக்கு அதிகம் சப்போர்ட் பண்ணலை” என்று விக்ரமன் அளித்த விளக்கம் நியாயமாகத்தான் பட்டது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க வந்த மைனா “அசிம் ஹர்ட் பண்ற மாதிரி நிறைய பேசினாரு. டீம் டெடிகேஷன் அவர் கிட்ட இல்லை” என்று சில புகார்களை அடுக்கினார். “நான் எழுதித் தந்ததையெல்லாம் மாத்திட்டாங்க.
மகேஸ்வரியும் மைனாவும் பாரபட்சமா செயல்பட்டாங்க. நட்பு வட்டாரம் சொல்றதை மட்டுமே கேட்டாங்க” என்று பந்தை அந்தப் பக்கமாக தள்ளிவிட்டார் அசிம். “நான் அதிகம் தெரியலையோ… இந்தக் குற்றச்சாட்டுகளில் ஐம்பது சதவிகிதத்தை மட்டுமே நான் எடுத்துப்பேன்” என்று கான்வென்ட் தமிழில் பேசி அமர்ந்தார் நிவா.
மைனா, மணிகண்டன், விக்ரமனுக்குக் கிடைத்த பாராட்டு
“ஓகே… இப்ப என் கருத்தைச் சொல்றேன். மைனா – மணிகண்டனின் நடிப்பு சிறப்பாக இருந்தது. விக்ரமன் டிராமாவும் நல்லா இருந்தது. இருக்கிற குறைவான வசதிகளை வைத்துக் கொண்டு ஒரு நல்ல செய்தியைச் சொன்னாங்க… அதனால விக்ரமன் SAVED” என்று கமல் சொல்ல “நன்றிண்ணே… நன்றி மக்களே” என்று கையெடுத்து கும்பிட்டார் விக்ரமன்.
ஒரு பிரேக் விட்டுத் திரும்பிய கமல் “மைனா… உங்க டீம்ல ஒரே குளறுபடி. சர்ச்சைகளின் ஹீரோவாக அசிம் இருந்தார். எங்க சுத்தினாலும் அவர் பேருதான் வந்து நிக்குது. அவர்தான் மையப்புள்ளின்ற மாதிரி தெரியுது.
நீங்க என்ன சொல்றீங்க?” என்று விசாரணை செய்ய “முத்து இருக்கும் போது அவர் மத்த டீமிற்கு ஹெல்ப் பண்ணது பிரச்னையாச்சு. டீம் ஒற்றுமை முக்கியம்ன்னு சொன்னாங்க. இப்ப அசிமே அதை ஃபாலோ பண்ணலை. அசிமிற்கும் தனலக்ஷ்மிக்கும் ஏதாச்சும் சண்டை வந்துட்டே இருந்தது” என்று விளக்கத்தைத் தொடர்ந்த மைனா, அதற்கான உதாரணத்தைச் சொல்லும் போது தொடர முடியாமல் திகைத்து நின்று விட்டார். “பாத்தீங்களா… உங்களுக்கே குழப்பம்” என்று இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார் அசிம்.
“குணாதிசயங்கள் மாற்றம் டாஸ்க்ல விக்ரமன் வேணாம். ஆயிஷாவை எடுத்துக்கலாம்-ன்னு நான் சொன்னேன். அசிம் அதை மறுத்தாரு. அதுல ஆரம்பிச்சது பிரச்னை” என்பது தனலக்ஷ்மியின் விளக்கம். “பிரேக்கிங் நியூஸ்-ன்னு பெரிசா எழுதிட்டு வந்தாரு… கொஞ்சம் குறைச்சுக் கொடுங்கன்னு கேட்டோம். கோபிச்சுக்கிட்டு போயிட்டாரு” என்றார் மகேஸ்வரி.
‘அசிமைப் பாராட்டி அவரை நெகிழ வைத்த கமல்’
“நல்ல எழுத்தாளர்கள் அப்படித்தான் கோச்சுக்கிட்டு போயிடுவாங்க” என்று கமல் சொன்ன போது அசிமிற்கு ஒரு கணம் தலையே சுற்றியிருக்கும். ஆனந்த அதிர்ச்சியில் திகைத்துப் போயிருப்பார். “உனக்கு ஜட்ஜ் பண்ணவே தெரியலை…
ஜீரோன்னு சொன்னாரு” என்று மகேஸ்வரி தன் புகாரை இன்னமும் அடுக்க “உங்க கிட்டயும் சொன்னாரா?” என்று அடுத்த வாக்கியத்திலேயே அசிமின் காலை ஜாலியாக வாரினார் கமல். “என்னையும் அப்படித்தான் சொன்னார் சார். அடங்கிட்டு படு” என்று தனலக்ஷ்மியும் புகாரில் இணைய “நானா… என்னையா சொல்றீங்க?” என்பது போல் திகைத்தார் அசிம்.
“அசிம் – தனம் மோதல் பத்தி மத்தவங்க என்ன நெனக்கறீங்க?” என்று தன் விசாரணையை இன்னமும் பரவலாக்கினார் கமல். அசிமிற்கு ஆதரவாகத்தான் ஏடிகே சாட்சியம் சொல்வார் என்பது வெளிப்படை. “அவரு எழுதின ஸ்கிரிப்ட் நல்லாயிருந்தது. மைனா இன்னமும் சாஃப்ட்டா ஹாண்டில் செய்திருக்கலாம்” என்பது ஏடிகேவின் விளக்கம். “டீம் டிஸ்கஷன்னா அப்படித்தான் இருக்கும். பொறுமையா இரு–ன்னு தனலக்ஷ்மி கிட்ட சொல்லிப் பார்த்தேன். எழுந்து போயிட்டாங்க” என்பது கதிரவனின் சாட்சியம்.
அசிம் தன் விளக்கத்தை அளிக்க “தனலக்ஷ்மி வீட்டிற்கு வெளில மழைல ஆட்டம் போட்டுட்டு இருந்தாங்க, தெரியுமா? ‘ஆளவந்தான்’ கிளைமாக்ஸ் மாதிரி. உங்களுக்குத் தெரியுமா” என்று கமல் நையாண்டியாகச் சொன்னதும் தனலக்ஷ்மி வாய் விட்டு சிரிக்க “இந்தச் சம்பவம் எப்ப நடந்தது?” என்பது மாதிரி அசிம் விழித்தார்.
“நான் ஜர்னலிஸ்ட்டா வேலை பார்த்திருக்கேன். மத்த செய்திகள் நடுவுல ‘பிரேக்கிங் நியூஸ்’ வந்தாதான் நல்லாயிருக்கும்ன்னு சொன்னேன். ஆனா மகேஸ்வரி ஏத்துக்கலை” என்று தன் தரப்பு நியாயத்தை அசிம் சொல்லி அமர்ந்தார்.
“விஷயம் தெரிஞ்சவங்க சொல்லும் போது தலைமைப் பொறுப்பிலிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று அசிமிற்கு சாதகமாக அடுத்த பந்தைப் போட்ட கமல் “எழுத்து வேற… திரைக்கதை வேற… எனக்கு பிரேக்கிங் நியூஸ் பத்தி தெரியாது. ஆனா ஸ்கிரீன்பிளே பத்தி தெரியும். ஷேக்ஸ்பியரே இன்னிக்கு வந்தா கூட திரைக்கதை வகுப்பில் அமர வேண்டியிருக்கும். இரண்டிற்குமான கருவிகள் வேற வேற” என்று கமல் எடுத்த வகுப்பு சிறப்பு.
“உங்க பையன் பார்த்துட்டு இருப்பான்னு அசிம் மனதில் தைக்கிற மாதிரி ‘சுருக்’குன்னு போன வாரம் சொன்னேன். அவர் மனதில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான முயற்சி.
அது வேலை செஞ்சிருக்கு” என்ற கமல் ‘சள்ளை’ என்கிற வார்த்தைக்கு விளக்கம் சொல்வதன் மூலம் “பல தூண்டில்களைப் போட்டாலும் அசிம் அதில் மாட்டாமல் தன் வேலையை மட்டும் பார்த்துட்டு போனாரு. கண்ணியக்குறைவா எதுவும் பேசலை” என்றெல்லாம் அசிமிற்கு நற்சான்றிதழ்களை வழங்கிக் கொண்டே போனார்.
“நான் சொல்லிட்டேன்றதுக்காக அசிம் சோர்ந்து உட்கார்ந்துடலை. நின்னு விளையாடினாரு… அந்த மாற்றம் எனக்கு மட்டுமில்லை, அசிமிற்கும் பெருமை. கோபம் குறைஞ்சது. வீரியம் குறையல… மத்தவங்கதான் அசிமை ஒரு மாதிரி ‘போர்ட்ரே’ பண்ண டிரை பண்றாங்க–ன்ற மாதிரி எனக்குத் தோணுது” என்று கடந்த வாரத்தில் ஆயிஷா சொன்ன வார்த்தையையும் கமல் போகிற போக்கில் குத்தி விட்டுச் செல்ல, ஆயிஷா அடிபட்ட முகத்துடன் புன்னகைத்தார்.
“நீங்கதான் இங்க உங்களை போர்ட்ரே பண்ணிக்கறீங்க. நாங்க வெளில இருந்து அதை உணர்கிறோம்” என்று இரண்டிற்குமான வித்தியாசத்தை கமல் சொன்னதும் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னார் அசிம்.
“எந்த கமெண்ட்டிற்கும் நீங்களும் சோர்ந்து போயிடாதீங்க. உற்சாகமா ஆடுங்க” என்று ஆயிஷாவிற்கும் ‘ஹின்ட்’ தந்தார் கமல். இந்த உபதேசத்தின் இறுதியில் அசிம் காப்பாற்றப்பட்ட செய்தியும் வந்தது.
‘தார்மீகமான கோபத்தில் கண்ணீர் வராது’ – கமலின் ‘நச்’ வாக்கியம்
அடுத்ததாக தனலக்ஷ்மியின் பக்கம் வண்டியை நகர்த்திய கமல் “மத்தவங்களால அணுகப்பட முடியாத பொஷிஷன்ல அவங்க இருக்காங்களா?” என்று விசாரணையை ஆரம்பித்தார். “ஏன் தனலக்ஷ்மியைப் பார்த்து பயப்படறீங்க?” என்று அசிம் கேட்டதன் இன்னொரு நாகரிகமான வடிவம் இது. “தனலக்ஷ்மியும் அசிமும் நார்மலா பேசறதுதான் நமக்கு இப்படித் தெரியுதோ?” என்று கமல் அடித்த கமென்ட் சிறப்பு.
“எனக்குக் கோபம் வந்தா கண்ணீர் வந்துடுது” என்று சொன்ன தனலக்ஷ்மியிடம் “தார்மீகமான கோபத்துல கண்ணீர் வராது. ரத்தம்தான் வரும். ‘நான் தள்ளி விடலை’ன்னு போன வாரத்துல உறுதியா சொன்னீங்க” என்று சுட்டிக் காட்டிய கமல்
“நீங்க ரெண்டு பேரும் ஆரம்பிக்கற சீன் முடியவே மாட்டேங்குது. ‘கட்’ சொல்ற தைரியம் இருக்கிற டைரக்டர் அங்க யாரும் இல்ல” என்று சினிமா சாயலில் சொன்ன உதாரணம் அருமை. “போன வாரம் அசிம் இருந்த இடத்துல, இந்த வாரம் நீங்க கூடு பாய்ஞ்சு இருக்கீங்க… யாருக்குத் தெரியும், இப்ப அசிமைப் பாராட்டினது மாதிரி அடுத்த வாரம் உங்களையும் பாராட்ட வேண்டி வரலாம்” என்று தனலக்ஷ்மிக்கு உபதேசத்தோடு ஆறுதலையும் அளித்தார்.
‘அய்யா சாமி. இவரு நம்ம பக்கம் வராம இருக்கணுமே’ என்று இருக்கிற கடவுள்களையெல்லாம் கும்பிட்டுக் கொண்டு இருந்த பாவத்திலிருந்தார் ஜனனி. ஆனால் அது நிறைவேறவில்லை.
ஜனனி – குயின்சி விவகாரத்திற்கு அடுத்ததாக வந்த கமல் “ரெண்டு பேரும் மாத்தி மாத்தி மன்னிப்பு கேட்டீங்க… அத்தோடு ஏன் முடிச்சிக்க தெரியலை. சுத்தி இருந்தவங்களும் இதைக் கிளறி விட்டாங்க” என்று இந்தச் சர்ச்சையிலிருந்த ஆதாரமான பிசிரைச் சுட்டிக் காட்டியவுடன் இருவருமே வெட்கத்தில் சிரித்தார்கள்.
ஆனால் ஜனனிக்கு உபதேசம் என்கிற பெயரில் கமல் சொன்னதன் சாரம் இதுதான். “பிக் பாஸ் வீட்டில் இருக்கிற பொருள்களுக்கு டேமேஜ் செய்யாதீங்க” என்பதுதான். அதற்கு அடையாளமாக புது கப்பை உள்ளே அனுப்பினார் கமல். “இனிமே இப்படிக் கோபப்பட மாட்டேன்” என்று அமுதவாணனிடம் ஆத்மார்த்தமாக ஜனனி சொல்லிக் கொண்டிருந்ததோடு எபிசோட் நிறைந்தது.
வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S6 05-11-2022 Day 27 Episode 28 Vijay Tv Show