வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S6 08-11-2022 Day 30 Episode 31 Vijay Tv Show
‘புறணி பேசியே காலம் கடத்தும் நபர் யார்?’ என்பது அவருக்கான கேள்வி. ‘தனலஷ்மி’ என்கிற பதிலைச் சொல்லி கெத்தாக வெளியே வந்தார். ஆனால் மக்கள் கலவையாக தேர்வு செய்து வைத்திருந்ததால் கதிரவனும் அவுட்
இந்த வார டாஸ்க் என்று ‘இனிப்புத் தொழிற்சாலையை’ ஆரம்பித்தார் பிக் பாஸ். ஆனால் அதன் விளைவுகள் அத்தனையொன்றும் இனிப்பாக இல்லை. ஒரே கசப்பு. ஒரே அடிதடி. அதிக சத்தம்.
கடந்த வாரத்தைப் போல சோர்வாக அமர்ந்திருந்தாலே நன்றாக இருந்திருக்குமோ என்று எண்ண வைத்து விட்டார் ஆயிஷா. அவரது மீள்வருகையில் மீண்டும் ஹைடெஸிபல் சத்தம்.
வழக்கம் போல் அசிம், மகேஸ்வரி, விக்ரமன் ஆகியோரும் உரத்த குரலில் வாக்கு வாதம் செய்ய, போதாக்குறைக்கு இப்போது ஏடிகேவும் கத்த ஆரம்பித்து விட்டார். ‘பேடா’ செய்கிறேன் போ்வழி என்று ஒருவரையொருவர் ‘போடா’ என்று சொல்லாத குறையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நாள் 30-ல் நடந்தது என்ன?
தொழிற்புரட்சி, பணத்தின் முக்கியத்துவம், உற்பத்தி, உபரி என்று கார்ல்மார்க்ஸ் ரேஞ்சுக்கு பிக் பாஸ் டீம் முன்னுரை எழுதி அனுப்பியிருந்தது. கடைசியில் பார்த்தால் ‘ஸ்வீட் ஃபாக்டரி டாஸ்க்’. வீடு இரண்டு தொழிற்சாலைகளாக பிரிந்து இயங்க வேண்டுமாம். பல உத்திகளைக் கடைப்பிடித்து உற்பத்தியை அதிகம் செய்யும் அணி வெற்றி பெறும்.
பிக் பாஸ் ஹவுஸ்மேட்
ஒரு அணியில் உள்ள ஏழு நபர்களில் இருவர் தரக்கட்டுப்பாடு அதிகாரியாக இருப்பார்கள். பிறகு ஒருவர் முதலாளியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமாம். ஒரு மேனேஜரும் இருப்பாராம்.
இரண்டு பேர் இனிப்பு தயார் செய்யும் தொழிலாளிகள். ஒருவர் டெலிவரி ஆசாமி. சுழற்சி முறையில் இது மாறும். இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்படும் நான்கு நபர்களுக்கு அடுத்த வாரத்தில் ‘ஃப்ரீ ஜோன் நாமினேஷன்’ சலுகை கிடைக்கும்.
‘கல்லாப்பெட்டி பத்திரம் குமாரு’ என்கிற முக்கியமான விதியும் இருந்தது. இந்தத் தொழிற்சாலை 24 மணி நேரமும் இயங்குமாம். (யூனியன் ஆரம்பிக்கலாமா என்கிற விதி சொல்லப்படவில்லை!).
ஏழு நபர்கள் கொண்ட இரண்டு அணிகள் பிரிந்தன. ஒரு அணியின் பெயர் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ – இதில் அமுதவாணன், ஜனனி, ரச்சிதா, ஷிவின். தனலஷ்மி ஆகியோர் இருந்தார்கள்.
இன்னொரு அணியின் பெயர் ‘அடை.. தேன் அடை.’. இதில் கதிரவன், ஏடிகே, விக்ரமன், அசிம் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் இருப்பார்கள்.
வெடிகுண்டு வைக்கும் பயங்கரவாத கும்பலைப் போல ‘தட்றோம்.. தூக்கறோம்’ என்று மக்கள் ஆங்காங்கே பயங்கர சதித்திட்டங்களுடன் ‘டாஸ்க் வார்ம்அப்’ செய்து கொண்டிருந்ததைப் பார்க்க நமக்கே பயமாக இருந்தது.
நாள் 30 விடிந்தது. (அதுக்குள்ள 1 மாசம் ஆயிடுச்சு!). ‘குருவி ரொட்டி’ என்று ஏதோவொரு கச்சா முச்சா பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘லாலா கடை சாந்தி.. நான் ஆனேனே பூந்தி’ பாடலைப் போட்டிருந்தால் டாஸ்க்கிற்கு பொருத்தமாக இருந்திருக்கும். (ஐடியா இல்லாத பசங்க!).
ஜனனி, தனலஷ்மி
கன்வேயர் பெல்ட்டில் பொருட்களின் பெயர் கொண்ட அட்டைகள் வர ஆரம்பித்தன. கன்வேயர் பெல்ட் என்றாலே தள்ளுமுள்ளுவும் அடிதடி கலவரங்களும் நிச்சயம் நிகழும் என்பது பிக் பாஸ் வீட்டு வரலாறு. எனவே அதன் ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன.
எதிரணி கஷ்டப்பட்டு போராடி எடுத்து வைத்திருந்த ‘முந்திரி’ போர்டை நைசாக லவட்டிக் கொண்டு வந்து விட்டார் ஜனனி. (புள்ளப்புச்சி மாதிரி இருந்துக்கிட்டு இந்தப் பொண்ணு என்னவெல்லாம் செய்யுதுப்பா!). யார்… யார்.. என்ன பொருள் கொண்ட அட்டையை எடுத்திருக்கிறார்கள் என்பதை காமிராவில் காட்டினால், பிக் பாஸ் சம்பந்தப்பட்ட பொருட்களை வழங்குவார்.
அடுத்த முறை பஸ்ஸர் அடித்த போது இரு அணிகளும் போராடியதில் ‘ஏலக்காய்’ போட்ட அட்டையைப் பிய்த்து தனித்தனியாக எடுத்துக் கொண்டார்கள். ‘அட்டையோட முக்கால் பாகம் எங்களுக்குத்தான் வந்திருக்கு” என்று இதில் ஷிவின் லாஜிக் பேசியது காமெடி.
இவர்கள் செய்யும் இனிப்பு நன்றாக வருமோ, இல்லையோ, அணியின் பெயர்கள் பலகையில் எழுதப்பட்டிருந்த விதம் அத்தனை இனிப்பாக இல்லை. ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’ என்று எழுதி வைத்திருந்தார்கள்.
பெரிய ஆசை போலிருக்கிறது. இன்னொரு அணி ‘அட.. தேன் அடை’ என்று எழுதி வைத்திருந்தது. அடுத்த சுற்றில் பொருட்களை எடுப்பதில் அசிமிற்கும் அமுதவாணனுக்கும் இடையில் கடும் போட்டி நடந்தது.
ஸ்டிரிக்ட் ஆஃபிசராக நடந்து கொண்ட ஆயிஷா
“ஓகே.. உங்களுக்கு கிடைச்ச பொருட்களை வெச்சு ஸ்வீட் செய்ய ஆரம்பியுங்க.. எந்த நேரமும் ஆர்டர் வரலாம்” என்று அறிவித்தார் பிக் பாஸ். சாப்பாட்டிற்கான பெல் அடிக்க ‘இதை விட்டா நேரம் கிடைக்காது. உடனே போய் சாப்பிடுங்க” என்று உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார், க்வாலிட்டி கண்ட்ரோலர் ஆயிஷா.
‘ஆரஞ்சு பேடா 150, பச்சை பேடா 150’… என்று ஆர்டர்கள் வரத் துவங்கின. “150 பீஸா.. 150 கிராமா?” என்று கேட்டு பிக் பாஸை டென்ஷன் ஆக்கினார்கள். கமல் பிறந்த நாளை முன்னிட்டு இந்த இனிப்புகள் குழந்தைகளுக்கு அனுப்பப்படுமாம். (பாவம்,
அந்தக் குழந்தைகள்!). ‘இருபது நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யப்பட வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்த பிக் பாஸ், அதன் டைமரை டிவியில் காட்டினார்.
குவின்ஸி, மணிகண்டன்
தரக்கட்டுப்பாட்டு நேரம். ராமும் ஆயிஷாவும் ‘ஸ்ட்டிரிக் ஆஃபிசர்கள்’ போல டெரரான முகத்துடன் நின்றிருந்தார்கள். “போண்டா.. இங்க இருக்கு.. மைசூர் எங்க இருக்கு?’ என்கிற ரேஞ்சில் ‘ஸ்வீட்ல ஏலக்கா போட்டீங்களா..
அந்த ஃபிளேவரே இல்லையே..?’ என்று ‘அடை’ அணியை கறாராக விசாரித்தார் ஆயிஷா. ‘அது வந்து.. நான் என்ன சொல்றது?’ என்கிற வடிவேலு கணக்காக திணறிய விக்ரமன் ‘ஏலக்கா அதிகமா பயன்படுத்தலை.
அலங்காரத்துக்கு வெச்சோம்’ என்று சமாளித்தார். (ஏலக்காய் என்பது வாசனைப் பொருள்தானே? எப்ப அலங்காரப் பொருளா மாறிச்சு?!).
‘நீங்க க்வுளஸ் போடாம ஸ்வீட்டை தொட்டீங்க. வியர்வை பட்டிருக்கும்.. அவுங்க தலையை சொறிஞ்சாங்க..” என்று சரமாரியான புகார்களை ஆயிஷா முன்வைக்க அசிமிற்கும் இவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம்’ என்கிற கதையாக ராம் கூட இதில் புகுந்து கத்தியதுதான் ஆச்சரியம்.
ஆயிஷாவின் அட்ராசிட்டியைப் பார்த்து “நாங்க தொழிலாளிகள். அடிமைகள் கிடையாது. சாப்பாட்டு நேரத்துல மிரட்டறீங்க.
இப்படில்லாம் அதிகாரம் பண்ண உங்களுக்கு உரிமையில்ல” என்று ஆயிஷாவை நோக்கி உரத்த குரலில் பேசினார் ஏடிகே. இதனால் மற்ற தொழிலாளிகள் குஷியாக கைத்தட்டினார்கள். (யூனியன் லீடருக்கு சரியான பாத்திரம் இவர்தான் போல!).
‘குறும்படம் போடச் சொல்லட்டுமா?’ – அமுதவாணன் அட்ராசிட்டி
‘இதெல்லாம் சரியில்ல. ரிஜக்ட்டட்’ என்று விடாமல் பந்தா காட்டிய ஆயிஷா, இறுதியில் 91 பீஸ்களை மட்டும் ‘அடை’ அணியில் இருந்து தேர்ந்தெடுத்தார்.
இதற்கு இடையில் அமுதவாணனுக்கும் விக்ரமனுக்கும் இடையில் சர்காஸ்டிக்காக ஆரம்பித்த ஓர் உரையாடல், வாக்குவாத அளவிற்குச் சென்றது.
“ராபர்ட் ரச்சிதா பேசிக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டி ‘என்ன மேட்டர்.. கேட்டுச் சொல்லுங்க..ன்னு என் கிட்ட சொல்றீங்க. நீங்களே கேட்டிருக்கலாமே?” என்று அமுதவாணன் சொல்ல “நான் அதப்பத்தி கேக்கலை.
கதிரவன் மேட்டர்” என்று விக்ரமன் மறுக்க “வீடியோ போடச் சொல்லலாமா..” என்று அமுதவாணன் சவால் விட்டுக் கொண்டிருந்தார். (ஆளாளுக்கு குறும்படம் போட இங்கென்ன ஷார்ட் பிலிம் ஃபெஸ்டிவலா நடக்கிறது?! அதை பிக் பாஸ் அல்லவா முடிவு செய்ய வேண்டும்?!).
அசிம், மகேஸ்வரி வாக்குவாதம்
அடுத்ததாக ‘கண்ணா’ அணி தரப்பரிசோதனைக்கு வந்தது. ‘கிளவுஸ் போடலை. மூக்கைச் சொறிஞ்சீங்க’ என்று இதிலும் சில புகார்கள் சொன்ன ஆயிஷா நேரடியாக முடிவுகளை நோக்கிச் செல்ல “எங்களுக்கு மட்டும் ஆயிரம் கேள்விகள் கேட்டீங்க. அவங்களை மட்டும் லைட்டா கேட்டு விட்டுட்டீங்க?” என்று ஏடிகே போர்க்குரல் எழுப்பினார்.
இறுதியில், நிராகரிக்கப்பட்ட பொருட்களைத் தவிர, ‘அடை’ அணி 91 எண்ணிக்கையும், ‘கண்ணா’ அணி 120 எண்ணிக்கையும் செய்ததாக முடிவு சொல்லப்பட்டது. அதற்கேற்ப சம்பளம் ரொக்கமாக வழங்கப்பட்டது. (பிக் பாஸ் கரன்ஸி).
‘யார் முதலாளி. யார் தொழிலாளி..ன்றதையெல்லாம் இப்ப பேசி தீர்மானியுங்க’ என்றார் பிக் பாஸ். ‘அடை’ அணியில் விக்ரமன் ஓனர். மகேஸ்வரி மேனேஜர். கதிரும் அசிமும் தொழிலாளிகள். ஏடிகே டெலிவரி பாய். ’கண்ணா’ அணியில் தனலஷ்மி ஓனர் (பார்றா!).
ஷிவின் மேனேஜர். ஜனனி, ரச்சிதா தொழிலாளிகள். அமுதவாணன் டெலிவரி பாய். இந்த முறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளாக மணிகண்டன் மற்றும் குயின்சி ஆகிய இருவரும் இருப்பார்கள்.
அசிம் – மகேஸ்வரி மோதல் – விக்ரமன் பதுங்கல்
மீண்டும் கன்வேயர் பெல்ட். எனவே மீண்டும் தள்ளுமுள்ளு.. சண்டை. இந்த முறை ‘100 பாசிப்பருப்பு லட்டிற்கான’ ஆர்டர் வந்தது. ‘கண்ணா’ அணிக்கு அதிர்ஷ்டம் அடித்து சம்பந்தப்பட்ட பொருட்கள் அவர்களுக்கு கிடைத்தன. ‘ஓகே. நம்ம கிட்ட பொருட்கள் இல்ல. இருக்கறதை வெச்சு மேனேஜ் பண்ணுவோம்’ என்று ‘அடை’ அணி முடிவு செய்தது.
தரக்கட்டுப்பாட்டு நேரம். “ஏன் ஏலக்காயை கீழே வெச்சு இடிச்சீங்க.. ஏன் கீழ போட்ட டவலை எடுத்து மேஜை துடைச்சீங்க?” என்றெல்லாம் ஸ்டிரிக்ட் ஆபிசராக மணிகண்டன் கேள்வி கேட்க “ஆமாங்கய்யா..
அப்புறம் திருத்திக்கிட்டோம்” என்று ‘தொழிலாளி’ கேரக்ட்டராகவே மாறினார் அமுதவாணன். “நீங்க பார்க்காத சமயத்துல எவ்வளோ தப்பு நடந்திருக்கலாம்” என்று விக்ரமன் ஆட்சேபக் குரல் எழுப்ப, தரக்கட்டுப்பாட்டு அணி அதை கண்டிப்பாக மறுத்தது. ‘கண்ணா’ அணியின் லட்டுகள் தோ்வாகின.
‘அட’ அணி சமாளித்து செய்து வைத்திருந்த இனிப்பை சோதித்த மணிகண்டன் “ரொம்ப திகட்டுது.. இழுத்தா வரலை” என்று புகார் கூறினார். தங்களுக்கு ஆர்டர் தொடர்பான பொருட்கள் கிடைக்காததால், இருப்பதை வைத்து இனிப்பு தயாரித்து அதை ‘காம்ப்ளிமெண்ட்’ ஆக இவர்கள் அனுப்பி வைத்து விட்டார்கள். ஆனால் அதுவும் போட்டிக்கு தகுதியுடையது என்பதை பிறகு அறிந்ததும் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.
“நான் முன்னாடியே சொன்னேன்.. அதை வெக்கலாம்ன்னு.. ஏன் நீங்க கேட்கலை” என்று மேனேஜர் மகேஸ்வரி, ஓனர் விக்ரமனை நோக்கி கேள்வி எழுப்ப “இது சோ்ந்து எடுத்த முடிவுதான்” என்று லேபர் அசிம் இடையில் வர, அசிமிற்கும் மகேஸ்வரிக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம். “ஸாரி.. அவரு சொன்னதுல நான் இன்ப்யூளயன்ஸ் ஆயிட்டேன்” என்று விக்ரமன் பின்வாங்க “ஓ.. அப்படியா சங்கதி.. அப்ப நான் ரிசைன் பண்றேன்..” என்று வழக்கம் போல் அணியிலிருந்து விலகுவதாகச் சொன்னார் அசிம். (ஓவ்!.. ரிசர்வ் பேங்க் வேலையை ரிசைன் பண்றார்ரோவ்!)
ராபர்ட்டின் ரொமான்ஸ் டார்ச்சர்?!
‘ரணகளத்தில் கிளுகிளுப்பாக’ ஒரு பக்கம் கடும் சண்டை நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தன் ரொமான்ஸில் குறியாக இருந்தார் ராபர்ட். பாட்டு பாடும் சாக்கில் ராபர்ட்டை ‘அண்ணனாக’ வைத்து பாடினார் ரச்சிதா.
‘இந்த மாதிரி அண்ணன் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கணும்’ என்று ஷிவினும் இதில் கூட்டணி சேர “ஓகே.. அண்ணன்தானே.. அப்ப கன்னத்துல முத்தா கொடு” என்று தங்கச்சி சென்டிமென்ட்டிலும் ரொமான்ஸ் தேடினார் ராபர்ட். “அவதான் என்னை அண்ணனா பார்க்கறா.. எனக்கு இன்னமும் க்ரஷ்தான்” என்று ராபர்ட் மறுபடியும் பாயைப் பிறாண்ட ‘இது என்னடா இவன் இம்சை கூடிட்டே போகுது’ என்கிற மோடிற்கு சென்று எப்படியோ சமாளித்தார் ரச்சிதா.
இரு அணிகளின் பாயிண்ட்ஸ்களும் அறிவிக்கப்பட்டு ரொக்கம் வழங்கப்பட்டது. ‘தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுங்க’ என்று பிக் பாஸ் அறிவிக்க சிலர் சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை. சிலர் வாங்கிக் கொண்டார்கள்.
ராபர்ட், ரச்சிதா
அணியில் மாற்றம் செய்ய வேண்டிய நேரம். ‘கண்ணா’ அணி சைலண்ட்டாக வேலை செய்து வயலண்ட்டாக பாயிண்ட்ஸ்களை அள்ளியது. ஆனால் ‘அடை’ அணியில் ஒரே சண்டை. எனவே ‘கண்ணா’ அணியில் இணைவதற்கு பலர் ஆர்வம் காட்டினார்கள். ‘என்னைத் தேர்ந்தெடுங்க. நான் கைவிட்டா ஸ்டோர் ரூம் வரைக்கும் போயிடும்’ என்று சொல்லி கலகலப்பூட்டினார் ராம். “இங்க அசிம்ன்னு ஒருத்தர் ரவுடியா ஃபார்ம் ஆயிட்டாராமே. கேள்விப்பட்டேன். அவர் இடத்திற்கு நான் போறேன்” என்று சொல்லி சபையை அதிர வைத்தார் ராபர்ட்.
இறுதியில் மேனேஜர் பதவிக்கு மைனாவையும் தொழிலாளராக மணிகண்டனையும் மாற்றிக் கொண்டார் விக்ரமன். இன்னொரு அணியின் ஒனரான தனலஷ்மி, ‘ஒளுங்கா வேலை செய்யணும்ப்பு’ என்கிற கண்டிஷனுடன் ராமை பணியில் இணைத்துக் கொண்டார்.
உடைந்த கூட்டணிகள், மாறிய நட்புகள்
விக்ரமனிற்கும் அசிமிற்கும் இடையில் இருந்த நட்பில் மறுபடியும் விரிசல் ஆரம்பித்திருக்கிறது. மகேஸ்வரிக்கு ஆதரவாக விக்ரமன் பேசி விட்டார் என்பதால் அசிமிற்கு கோபம்.
ஆனால் எதிரும் புதிருமாக இருந்த விக்ரமனும் மகேஸ்வரியும் இப்போது சமாதானமாகப் பேசத் துவங்கியிருக்கிறார்கள். “உங்களை அவமரியாதையா எல்லாம் பேசணும்னு நான் நெனச்சதில்ல” என்று வெள்ளைக்கொடி காட்டினார் மகேஸ்வரி.
விக்ரமன், அசிம், மகேஸ்வரி
லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை வித்தியாசமாகக் கொண்டாடத் தீர்மானித்தார் பிக் பாஸ். அதன்படி பகடையை உருட்டி ‘Truth’ அல்லது ‘dare’ ஆப்ஷன் வருவதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். முதலில் வந்த ஏடிகேவிற்கு உண்மை பேசுவதற்கான தேர்வு வந்தது.
‘இந்த வீட்டில் விதிமுறைகளை மதிக்காமல் நடந்து கொள்ளும் நபர் யார்?” என்பது கேள்வி. இதற்கு கன்ஃபெஷன் அறையில் ரகசியமாக பதில் அளிப்பார் ஏடிகே. அவர் சொல்கிற பதிலும் மற்றவர்கள் சொல்கிற பதிலும் ஒன்றாக இருந்தால் பாயிண்ட்ஸ் கிடைக்கும். ‘ஆயிஷா’ என்பதை ஏடிகே தோ்வு செய்து விட்டு வெளியே வந்து பார்த்தால் ‘ஷவின்’ என்று மக்கள் கோரஸாக பதில் சொன்னார்கள். ஆக ஏடிகேவிற்கு பாயிண்ட்ஸ் இல்லை.
இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S6 08-11-2022 Day 30 Episode 31 Vijay Tv Show