சுதந்திர இந்தியாவின் 75 வருட கால வரலாற்றில் முதல் தடவையாக 1.62 கோடி உல்லாசப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர் என்று தகவல் மற்றும் பொதுசனத் தொடர்புகள் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் (2022) ஜனவரி தொடக்கம் ஒன்பது மாதங்கள் வரையான காலப்பகுதியிலேயே இவ்வளவு தொகை உல்லாசப் பயணிகள் வருகை தந்திருக்கின்றனர் என்றும் அப்பணியகம் குறிப்பிட்டிருக்கின்றது.
இது தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ‘சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு வருடத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள வருடமாகவே இவ்வருடம் விளங்குகிறது.
ஜம்மு காஷ்மீர் மக்களின் சமூக, கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் வலுப்படுத்தும் வகையில் சகல துறைகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
அந்த வகையில் உல்லாசப் பயணத்துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின் பயனாகவே இவ்வருடம் உல்லாசப் பயணிகளின் வருகை பெரிதும் அதிகரித்து காணப்படுகிறது.
ஏனைய சுற்றுலா பிராந்தியங்களை விடவும் ஜம்மு காஷ்மீர் பிராந்திய உல்லாசப் பயணத்துறையில் தான் அதிக வேலைவாய்ப்பும் உருவாகியுள்ளது.
அதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வருகை தரும் உல்லாப் பயணிகள் உள்ளூர் கலை, கலாசாரம், உணவு வகைகள் மற்றும் நீர் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டச்செய்யும் வகையில் மனஸ்பால் ஏரியிலும் கண்கவர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காஷ்மீர் சுற்றுலா துறைக்கு ரூ. 786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஊடாக இப்பிராந்தியத்தின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெரிதும் மேம்படுத்த ஊக்குவிப்பு அளிக்கப்பட்டிருக்கின்றன.
அதன் பயனாக இப்பிராந்திய மக்களின் உட்கட்டமைப்பு மற்றும் சமூக ரீதியிலான முன்னேற்றங்களிலும் விரைவான வளர்ச்சி கடந்த சில வருடங்களாக ஏற்பட்டிருக்கின்றது’ என்றும் அப்பணியகம் தெரிவித்திருக்கிறது.
இதேவேளை, உதம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1,327 கோடி செலவில் செனாப் பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய வகையிலான நடைபாதை போக்குவரத்து திட்டத்தை அடுத்துவரும் நான்கு வருடங்களுக்குள் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசாங்கம் பிராந்திய மக்களுக்கு சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்கும் பார்வையாளர்களை அதிகம் கவருவதற்கும் ஏற்ப குறிப்பிடத்தக்க உந்துதலை அளித்துள்ளது.
சட்டம், ஒழுங்கு, நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு கட்டமைப்பு, உட்கட்டமைப்பு, இணைப்பு வசதிகளுடன் அமைதியைப் பேணுதல் என்பவற்றின் பயனாக காஷ்மீரின் உல்லாசப் பயணத்துறையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ‘எக்கோனோமிக்ஸ் ரைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.