இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கனடாவை நோக்கி செல்ல முயற்சித்த 306 இலங்கை அகதிகள் நேற்றைய தினம் சிங்கப்பூரின் கடற்படையின் உதவியுடன், ஜப்பான் கப்பலொன்றினால் மீட்கப்பட்டிருந்தனர்.
சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் கடற்பரப்பை அண்மித்த பகுதியில் வைத்து, இந்த அகதிகள் மீட்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் நேற்றிரவு வியட்நாம் துறைமுகத்தை நோக்கி அழைத்து செல்லப்பட்டதாகவும்,
அங்குள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கப்பலில் பயணித்த அகதி ஒருவரின் உறவினர், பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை கடற்படை மீட்பு மையத்திற்கு நேற்று முன்தினம் தகவலொன்று கிடைத்துள்ளது.
இதையடுத்து, சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மீட்பு மையங்களுக்கு, இலங்கை கடற்படை தகவல்களை பரிமாறியுள்ளது.
இலங்கை கடற்படையின் தகவலை அடுத்து, விரைந்து செயற்பட்ட சிங்கப்பூர் அதிகாரிகள், அகதிகளுடன் மூழ்கும் அபாயத்திலிருந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, இந்த கப்பலுக்கு அருகாமையில் பயணித்த ஜப்பானுக்கு சொந்தமான கப்பலொன்றிற்கு தகவல் பரிமாற்றப்பட்டதை அடுத்து, குறித்த அகதிகள் ஜப்பானுக்கு சொந்தமான கப்பலினால் மீட்கப்பட்டு, வியட்நாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அகதிகளை தாம் பாதுகாப்பாக மீட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கை கடற்படைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்ததாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகளில் 264ற்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அகதிகள் தற்போது வியட்நாமிலுள்ள முகாமொன்றில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், நாட்டில் வாழ முடியாத நிலைமை காரணமாக பலர் வெளிநாடுகளை நோக்கி செல்ல முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
அதேபோன்று, பலர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்திருந்த செய்திகளையும் காண முடிந்தது. இந்த நிலையில், ஒரே கப்பலில் அதிகளவிலான இலங்கை அகதிகள் செல்ல முயற்சித்து, நிர்கதிக்குள்ளான செய்தி நேற்றைய தினம் பதிவாகியது.
இந்த அகதிகள் எவ்வாறு கனடா நோக்கி செல்ல தயாராகினார்கள் என்பது குறித்த தகவல்களை, பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
குறிப்பாக இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த தமிழர்களே, அதிகளவில் இந்த கப்பலில் பயணித்துள்ளதாக, அந்த கப்பலில் பயணித்த இலங்கையர் ஒருவரின் சகோதரன், பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களும் இந்த கப்பலில் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கப்பலில் சென்றவர்கள் தமது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து, மீண்டும் இலங்கைக்கு வர விரும்பாத நிலையிலேயே கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர்.
அமெரிக்க தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தும் தமிழ் மொழி பேசக்கூடிய பிரதான முகவர் ஒருவரின் உதவியுடன், ஏனைய முகவர்களின் ஒத்துழைப்புடனும் இவர்கள் இவ்வாறு அகதிகளாக கனடாவை நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர்.
கனடா செல்லும் அகதி ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டாலர் அறவிடப்பட்டதாக கப்பலில் பயணித்த அகதியின் சகோதரன் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.
குறித்த இலங்கையர்கள் உரிய வகையில் விஸாக்களை பெற்று, விமானத்தின் மூலம் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக மியன்மார் நோக்கி பயணித்துள்ளனர்.
முகவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 5000 அமெரிக்க டாலரின் ஊடாக, விமான பயணச் சீட்டுக்கள், விஸா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், மியன்மார் நோக்கி சென்ற இலங்கையர்கள், அங்கிருந்து கடந்த மாதம் 10ம் தேதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையர்கள்
சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில், அண்மையில் தூவாரமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையிலேயே, குறித்த கப்பலில் பயணித்த அகதிகள், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்தே, குறித்த படகில் பயணித்த அகதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாரிய தொகையை செலவிட்டு, கனடா நோக்கி செல்ல முடியாது போனமை குறித்து, உறவினர்களின் நிலைபாடு தொடர்பில், பிபிசி தமிழ், குறித்த கப்பலில் பயணித்த இலங்கை அகதியின் சகோதரனிடம் வினவியது.
”பணம் ஒரு புறத்தில் இருக்க, நாட்டிற்கு மீள வருகைத் தருவது என்பது சாத்தியமற்ற விடயம். நாங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்புலத்தை கொண்ட ஒரு சமூகம்.
நாட்டிற்கு திரும்பி வரும் போது, குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் மீண்டும் பிரச்சினை வரும். எமது உறவினர்களும் அகதிகளாக சென்றார்கள் என்பதை வெளியில் சொன்னாலே, எமக்கு பிரச்சினை வரும்.
அதனால், அவர்கள் நாட்டிற்கு வருவதை விட, கனடா இல்லை, வேறொரு நாட்டிற்கு சென்றடைய வேண்டும். நாட்டிற்கு திரும்பி வருவது அவர்களுக்கு பிரச்சினை.
இது தான் இப்போதைய நிலைமை. வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் காலப் பகுதியில் தமிழர்களுக்கு சரியான பிரச்சினை வரும் காலம்.
இந்த நேரத்தில் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்தால், அவர்கள் மீது வேறு வழியில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது.
இவர்கள் நாட்டிற்கு வருகைத் தந்தால், அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் வழக்கு தொடரக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றது.” என அவர் கூறினார்.
”சுமார் 300 பேரையும் வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பது மனிதாபிமானமற்ற செயல். நாட்டிற்கு அனுப்பினால், நாங்கள் தற்கொலை செய்துக்கொள்வோம் என அங்குள்ள அகதிகள் கூறுகின்றார்கள்.
காணிகளை, சொத்துக்களை விற்பனை செய்து விட்டு, சென்றவர்கள் மீண்டும் இங்கு வந்து என்ன செய்வது. நாட்டிற்கு திரும்பி அனுப்பினால், தற்கொலை செய்துக்கொள்வோம் என காணிகளை விற்பனை செய்து விட்டு போனவர்கள் கூறுகின்றார்கள்.
இதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. தமது பிரஜைகளை நாட்டிற்கு எடுப்பதற்கே இலங்கை முயற்சிக்கும்.
ஆனால், அவர்களுக்கு அது சிரமமானது. அகதிகளாக சென்ற தமது உறவினர்கள், மீண்டும் நாட்டிற்கு வருவது பாதுகாப்பற்றது என்பதே உறவினர்களின் நிலைப்பாடு..” என அவர் குறிப்பிடுகின்றார்.
அலி சாப்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர்
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வியட்நாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் கைது செய்யப்படுவார்களா? சர்வதேச முகவரி நிறுவனத்தின் ஊடாக, இந்த அகதிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படும் போது, வெளிவிவகார அமைச்சுக்கும், சர்வதேச முகவர் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இது பெரும்பாலும் அரசாங்கங்களுக்கு இடையிலும், சர்வதேச முகவரி நிறுவனத்திற்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான இணக்கப்பாட்டிற்கு அமையவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
நிஹால் தல்துவ, போலீஸ் ஊடகப் பேச்சாளர்
இந்த விடயம் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்படக்கூடும் என உறவினர்களிடம் காணப்படும் அச்சம் குறித்தும், பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணிவர்கள் இந்த அகதிகளுக்கு மத்தியில் இருந்தால், சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், அவ்வாறானவர்கள் இல்லையென்றால் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.
அதேபோன்று, ஆட்கடத்தலுடன் தொடர்புடைவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கூறினார்.