ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையாகி உள்ளவர்களில் முருகனை தவிர ஏனைய இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த போலி பாஸ்போர்ட், விசா மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

. இதற்கிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவர்க்கான சிறப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்

வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பிளாக்கில் ஒரு பிரிவில் இவர்கள் 4 பேருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் உணவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.175 பணம் வழங்கப்படுகிறது.

வெளியில் இருந்தும் அவர்கள் உணவை பெற்றுக்கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்கிடையே வழக்கிலிருந்து கோர்ட்டு விடுதலை செய்த பின்னரும் இங்கேயும் அடைக்கிறீர்களே என 4 பேரும் வேதனை தெரிவித்ததாக முகாம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவர்கள் மற்ற வெளிநாட்டு கைதிகளுடன் பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல் மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று ஒருவருக்கொருவர் பேச கூட அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளை போன்று தங்களை சுதந்திரமாக நடமாட விடவேண்டும்,

தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரும் இன்று காலை சிற்றுண்டியை தவிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

– கலெக்டர் தகவல்

இதுபற்றி அறிந்த கலெக்டர் பிரதீப்குமார், வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முகாமுக்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் வெளியே வந்த கலெக்டர் மா.பிரதீப் குமார் சிறை வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது:- வெளிநாட்டினருக்கு இங்கு வீடு மற்றும் நிரந்தர தங்குமிடம் எதுவும் இருக்காது.

எனவே வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி தண்டனையிலிருந்து விடுதலை பெற்றவர்களை மீண்டும் அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பது வழக்கம். .

அதன்படியே சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களை சிறப்பு முகாமில் ஏற்கனவே உள்ள வெளிநாட்டவருடன் சேர்த்து தங்க வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் தனியாக தங்க வைக்கிறோம்.

இந்த 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்களா அல்லது இங்கேயே இருக்கப்போகிறார்களா என்பதை முதலில் உறுதி செய்ய உள்ளோம்.

இதில் முருகன் தவிர மற்ற 3 பேரும் (சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்) இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவரவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல அந்த நாட்டின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அவர்கள் தாங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி செய்து தரவேண்டும் என்றனர். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். மற்ற சிறைவாசிகளுக்கு உள்ளதுபோல் இந்த 4 பேருக்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

. அதேவேளையில் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்ற வெளிநாட்டு கைதிகளால் முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஆபத்து நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுமார் 50 போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று ஜெயிலில் இருந்து விடுதலையான நளினி, கணவர் முருகனை சந்திப்பதற்காக காட்பாடியில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார்.

பின்னர் அவர் நேராக முகாமுக்கு சென்று கணவரை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் வழக்கறிஞர்கள் உள்பட 7 பேர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நளினி, கலெக்டரிடம் தனது மகன் லண்டனில் வசிப்பதாகவும், அங்கு தனது கணவரையும் அழைத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டார். அதற்கு கலெக்டர் பிரதீப் குமார், இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்குமாறு கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version