பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார்.
ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.
அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார். இந்த நிலையில், எங்கே தான் இருக்கிறது கைலாசா? என்ற கேள்விக்கே இதுவரை விடை கிடைக்காத நிலையில் இப்போது அங்கே வேலை வாய்ப்பு என்ற ஒரு விளம்பரம் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விளம்பரத்தில் உள்ள எண்களை தொடர்பு கொண்டு பேசிய போது முதலில் பிடதி ஆசிரமத்தில் தகுதிக்கேற்ப வேலை உள்ளது என்றும் திறமையை பொறுத்து கைலாசாவிற்கே வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளம்பிங் வேலை முதல் ஐடி விங்க் வரை தகுதிக்கேற்ப வேலை உள்ளது என்றும், தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி என அத்தனையும் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடவே ஆன்மிக பயிற்சியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதால் இந்த விளம்பரம் குறித்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.