அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கர்கள் அதிபர் பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தேவையான ஆவணங்களை மத்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

ஃப்ளோரிடாவில் இருக்கும் அவருடைய மார்-அ-லாகோ எஸ்டேட்டில் உரையாற்றுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக டிரம்ப் போட்டியிடுவதை உறுதி செய்யும் ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய தேர்தல் ஆணையத்திடம் ரிபப்ளிக்கின் வேட்பாளராக டொனால்ட் டிரம்பின் குழு தாக்கல் செய்த ஆவணம், அவர் சார்பாகப் பங்களிப்பு மற்றும் செலவுகளைச் செய்வதற்கு ஒரு முதன்மை பிரசாரக் குழுவை நியமிக்கிறது.

அதிபர் தேர்தலுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்த சில நிமிடங்களில் அவர் பேசத் தொடங்கினார்.

ஒலிப்பெருக்கியில் ஒரு குரல் டிரம்பை “அமெரிக்காவின் அடுத்த அதிபர்” என்று அறிமுகப்படுத்தியது. பின்னர் டிரம்ப் பேசத் தொடங்கினார்.

அதிபர் பைடன் குறித்துப் பேசி தனது உரையைத் தொடங்கினார் டிரம்ப். தனது ஆதரவாளர்களிடம் “அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது” என்று கூறினார்.

டிரம்ப் பதவியில் இருந்தபோது தாம் செய்ததாகக் கூறும் சாதனையைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். “நான்கு குறுகிய ஆண்டுகளில், அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். அனைவரும் முன்னெப்போதும் இல்லாத வகையில் செழித்து வந்தனர்,” என்று கூறினார்.

கொரோனா பேரிடரின்போது வீழ்ச்சியடைந்த பிறகு, அவர் பதவியை விட்டு வெளியேறும்போது அமெரிக்க பொருளாதாரம் விரைவாக மீண்டு கொண்டிருந்ததாகக் கூறியவர்,

“இப்போது நாம் வீழ்ச்சியடையும் ஒரு தேசமாக இருக்கிறோம்,” என்று அதிகரித்துள்ள பணவீக்க விகிதத்தை மேற்கோள் காட்டிக் கூறினார்.

தொற்றுநோய் பேரிடருக்கு முன்பே, சில சமீபத்திய முன்னாள் அதிபர்களைக் காட்டிலும் டிரம்பின் கீழ் பொருளாதாரத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி குறைவாக இருந்தது.

“அமெரிக்காவை மீண்டும் மகத்துவமானதாக, பெருமையானதாக மாற்றுவதற்காக இன்றிரவு நான் அமெரிக்க அதிபருக்கான என்னுடைய போட்டியிடலை அறிவித்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

“எனவே இனி 2024ஆம் ஆண்டு தேர்தல் நாள் வரை, இதுவரை யாரும் போராடாததைப் போல் நான் போராடுவேன்.

நமது நாட்டை உள்ளிருந்து அழிக்க முயலும் தீவிர இடதுசாரி ஜனநாயகவாதிகளைத் தோற்கடிப்போம்,” என்று தனது உரையின்போது பேசினார்.


டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள்

 

உண்மை சரிபார்ப்பு: இதுவரை இல்லாத வேகமான மீட்சி டிரம்ப் தலைமையில் நடந்ததா?

தமது ஆட்சிக் காலத்தில் இதுவரை இல்லாத வேகமான பொருளாதார மீட்சி இருந்ததாக டிரம்ப் கூறியது உண்மையா என்று அமெரிக்காவின் பிபிசி செய்தியாளர் மைக் வெண்ட்லிங் எழுதியுள்ளார்.

“இதுவரை பதிவு செய்யப்படாத வேகமான பொருளாதார மீட்சிக்கு” தான் தலைமை வகித்ததாக டிரம்ப் கூறினார்.

2020இன் தொடக்கத்தில் மந்தநிலை ஆழமானதாக இருந்தது. டிரம்ப் நிர்வாகம் மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் கைகளில் நிவாரணத்தைக் கொண்டு சேர்த்தது.

ஆனால், டிரம்ப் வெளியேறியபோது பொருளாதார வளர்ச்சி நிற்கவில்லை. உண்மையில் அது 2021 வரை தொடர்ந்தது. அதனால் தான் டிரம்பை தொடர்ந்து வந்த ஜோ பைடன் மீட்புக்கான பெயரைப் பெறுகிறார்.

கோவிட் பேரிடர் காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்ட பெரிய பணி நிறுத்தத்தால் ஏற்பட்ட மந்தநிலையின் தன்மை காரணமாக மீள் எழுச்சியின் வேகம் அதிகமாக இருந்தது.

டிரம்பின் கொள்கைகள் மீட்சிக்கு உதவவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அசாதாரண மந்தநிலை நிச்சயமாக மீண்டும் வேகமெடுத்து முன்னேற்றம் கண்டது.


இவாங்கா டிரம்ப்

“அரசியலில் ஈடுபடும் திட்டம் எதுவும் இல்லை”

டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், தனது தந்தையின் 2024 பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“நான் என் தந்தையை மிகவும் நேசிக்கிறேன்” என்று தொடங்கும் அந்த அறிக்கையில், “இந்த நேரத்தில் நான் எனது இளம் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்துள்ளேன். ஒரு குடும்பமாக நாங்கள் உருவாக்கும் தனிப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

நான் அரசியலில் ஈடுபடத் திட்டமிடவில்லை. நான் எப்போதும் என் தந்தையை நேசிப்பேன், ஆதரிப்பேன். இனிவரும் நாட்களிலும் அரசியல் அரங்குக்கு வெளியில் இருந்து அதையே செய்வேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.


ஜோ பைடன்

அவருடைய தந்தை வெள்ளை மாளிகையில் இருந்த காலத்தில், இவாங்கா மற்றும் அவருடைய கணவர் ஜாரெட் குஷ்னர் இருவரும் மூத்த ஆலோசகர்களாகப் பணியாற்றினர். குறிப்பாக குஷ்னர் நிர்வாகக் கொள்கையில் முக்கியப் பங்காற்றினார்.

ஃப்ளோரிடாவில் டிரம்ப் அதிபர் அறிவிப்பைச் செய்தபோது இவான்கா கலந்து கொள்ளவில்லை.

பைடன் கருத்து தெரிவிக்கவில்லை

இந்தோனீசியாவில் ஜோ பைடனுடன் பயணித்த நிருபர்கள், டிரம்பின் பேச்சு குறித்து இப்போது கேட்டபோது அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

டிரம்பின் அறிவிப்புக்கு ஏதேனும் எதிர்வினை உள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, பைடன் பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மக்ரோங்குடன் ஒரு பார்வையைப் பரிமாறிக்கொண்டு “இல்லை, உண்மையில் இல்லை” என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர், தலைவர்கள் பாலியில் உள்ள ஹூடான் சதுப்புநிலக் காடுகளில் தங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடர்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்?

பல நாடுகளைப் போல அமெரிக்க அரசியல் அமைப்பிலும் இரு பெரிய கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.

அதில் ஏதேனும் ஒரு கட்சியிலிருந்து அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒன்று, அமெரிக்காவின் பழைமைவாத அரசியல் கட்சியான குடியரசு கட்சி. இன்னொன்று தாராளவாத கட்சி. அதிபர் தேர்தலில் தங்கள் கட்சிகளில் யார் பங்கேற்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து கட்சியில் அறிவிப்பார்கள்.

அதிபர் தேர்தலின்போது, ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். இன்று மொத்தம் 538 வாக்காளர் குழு உறுப்பினர் இருக்கிறார்கள்.

இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றியடைய முடியும். பெரும்பாலான மாகாணங்களில், எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த வாக்காளர் குழு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
காணொளிக் குறிப்பு,

 

Share.
Leave A Reply

Exit mobile version