“நான் நானாக இருக்கத்தான் இங்க வந்தேன்.. பெரிய கனவோட வந்தேன். நானே அசிங்கப்படுத்திக்கிட்டேன்.. ‘வெளிய அனுப்புங்க’ன்னு சொல்லவே வாய் கூசுது..
அடுத்தவரைக் கீழே தள்ளி விட்டால்தான் ஒருவர் தலைவராக முடியும் என்கிற பாடத்தை பிக் பாஸ் வீடு தொடர்ந்து கற்றுத் தருகிறது. இந்த வார தலைவர் போட்டியும் அப்படியே. தானே தள்ளி விட்ட தலைவராக மணி வெற்றி பெற்றார்.
வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S6 14-11-2022 Day 36 Episode 37 Vijay Tv Show
வேறென்ன? துண்டு துண்டாக சில காட்சிகள் வந்தன. இந்த வார சர்ச்சைகளுக்கு இவை முன்னோட்டமாக இருக்கக்கூடும்.
ஆயிஷா
நாள் 36-ல் நடந்தது என்ன?
‘கோடு போட்டா. கொன்னு போடு. வேலி போட்டா. வெட்டிப் போடு’ என்று ராவணன் படத்திலிருந்து பாடலைப் போட்டு மக்களை காலையிலேயே வெறியேத்திக் கொண்டிருந்தார் பிக் பாஸ். எனில் இந்த வார டாஸ்க் பயங்கரமாக இருக்கும் போல.
வீட்டில் இரண்டு பலமான அணிகள் இருப்பது நாளுக்கு நாள் உறுதியாகிக் கொண்டே இருக்கிறது. “அசிம். ஆட்களை ரொம்ப டெக்னிக்கா ரெடி பண்றான்.. ஏடிகே, மணி, ராம், மைனா.. இவங்க கிட்ட ஏதோ பேசி நமக்கு எதிரா முத்திரை குத்த வைக்கறான்” என்று ராபர்ட் சொல்ல “அதை அவன் ரைடக்ட்டா சொல்லி செய்யறதில்லை” என்று ஆமோதித்தார் அமுதவாணன்.
இன்னொரு பக்கம் மைனாவும் ஆயிஷாவும் கூட அசிமின் புத்திசாலித்தனத்தை வியந்து கொண்டிருந்தார்கள். “கமல் சார் கேட்கும் போது எப்படி சூப்பரா பதில் சொன்னான்.. பாரேன்..” என்று மைனா வியக்க “அவன் கிளவரான பிளேயர்’ என்பதை நூற்று பன்னிரெண்டாவது தடவையாக சொல்லிக் கொண்டிருந்தார் ஆயிஷா.
‘இப்ப பாரேன்.. ஜீவா பல்லைக் கடிக்கப் போறான்..’
பொதுவாக சினிமா ஹீரோக்களுக்கு இயக்குநர்கள்தான் பில்டப் தருவார்கள். ஆனால் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் மெயின் வில்லனே ஹீரோவிற்கு தொடர்ந்து பில்டப் தருவான்.
“அவனை உங்களால பிடிக்கவே முடியாது… தலைமறைவா இருக்கறதுல அவன் மாஸ்டர். அதைப் பத்தி ஒரு புத்தகமே எழுதியிருக்கான்” என்று.. அது போல இங்கு சக போட்டியாளர்களே அசிமை விதம் விதமாக வியந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு விஷயத்திற்காக அசிமைப் பாராட்டியாக வேண்டும். ‘சுருக்’குன்னு தைக்கட்டும்தான் சொல்றேன்’ என்று அசிமின் மகனை உதாரணம் காட்டி கமல் கண்டித்த போது அந்தக் கசப்பை அப்படியே விழுங்கிக் கொண்டு தன்னை மெல்ல மாற்றிக் கொண்டிருக்கிறார் அசிம்.
ஆனால் தனலஷ்மி போன்றவர்கள் இந்த மாதிரியான கடின சூழலை எதிர்கொண்டிருந்தால் உடைந்து நொறுங்கிப் போயிருப்பார்கள். (அய்யோ.. நானும் அசிமிற்கு பில்டப் தர ஆரம்பிச்சிட்டேனா?!).
‘என் கிட்ட இருந்து விலகியே இரு. நான் உன்னைப் பயன்படுத்திக்கறதா.. பேச்சு வருது’ என்று ஜனனியிடம் அமுதவாணன் நொந்து போய் சொல்ல, அவரிடம் தொடர்ந்து தன் தரப்பை விளக்கிக் கொண்டிருந்தார் ஜனனி. “என்ன உங்க பிரச்சினை.. ஏன் என் கூட கதைக்க மாட்டேன்றீங்க.. நீங்க என்னை பகடைக்காயா பயன்படுத்தலை..
நான் எதுவும் தெரியாத பிள்ளையா? நீங்க அன்பு, பாசம் காட்டறீங்க.. அதனால உங்க கூட இருக்கேன்” என்று தாயின் இடுப்பிலிருந்து இறங்க மறுத்து அடம்பிடிக்கும் குழந்தை மாதிரி சிணுங்கிக் கொண்டேயிருந்தார் ஜனனி. அமுதவாணன் மற்றவர்களைக் கூட மன்னித்து விடுவார். விக்ரமன் மீது மட்டும் கொலகாண்டில் இருக்கிறார்.
தள்ளி விட்டுத் தலைவரான மணிகண்டன்
தலைவர் போட்டி. ரச்சிதா, மணிகண்டன், அமுதவாணன், விக்ரமன் ஆகிய நால்வரும் இதில் கலந்து கொண்டார்கள். (விக்ரமனின் இடத்தில் தனலஷ்மி இருந்திருக்க வேண்டியது.. ம்..). குச்சியின் இரு முனைகளிலும் ஐஸ் இருப்பது போன்ற தோற்றத்தில் ஒரு பன்ச்சிங் பேக் இருந்தது. அதை வைத்து எதிராளியே கீழே தள்ளி விட வேண்டுமாம். யார் கடைசியில் மிஞ்சுகிறாரோ, அவரே தலைவர்.
ஆரம்பித்து இரண்டே நிமிடங்களில் முடிந்து போன இந்த ஆட்டத்திற்கு பாதுகாப்பு உடைகள் எல்லாம் தந்திருந்தார்கள். ரச்சிதாவின் ஹெல்மெட்டின் பக்கிளை மாட்டுவதற்கு விக்ரமன் உதவி செய்து கொண்டிருந்தார்.
இதை வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ராபர்ட் காண்டாகி “எவ்ளோ நேரம் அதை மாட்டறான் பாரேன்” என்று அனத்த, மற்றவர்கள் அவரை கிண்டலடித்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு காமிராவும் விக்ரமன் – ரச்சிதா ஜோடியை ஜூம் இன் செய்து ராபர்ட்டின் காண்டை அதிகப்படுத்தியது.
ரச்சிதாவுக்கு உதவிய விக்ரமன்
போட்டி ஆரம்பித்த அடுத்த நொடியே மணிகண்டனின் ஆவேசம் தாங்காமல் விக்கிரமனும் ரச்சிதாவும் ஜோடியாக கீழே சரிந்தார்கள். (இதுக்கு ஹெல்மேட்லாம் வேற!). ‘கைல தள்ளாதே’ என்று அமுதவாணன் ஆட்சேபிக்க, ‘இல்லைண்ணே’ என்று மறுத்தார் மணிகண்டன். அடுத்த சுற்றிலும் மிக எளிதாக அமுதவாணனைத் தள்ளி வெற்றி பெற்றார் மணிகண்டன். ஆக இந்த முறையும் அமுதவாணனுக்கு அதிர்ஷ்டம் இல்லை.
அணிகள் பிரிக்கப்பட்டன. பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியில் ராபர்ட் – ரச்சிதாவை வைத்து அழகு பார்த்தார் கேப்டன். கிச்சன் டீமில் குயின்சி, மைனா, ஆயிஷா, நிவா. மணிகண்டனும் உதவி செய்வார்.
அதிக வாக்குகள் பெற்று நாமினேட் ஆன தனலஷ்மி தப்புவாரா?
‘இரண்டு நபர்களை நாமினேஷன் செய்யுங்கள்’ என்று திங்கட்கிழமை வில்லங்கத்தை மங்கலகரமாக ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ். Jump Cut-ல் பெயர்களும் காரணங்களும் சரமாரியாக சொல்லப்பட்டன.
‘ஒவ்வொரு வாரமும் அசிம் ஒவ்வொரு அவதாரம் எடுக்கறாரு’ என்பது முதல் விதம் விதமான காரணங்கள் வந்தன. ‘என்னை அவாய்ட் பண்ணுங்க’ன்னு ஷிவின் சொன்னது புரியல’ என்கிற காரணத்தைச் சொல்லி ஷிவினை நாமினேட் செய்தார் கதிரவன்.
ஆக… இந்தச் சடங்கு இறுதி வடிவத்திற்கு வந்தது. தனலஷ்மி, அசிம், நிவாஷிணி, குயின்சி, ராபர்ட், ஆயிஷா, கதிரவன் மற்றும் ஜனனி ஆகியோர் இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இருக்கிறார்கள்.
நாமினேட் ஆன சோகத்தில், ‘இந்த வாரம் நானே போயிடுவேன்’ என்று ராபர்ட் அனத்த “அப்படில்லாம் சொல்லக் கூடாது.. தப்பு..” என்று செல்லமாகக் கண்டித்தார் ரச்சிதா.
சில நிமிடங்களுக்குப் பிறகு காமிராவின் முன்னால் “மக்களே என்னைக் காப்பாத்தாதீங்க.. வெளில நிறைய வேலை இருக்கு. அனுப்பிடுங்க” என்று கெத்தாக வேண்டுகோள் வைத்தார்
ராபர்ட். (வெளில வேலை இருக்கற ஆசாமிங்க.. ஏன் கஷ்டப்பட்டு உள்ளே வரணும்?!). “என்னை வெளியே அனுப்பறதுக்கு பதினாறு போ் கொண்ட குழு கடுமையா வேலை செய்யுது’ என்று பெருமிதத்துடன் அனத்தினார் ஆயிஷா. (நீங்களேதான் அந்த அணியோட காப்டன்… ஆயிஷா!).
தனலஷ்மிக்கு பிக் பாஸ் சொன்ன ஆறுதல் – (இவரே பாம் வைப்பாராம்..)
நாமினேஷனுக்கான காரணங்களை பொதுவில் சொல்லி வழக்கம் போல் மக்களைக் குழப்பி விட்டார் பிக் பாஸ். ஏற்கெனவே மனம் குழம்பியிருந்த தனலஷ்மிக்கு இது இன்னமும் உளைச்சலை சேர்த்து விட்டது.
மற்றவர்களுக்காக சொல்லப்பட்ட காரணங்களையும் எடுத்து தன் தலை மேல் போட்டுக் கொண்டு அனத்த ஆரம்பித்து விட்டார். ‘பச்சோந்தி’ என்று அசிம் சொன்னது ஆயிஷாவிற்கான காரணம். ஆனால் அதையும் தன் கணக்கில் சேர்த்துக் கொண்டு ‘பச்சோந்தின்னு சொல்றாங்க. என் கிட்ட பேச பயமா இருக்காம். அதிகமா கோப்படறேனாம்..’ என்றெல்லாம் புலம்பிய தனலஷ்மியை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்தார் பிக் பாஸ்.
தனியான இடம் கிடைத்தவுடன் இன்னமும் வாய் விட்டு அழுது அரற்றினார் தனலஷ்மி. “நான் நானாக இருக்கத்தான் இங்க வந்தேன்.. பெரிய கனவோட வந்தேன். நானே அசிங்கப்படுத்திக்கிட்டேன்.. ‘வெளிய அனுப்புங்க’ன்னு சொல்லவே வாய் கூசுது.. நான் கரெக்ட்டா விளையாடறதாதான் நெனச்சிட்டு இருக்கேன்.
எனக்கு அமைதியா விளையாட வராது. நான் காசு திருடலை..” என்றெல்லாம் கண்ணீர் விட்டு புலம்பிய தனலஷ்மியை நீண்ட நேரம் வேடிக்கை பார்த்த பிக் பாஸ் “நீங்க உண்மையாத்தானே நடந்துக்கிட்டீங்க.. தவறு செய்யாதவங்க யாரும் கிடையாது.
நீங்க செஞ்சது ஒரு பிழை. அதை உணர்ந்துட்டீங்க.. தொடர்ந்து விளையாடுங்க..” என்று ஆறுதல் சொன்னவுடன் தெளிந்த முகத்துடன் வெளியே சென்றார் தனலஷ்மி.
தொடரும் ராபர்ட்டின் இம்சை
“நான் காலைல இருந்து சாப்பிடலை.. ஏன்னு ஒருத்தர் கூட கேக்கலை.. என் பொண்ணு கேக்கலை. நீயும் கூட கேட்கலை பார்த்தியா..” என்று ரச்சிதாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ராபர்ட். ‘கடவுளே.. முடியலை’ என்கிற மாதிரி க்யூட் எக்ஸ்பிரஷன் கொடுத்த ரச்சிதாவின் மைண்ட்வாய்ஸ் இப்படியாக இருந்திருக்கலாம்.
‘ஹலோ.. இந்த வீட்ல சோறு கிடைக்கறதே பெரிய விஷயமா இருக்கு.. இந்த லட்சணத்துல பந்தில விசாரிக்கற மாதிரி விசாரிக்கலைன்னு குறை வேற.. போய்யா யோவ்..’
அடுத்ததாக பெயிண்ட் கம்பெனி விளம்பரத்திற்கான டாஸ்க். வீடு மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டன. மிச்சமிருக்கும் அசிம் நடுவர்.
இதில் இரண்டு சுற்றுகள் நடைபெறும். ‘பெயிண்ட் த வால்’ என்னும் சுற்றில் குதித்தபடி, மெதுவாக, குனிந்த படி, பின்பக்கமாக என்று விதம் விதமான அசைவுகளில் பெயிண்ட் அடிக்கச் சொல்லி இம்சை செய்தார்கள். (பெயிண்ட்டின் பெயர் ‘நிப்பான்’ என்பதால் ‘குதிப்பான்…உக்காருவான்.. ஓடுவான்.. என்றெல்லாம் பெயிண்ட் அடிக்கச் சொல்லக்கூடாது!).
வெற்றி பெற்ற இரு அணிகள் அடுத்த சுற்றிற்கு செல்லும். ‘உள்ளே.. வெளியே’ என்று மங்காத்தா மாதிரியான இந்த விளையாட்டில் நடுவர் ‘உள்ளே’ என்று சொல்லும் போது நீல அட்டையின் மீது வந்து நிற்க வேண்டும். ‘வெளியே’ என்று சொல்லும் போது ‘சிவப்பு’ அட்டையின் மீது நிற்க வேண்டும்.
இடமில்லாதவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறுவார். இறுதி வரை தாக்குப் பிடிப்பவரின் அணி வெற்றியடையும். இந்த வகையில் அமுதவாணன் இறுதியில் வந்தார். எனவே ‘மைனா’ அணி வெற்றி.
பிக் பாஸ் வீட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருக்கிறதா?
அடுத்ததாக ஸ்கிராட்ச் கார்ட் போட்டி. கண்ணைக் கட்டிக் கொண்டு பந்தை கோல் போஸ்ட்டில் தள்ள வேண்டும். எளிமையானதுதான்.
ஆனால் பலரும் சொதப்ப மைனா மட்டுமே கோல் போட்டு வென்றார். ஆனால் அதை வெற்றி என்று சொல்ல முடியாது. பங்கமான தண்டனை. ‘வீட்டின் தலைவரது துணியை ஒருநாள் துவைக்க வேண்டும்’ என்று ஸ்கிராட்ச் கார்டு சொல்ல, மணிகண்டன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார்.
‘வீட்டிலிருந்து பொருட்கள் காணாமல் போகின்றன’ என்கிற புகார் வந்து கொண்டிருந்தது. தோசைக்கல்லை ஒளித்து வைத்து ஷிவின் விளையாட, முதலில் அனத்திய மைனா பிறகு அதைக் கண்டுபிடித்து விட்டார்.
பிறகு “யார் ஷூ எடுத்தது?” என்று மைனா விசாரிக்க அமுதவாணனும் தனலஷ்மியும் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். ‘என்னங்கடா நடக்குது?’ என்று மைனா வியந்தார். இது போதாதென்று நள்ளிரவில் காமிரா முன் வந்த நிவாஷிணி “என்னோட சாப்பாடை திருடிடறாங்க’ என்று கோபத்துடன் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்.
“நான் விளையாடும் போது மட்டும் எதிர் ஆளுங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க?’ என்று விக்ரமன் ரச்சிதாவிடம் கேட்டு விட்டார். “இதனாலதான் அவ காலைல இருந்து அப்செட்டா இருக்கறாளா?’ என்று விசாரித்துக் கொண்டிருந்தார் ஷிவின். “அப்படில்லாம் இல்லை’ என்று அடிபட்ட முகத்துடன் சொல்லி விலகினார் ரச்சிதா. “ரொம்ப யோசிக்காத..” என்று பிறகு ரச்சிதாவிற்கு அட்வைஸ் சொல்லிக் கொண்டிருந்தார் ஷிவின்.
“கிச்சன் டீம் அதிகாரம் ஒவரா இருக்குது.. ஒரு தோசை கேட்டா அப்படியே விழிச்சுப் பார்க்கறாங்க.. ரச்சிதா இருந்தப்ப இப்படி இல்ல” என்று ஜனனி புகார் சொல்ல, அமுதவாணனும் ராபர்ட்டும் அனுதாபத்துடன் ஆமோதித்தார்கள்.
“ஒருத்தன் பிரெண்டுன்றதால அவன் தப்பை சுட்டிக் காட்டக்கூடாதுன்னு இல்ல. ஆனா நாமினேட் பண்ணனும்னு அவசியமில்ல’ என்று அசிமை முன்னிட்டு ஏடிகேவிடம் பேசிக் கொண்டிருந்தார் கதிரவன். ‘அவாய்ட் பண்ணுங்க..ன்னு ஷிவின் சொல்லிட்டாங்க’ என்று ஏற்கெனவே வருத்தத்தில் இருந்த கதிரவனிடம் தானாக வந்து பேசினார் ஷிவின்.
“ஆரம்ப நாள்ல ஒரு தவறான புரிதல் வந்துச்சு.. இது கேம்தான். ஆனா சில பேரை போட்டியாளரா மட்டும் பார்க்க முடியாது. எனக்கு ரச்சிதா அந்த மாதிரி. நீங்களும் அப்படித்தான்” என்று ஷிவின் உருகிச் சொன்னதோடு எபிசோட் நிறைந்தது.
‘திருட்டு, பதுக்கல், ஊழல் போன்றவை தவறு’ என்று கமல் கோபமாக சொல்லி விட்டுச் சென்று சில மணி நேரங்கள் கூட ஆகவில்லை. வீட்டில் ஜாலியாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த வார டாஸ்க்கைப் பொறுத்து கலவரங்களும் அதிகரிக்கலாம். பொறுத்திருந்து வேடிக்கை பார்ப்போம்.
வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S6 14-11-2022 Day 36 Episode 37 Vijay Tv Show