வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது இளம் மகளுடன் முதன்முறையாக பொதுவெளிக்கு வந்ததன் மூலம், அவருடைய மகளின் இருப்பு குறித்து நிலவி வந்த வதந்தி உறுதியாகியுள்ளது.
அவர் பெயர் கிம் சூ-ஏ என நம்பப்படுகிறது. கடந்த வெள்ளியன்று நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ஆய்வு செய்த போது கிம் ஜாங்-உன்னுடன் அவர் இருந்தார். அப்போது இருவரும் கைகோர்த்து நின்றனர்.
உலகின் மிக ரகசியமான நாட்டை ஆட்சி செய்துவரும் கிம் ஜாங்-உன்னின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியுலகிற்கு பெரிதும் தெரியாது.
இந்த சோதனையின் போது இருவரும் கைகோர்த்து நின்று பேசிக்கொண்டிருந்த சில புகைப்படங்களை வடகொரியாவின் தேசிய செய்தி முகமை கேசிஎன்ஏ வெளியிட்டுள்ளது.
கிம் சூ-ஏ பொதுவெளியில் தோன்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்கிறார் வாஷிங்டன் டிசியில் உள்ள ஸ்டிம்சன் மையத்தின் வட கொரியா நிபுணர் மைக்கேல் மேடன்.
வடகொரியாவை ஆட்சி செய்யும் கிம் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த கிம் ஜாங்-உன், அதிகாரத்தில் தன்னுடைய பிடி இன்னும் இருப்பதை வெளிப்படுத்திவருவதாக மைக்கேல் மேடன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது, அதிகாரத்திற்கான நான்காம் தலைமுறை என்னுடைய ரத்த வழியில் இருந்து வரும் என்று கிம் ஜாங்-உன் சொல்லும் முறையாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் அவருடைய மகள் கிம் சூ-ஏ
கிம்மிற்கும் அவரது கூட்டாளிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக கடந்த 2021ஆம் ஆண்டு செய்திகள் வெளியான நிலையில், தற்போது கிம் சூ-ஏ பொதுவெளிக்கு வந்திருப்பதாக கூறும் மைக்கேல் மேடன், என்னை எதிர்த்தால் நீங்கள் வீழ்த்தப்படுவீர்கள் என்பது அதிபர் கிம் சொல்லும் சேதி என்கிறார்.
கிம் சூ-ஏவுக்கு 12லிருந்து 13 வயது இருக்கலாம் என நம்பும் மேடன், இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் அவர் பல்கலைகழகத்திற்கு அல்லது ராணுவ சேவைக்கு தயாரகிவிடுவார் என்றும் கூறுகிறார்.
நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் கிம் சூ-ஏ காணொளியில் காட்டப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் பல வடகொரிய நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், அவர் அதிபரின் மகள் என்பதை வடகொரிய தலைமை உறுதிசெய்யாததால், இது வெறும் ஊகமாகவே இருந்தது.
அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் டெனிஸ் ரோட்மேனின் சர்ச்சைக்குரிய வடகொரிய பயணத்திற்குப் பிறகு முதன்முறையாக 2013ஆம் ஆண்டு கிம் சூ-ஏ குறித்து வெளியுலகிற்கு தெரியவந்தது.
கிம் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்ததாகவும், அவர்களுடைய குழந்தை கிம் சூ ஏவை கையில் வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அதில் கிம் சூ-ஏ மூத்தவர் என்றும் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
ஆனால், தன்னுடைய குடும்பம் பற்றிய விஷயங்களை கிம் மிக ரகசியமாக வைத்துள்ளார். அவரின் திருமணத்திற்குப் பிறகு சில காலம் வரை அவரது மனைவி பற்றிய விவரங்கள் கூட ரகசியமாகவே இருந்தன.