இந்தியாவின் பழமையான மொழியான தமிழ் மொழியை காக்கவேண்டும், தவறினால் நாட்டுக்கு இழப்பு ஏற்படும் என வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோதி பேசினார்.
காசி தமிழ் சங்கமம் என்ற ஒரு மாத கால நிகழ்ச்சியின் தொடக்கவிழா இன்று நடந்தது. நிகழ்வில் பேசிய மோதி, இந்தியாவில் பழமையான மொழியாக இருப்பது தமிழ் என்றும் அதன் சிறப்புகளை கண்டு உலகமக்கள் வியக்கிறார்கள் என்றும் கூறினார்.
”நாம் தமிழ் மொழியை கொண்டாடவேண்டும். மொழிப் பாகுபாடுகளை விடுத்து தமிழ் மொழி போன்ற பழமையான மொழியை காத்திடவேண்டும்,”என்றார்.
“காசியும் தமிழ்நாடும் கலாசாரத்தில் சிறந்தவை”
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ”நம் நாட்டில் ஒரு கொள்கை உள்ளது. ஒரே உண்மை அது பல ரூபங்களில் வெளிப்படும்.
அதுபோல, காசியும்,தமிழ்நாடும் இரண்டுமே கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகின்றன. காசியும் தமிழ்நாடும் சிவமயமானவை, சக்திமயமானவை. காசியில் விஸ்வநாதரும், ராமேஸ்வரத்தில் ராமநாதரும் இருப்பதால் இரண்டு இடங்களுக்கும் பெருமை.
மொழி, பண்பாடு என எல்லா விஷயத்திலும் பாரம்பரியம் மிகுந்த காசியும், தமிழ்நாடும் பல ஞானிகள் பிறந்த நிலமாக இருந்துள்ளன.
காசியில் துளசிதாசர் பிறந்தார், தமிழ்நாட்டில் திருவள்ளுவர் பிறந்தார். தமிழ்நாட்டில் நடக்கும் திருமண சடங்குகளில், காசிக்கு செல்வது என்ற சடங்கு உள்ளது.
இதுபோல இந்த இரண்டு நகரங்களுக்கும் பல தொடர்புகள் உள்ளன. பனாரஸ் புடவைகள் போலவே காஞ்சிபுரம் புடவைகள் உலகம் முழுவதும் பிரபலமானவை,” என்றார்.
காசியில் உள்ள ஹனுமான்கட் பகுதியில் பல தமிழர்கள் இன்றும் வசிக்கிறார்கள். கேதார்நாத் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான குமாரசாமி மடம் செயல்படுகிறது.
இதுபோல பலகாலமாக இரண்டு இடங்களுக்கும் நட்பு தொடர்கிறது. பாரதியார் காசியில் இருந்த சமயத்தில்தான் முறுக்கு மீசை வைத்துக்கொண்டார் என்று சொல்வார்கள். இதுபோன்ற சங்கமம் நிகழ்ச்சி மூலம்தான் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தமுடியும்.
தேசஒற்றுமையைதான் மந்திரங்கள் கூறுகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, ஒற்றுமையை பலப்படுத்தும் முயற்சிகள் செய்யப்பட்டிருக்கவேண்டும். பல்வேறு காரணங்களால் அவை நடக்கவில்லை. தற்போது, நாம் இந்த சங்கமம் நிகழ்ச்சிகள் மூலம் அதனை உறுதிபடுத்துவோம்,”என்றார்.
மோதிக்கு எப்படி இந்த யோசனை வந்தது? வியந்த இளையராஜா
தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் நூற்றாண்டு கால தொடர்பு நீடித்து வருவது பெருமை தருவதாக உள்ளது என்றும் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோதி நடத்த முடிவு செய்ததை எண்ணி வியப்பதாகவும் இசைஞானி இளையராஜா வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட இளையராஜா, பாரதியார் காசியில் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளில் பலவற்றை கற்றுக்கொண்டார்,
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்ஷிதர் காசியில் தேசாந்திரியாக திரிந்து அனுபவங்களை பெற்றவர் என்றார்.
”இந்தியாவில் நதிநீர் இணைப்பு குறித்து 22 இளவயதில் பாரதியார் பாடி சென்றார். தற்போதுதான் நாம் அது பற்றி பேசுகிறோம்.
காசி நகரத்திற்கும், தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக தொடர்பு நீடிப்பது பெருமைக்குரியது,”என்றார் இளையராஜா.
அது தவிர, நிகழ்ச்சியில், நான் கடவுள் படத்தில் இடம்பெற்ற ஓம் சிவகோம் பாடலை இளையராஜா வழங்கினார். கலைமாமணி ஷேக் சின்ன மௌலானா குடும்பத்தை சேர்ந்த காசிம் நாதஸ்வரம் வாசித்தார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பங்கேற்றார் பிரதமர் நரேந்திர மோதி. மதுரை ஆதீனத்திடம் அவர் ஆசி பெற்றார்.
முன்னதாக, கெமர் என்ற கம்போடிய மொழி உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் வெளியிட்டார்.