மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் பொறுப்பதிகாரியான பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் 12 வயது மகள், அந்த அதிகாரியின் கள்ளக் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் விஷேட உத்தரவுக்கு அமைய நேற்று ( நவ. 20) பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண் பொலிஸ் பரிசோதகரின் கணவர், சிறைச்சாலைகள் திணைக்களத்தில் சேவையாற்றிய நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், அந்த பெண் பொலிஸ் பரிசோதகர், வர்த்தகர் ஒருவருடன் கள்ளக் காதல் கொண்டுள்ள நிலையில், அவருடன் ஜா எல பகுதியில் வீடொன்றில் தனது இரு பிள்ளைகளுடன் வசித்துள்ளார்.

இந் நிலையில், அந்த வீட்டில் வைத்தே, 12 வயதான, பொலிஸ் அதிகாரியின் மகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

பல நாட்களாக குறித்த சிறுமி கள்ளக் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சிறுமி பொலிஸ் அதிகாரியான தாயிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனது மகள் கூறிய விடயங்களின் பின்னர், தாயான பெண் பொலிஸ் பரிசோதகர் உடனடியாக தனது இரு பிள்ளைகளையும் வட மேல் மாகாணத்தில் அமையப் பெற்றுள்ள தனது தயாரின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். எனினும் கள்ளக் காதலனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியுள்ளார்.

இவ்வாறான நிலையில், வட மேல் மாகாணத்தின் பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு, பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, தொலைபேசி ஊடாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ், சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் அதிகாரிகள் வீட்டுக்கு சென்று சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்ற போது, அச்சிறுமி அனைத்து விடயங்களையும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் சிறுமியை குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்து பரிசோதனைகளை முன்னெடுத்து சிகிச்சையளித்துள்ள நிலையில் சிறப்பு விசாரணைகள் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேனுகா ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version