‘பல பெண்கள் எந்தவிதமான தெளிவூட்டல்களும் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். தாம் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை’

எமது நாடு எதிர்நோக்கியுள்ள கவலைக்கிடமான, வெட்கக்கேடான இந்த மோசமான நிலைமைக்கு ஊழல், மோசடிகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த ஊழல்கள் மோசடிகள் பொருளாதாரம் மீது ஏற்பட்டுள்ள சுமை காரணமாக தாய் நாட்டை விட்டு தொழில் தேடி வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நவீன அடிமை தொழிலை எமது நாட்டுக்கு அந்நிய செலாவணி கிடைக்கும் முக்கிய வழிமுறையாக அமைந்துள்ளது. வெளிநாட்டு பணியாளர்களாக நாட்டின் தாய்மார், சகோதரிகள் அனுப்பி வைக்கும் போது அங்கு இடம்பெறுகின்ற ஆட்கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு அழைத்து செல்லப்பட்ட இலங்கை பெண்கள் சிலர் கடந்த 15 ஆம் திகதி காலை பலவந்தமாக ஓமானிற்கு அழைத்து செல்லப்பட்டதையடுத்து இது தொடர்பான தகவல்கள் அம்பலமாயின. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை தொழிலுக்காக அனுப்பி வைக்கும் முகவர்களாவர்.

அவர்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பட்டு நிர்கதிக்குள்ளாகியுள்ள பெண்கள் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைவாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழில் வாய்பிற்காக ஓமான் நாட்டிற்கு சென்றுள்ள பெண்கள் தொடர்பில் மனித ஆட்கடத்தில் ஈடுப்பட்டுள்ள தரப்பினர் தொடர்பில் பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளதாகவும்,

அது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை குற்றவியல் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் ஈ.டீ.பீ. சேனநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

ஓமான் நாட்டிற்கு சட்டரீதியாக 19,000 பேர் தொழிலுக்காக சென்ற நாடாகும். இந்நிலையில் தற்போது நெருக்கடிக்கு முகங் கொடுத்து உள்ள பெண்கள் ஓமானிற்கு சட்டரீதியாக சென்றிருக்கவில்லை.

மனித ஆட்கடத்தல்காரர்களின் பொய்யான வார்த்தைகளுக்கு மயங்கி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பொய்யான தகவல்களை வழங்கி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

குறித்த பெண்கள் முதலில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து ஓமான் நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளனர்.

முறையான விதத்தில், சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அங்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக பாதுகாப்பு மையங்கள் நிறுவியுள்ளோம்.

இருப்பினும் தற்போது அந்த 77 பெண்களும் இலங்கை பெண்கள் என்ற வகையில் மனிதாபிமான ரீதியில் உதவ வேண்டியுள்ளது.

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்லும் போது அந்த சந்தர்ப்பத்தில் சிக்கல்கள் ஏற்படுமாயின் அதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

இது முறையற்ற பயணமாகும். இதற்காக நாம் பாரியதொரு தொகையை அபராதமாக செலுத்த வேண்டி ஏற்படும் என்றார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நிறைவேற்று பணிப்பாளர் சந்தன வீரசேகர ஓமான் மனித ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பில் முதலில் ஓமான் உயர்ஸ்தானிகர் காரியலாயத்தைத் தொடர்பு கொண்டு குறித்த விடயம் சம்பந்தமாக பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தோம்.

சுற்றுலா விசாவில் அங்கு சென்றுள்ளமயாலேயே தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு சென்று சாதாரணமாக வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியாது.

சில சந்தர்ப்பங்களில் சுற்றுலா விசாவில் சென்று வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கலாம்.

ஆனால் இதன் பாரதூரம் தெரியாத அப்பாவி பெண்கள் ஆபத்தை விலை கொடுத்து பின்னர் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மேலும் மனித ஆட்கடத்தலில் ஈடுபட்ட தரப்பினருக்கு கடுமையான தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும். குறித்த பெண்கள் மீளவும் பாதுகப்பாக நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரி கபில கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில்,

உரிமம் பெறாது மற்றும் மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அரச அனுமதி பெறாது இயங்கி வந்த முகவர் நிலையங்களின் உரிமையாளர்கள் நால்வர் நேற்று (21) கைது செய்யப்பட்டனர்.

ஓமான் மனித ஆட்கடத்தல்காரர்கள் சம்பந்தமான பல்வேறு விடயங்களை நாம் கண்டறிந்துள்ளோம்.

குறிப்பாக இந்த வருடத்தில் மாத்திரம் மனித ஆட்கடத்தல்காரர்கள் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வாறான மனித ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களின் உதவி முகவர்கள் கைது செய்வதற்கு நாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.

மனித விற்பனை, ஆட்கடத்தல் ஒழிப்பு, சமுத்திர குற்றத்தடுப்பு பிரிவு கடந்த சில வாரங்களாக ஓமானில் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறோம்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் இரண்டு ஆண்கள், பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்டு வந்துள்ளார். அங்கு அவர் தரகர் ஒருவராக செயல்பட்டு வந்தமை தெரிய வந்துள்ளது என்றார்.

ஓமானில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பெண்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்,

‘கடந்த வருடம் அக்டோபர் மாதம் டுபாய் ஊடாக ஓமானுக்கு தொழிலுக்காக சென்றேன். அங்கு நான் கடுமையான பிரச்சினைகளை எதிர் கொண்டேன்.

எனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. குஷான் என்பவரிடம் இது தொடர்பில் முறையிட்டேன். என்ன வேண்டும் என்று கேட்டார் ?. நான் என்னை நாட்டிற்கு அனுப்புங்கள் என்றேன்.

உடனே அவர் என்னுடைய தோளில் கை போட்டார் என்னை இழுத்தார். நான் அவரை தள்ளிவிட்டேன். வேண்டாம் சேர். இத்தகைய தொழிலுக்கு நான் வரவில்லை என்றேன் அதற்கு அவர் என்னுடன் இணங்கினால் நான் நாட்டிற்கு அனுப்பி வைப்பேன் என்றார்.

மற்றைய பெண் கூறுகையில்,

அங்கிருந்து தங்கை ஓருவரை போலி விசா மூலம் அழைத்து செல்வதற்கு முற்பட்டார். ஆனால் நாட்டிற்கு செல்ல வேண்டும் கூறுவார்கள் .

அதற்கு சேர் உங்களை நாட்டிற்கு அழைத்து செல்ல 7 முதல் 12 இலட்சம் வரையில் பணம் வேண்டும். அதனை சம்பாதியுங்கள் என்பார் .

அவருக்கு விபசார விடுதிகள், பெண்களை விற்பனை செய்பவர் மற்றும் துன்புறுத்துபவர்கள் உடன் நேரடி தொடர்பு இருக்கிறது. அதை நான் காதால் கேட்டேன். கண்களால் பார்த்தேன். அவர் வெளியில் சென்று விபசார விடுதி நடத்துபவர்களுடன் இணைந்து செயற்படுமாறு தாக்குவார்.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகம், பெண்களை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்தமை தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாராக செயல்பட்டு வந்த குஷான் என்பவர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

தோல்வியடைந்த ஊழல் மிக்க ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாக இறுதியில் நாட்டின் வறிய மக்களே பாதிக்கப்படுகிறார்கள். நாட்டின் தாய்மார், சகோதரிகள் இந்த துர்பாக்கிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர் அவர்கள் எமது நாட்டின் கௌரவத்தையே பிரதிப்பலிக்கின்றனர். இந்த மாதிரியாக வெட்கக்கேடான நிலையில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version