கண்காணிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் நீண்ட காலமாக பாகிஸ்தான் வசம் உள்ளன. ஆனால் கராச்சியில் நடந்து வரும் ஆயுத கண்காட்சியில் பாகிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய ட்ரோன்களை முதல் முறையாக காட்சிக்கு வைத்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கராச்சியில் நடைபெறும் இந்த ஆயுதக் கண்காட்சியில் பாகிஸ்தானின் முப்படைகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

நவம்பர் 18ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சியில் சீனா, துருக்கி தவிர, வேறு பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
ஆளில்லா விமானங்களின் தன்னிறைவு

அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கத் தொடங்கியபோது பாகிஸ்தான் மக்கள் முதல் முறையாக ட்ரோனின் பெயரை கேள்விப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்கா பல ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.

கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை (உளவுத்துறைக்கானவை) தயாரிக்கத் தொடங்கியதன் மூலம் ‘ட்ரோன் உலகில்’ பாகிஸ்தான் முதல் அடியை எடுத்து வைத்தது.

கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இந்த ஆளில்லா விமானங்கள் இதற்கு முன்பு நடந்த ஆயுத கண்காட்சிகளில் காணப்பட்டன.

பாகிஸ்தான் வெளிநாடுகளைச் சார்ந்து இருக்கும் தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே படிப்படியாக உருவாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு தங்களிடம் தெளிவாக கூறியதாக பாகிஸ்தான் அரசின் நிறுவனமான குளோபல் இன்டஸ்ட்ரியல் அண்ட் டிஃபென்ஸ் சொல்யூஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அசத் கமால் கூறுகிறார்.

இதனால் அந்நிய செலாவணி சேமிக்கப்படும் என்றார் அவர்.

2018 இல் “ஐடியாஸ்” இன் கடைசி கண்காட்சியில் பராக் என்ற கண்காணிப்பு ட்ரோன் உலகின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அதன் பணி வீடியோக்களை உருவாக்குவது மற்றும் உயர் தெளிவுத்திறன் புகைப்படங்களை எடுப்பது மட்டுமே.

“அதற்குப் பிறகு நாங்கள் எங்கள் அடுத்த திட்டத்தின் பணியை தொடங்கினோம். இலக்கைப் பார்ப்பது மட்டுமல்ல, அதைச் சுற்றி வளைக்கவும், தேவைப்பட்டால் அதை அழிக்கவும் முடியும் திறன் ராணுவத்துக்குத் தேவைப்பட்டது.

அதன் பிறகு ஆராய்ச்சி செய்து ஷாப்பர்-2 ட்ரோன் தொடர்பான வேலைகள் துவக்கினோம்,” என்று அசத் கமால் விளக்கினார்.

“நீங்கள் ஒரு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் போது அல்லது அதை வேறொரு நாட்டிலிருந்து பெறும்போது, சில காலத்திற்குப்பிறகு அந்த நாடு உங்களுக்கு தொழில்நுட்பத்தை வழங்குவதை நிறுத்தினால், உங்கள் தயாரிப்பு முழுமையடையாமல் நின்றுபோகும்.

பின்னர் அதை நீங்களும் பயன்படுத்த முடியாது. அல்லது அதை மீட்டெடுக்கவும் முடியாது. இந்த ஆளில்லா விமானத்தின் அடிப்படை தொழில்நுட்பம் பாகிஸ்தானிலேயே உருவாக்கப்பட்டது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஷாப்பர்-2 , 120 நாட்ஸ் வேகத்தில் பறக்கக்கூடியது. இதன் டேக் ஆஃப் வேகம் 80 நாட்ஸ் முதல் 85 நாட்ஸ் வரை இருக்கும்.

பாகிஸ்தானின் முன்னோடி ஆளில்லா விமானம் ஷாப்பர்-2 ஆகும். இது இப்போது பாகிஸ்தானின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் இணைக்கப்பட்டு விட்டது.

அதை கண்காட்சியில் பார்வைக்கு வைத்து, மற்ற நாடுகளுக்கு விற்கவும் அந்நாட்டு அரசு விரும்புகிறது.

“ஷாப்பர்-2” ஆயிரம் கிலோமீட்டர் வரை பறந்து தனது இலக்கைத் தாக்கவல்லது. இந்த ஆளில்லா விமானம் செயற்கைக்கோளை தொடர்பு கொள்ள முடியும். இரவோ, பகலோ எந்த நடவடிக்கையிலும் வெற்றிகரமாக செயல்படும். இந்த ட்ரோன் தனது இலக்கை லேசர் மூலம் கண்டறிந்து, பின்னர் ஏவுகணை மூலம் குறிவைக்கிறது,”என்று அசத் கமால் விளக்குகிறார்.

ஷாப்பர்-2 , 120 நாட்ஸ் வேகத்தில் பறக்கக்கூடியது. இதன் டேக் ஆஃப் வேகம் 80 நாட்ஸ் முதல் 85 நாட்ஸ் வரை இருக்கும். அதன் பறப்பு வேகம் 80-85 நாட்ஸாக இருக்கும்.

இதன் ஆரம் சுமார் 1050 கிலோமீட்டர்கள் மற்றும் தரவு இணைப்பு வரம்பு 300 கிலோமீட்டர்கள். இந்த ஆளில்லா விமானம் பறக்கும் போது தனதுஇயந்திரத்தை மறுதொடக்கம் செய்யும் திறனையும் கொண்டுள்ளது.

Global Industrial & Defense Solutions இன் பிற ட்ரோன் தயாரிப்புகளில் ஷாப்பர்-1, இகாப் ட்ரோன் சீரீஸ் ஆகியவை அடங்கும். அவை வெவ்வேறு வேகம், தூரம் மற்றும் ஆயுதங்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டவை.

அபாபில் ட்ரோன் சீரீஸ்

கராச்சியில் நடைபெற்று வரும் கண்காட்சியை பாகிஸ்தான் முப்படைகளின் தலைமைத் தளபதிகளும் பார்வையிட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் ஆயுதத் தொழிற்சாலை முன்பு ‘அபாபில்’ என்ற பெயரில் கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை உருவாக்கியது. தற்போது இந்த ஆளில்லா விமானங்களும் தாக்குதல் ட்ரோன்களாக மாற்றப்பட்டுள்ளன. அவற்றிலும் தற்போது ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் உள்ளூர் மக்கள் ட்ரோனுக்கு ’அபாபில்’ என்று பெயரிட்டனர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

”அபாபில் சீரீஸ் ட்ரோன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இந்த எல்லா ஆளில்லா விமானங்களும் இரவிலும், பகலிலும் செயல்படும் திறன் கொண்டவை,”என்று பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையின் ட்ரோன் பிரிவின் தலைவர் ரியாஸ் அகமது பிபிசியிடம் தெரிவித்தார்.

”அபாபில் ஃபைவ் ஆளில்லா விமானம் ஐந்து கிலோ வரை எடையை சுமக்கக்கூடியது. இதில் இரண்டு மோர்டார் குண்டுகளை பொருத்த முடியும். ஒரு மோர்டாரின் அளவு 16 மிமீ மற்றும் மற்றொன்று 18 மிமீ. இது முப்பது கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. அதன் வேகம் மணிக்கு நாற்பத்தைந்து கிலோமீட்டர். இந்த ஆளில்லா விமானம் ஒன்றரை மணி நேரம் பறக்க முடியும்,”என்றும் அவர் கூறினார்.

அபாபில் வி-5,எங்கு வேண்டுமானாலும் செங்குத்தாக பறக்கத்தொடங்கவோ, தரையிறங்கவோ முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

மணிக்கு 120 கிமீ வேகத்தில் பறக்கக்கூடிய இந்த அதிவேக ஆளில்லா விமானம், இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை கண்காணிப்பு பணியை செய்யமுடியும். இது சேமிப்புத் திறனையும் கொண்டுள்ளது. ஐந்து கிலோகிராம் வெடிமருந்துகளை இந்த ட்ரோனால் எடுத்துச் செல்ல முடியும். எந்த ஒரு இலக்கையும் தாக்க இதை பயன்படுத்தலாம்.

அபாபில்-10 ஆளில்லா விமானம் பத்து கிலோ எடையுள்ள ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடியது. 30 கிலோமீட்டர்கள் வரை உள்ள இலக்குகளை தாக்கவல்லது.

இது 3000 மீட்டர் உயரம் வரை பறக்க முடியும், அதேசமயம் ஒரு கிலோமீட்டர் உயரத்தை இது எட்டிய பிறகு அதை மனித கண்களால் பார்க்க முடியாது. இந்த மூன்று ட்ரோன்களையும் ஒரே ஆபரேட்டரால் இயக்கமுடியும்.

”அவற்றைக் கட்டுப்படுத்த மூன்று வழிகள் உள்ளன. முதலாவது ஒரு போர்ட்டபிள் யூனிட். அது எங்கிருந்து வேண்டுமானாலும் பறக்கத்தொடங்கமுடியும்.

இரண்டாவது இரண்டு ஆபரேட்டர்களைக் கொண்ட இரட்டை கட்டுப்பாட்டு யூனிட். ஒருவர் துப்பாக்கி சூடு கேமராவை கட்டுப்படுத்துவார். மற்றொருவர் வரைபடத்தின். உதவியுடன் ட்ரோனை இயக்குவார் ,” என்று ரியாஸ் அகமது கூறினார்.

மூன்றாவது வழி ஒற்றைப் பயன்பாட்டுக்கானது. இதில் இரட்டைத் திரைகள் உள்ளன. அவற்றில் ஒன்று கேமரா ஃபீட் மற்றும் மற்றொன்றில் வரைபடத்தின் உதவியுடன் திசைகளை வழங்கும் வசதி உள்ளது.

புதிய தொழில்நுட்பம் இரண்டு வழிகளில் அளவிடப்படுகிறது அல்லது சோதிக்கப்படுகிறது என்று பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையின் செய்தித் தொடர்பாளர் சல்மான் கான் கூறுகிறார்.

பாகிஸ்தானில் பனிப்பகுதிகள், பாலைவனங்கள், கடல் மற்றும் சமவெளிப் பகுதிகள் உள்ளன. போர், வானிலையையும் நிலப்பரப்பையும் பார்ப்பதில்லை என்று குளோபல் இன்டஸ்ட்ரியல் அண்ட் டிஃபென்ஸ் சொல்யூஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அசத் கமால் கூறுகிறார்.

“பாகிஸ்தான் ராணுவத்திற்கு மிகவும் கடுமையான தேவைகள் உள்ளன. மேலும் எங்களிடம் மைனஸ் டிகிரி உள்ள நிலப்பரப்பு முதல் மிக வெப்பமான பாலைவன நிலப்பரப்பு வரை உள்ளது. எனவே எங்கள் ராணுவத்தில் எந்த ஆயுதம் இணைக்கப்படுகிறதோ,அது உலகின் எந்த ராணுவத்திலும் சேரமுடியும்,’ என்று அவர் குறிப்பிட்டார்.

”இந்த ட்ரோன்கள் நாட்டின் வடக்குப் பகுதிகளிலும் சோதிக்கப்படுகின்றன. அவை மழை மற்றும் பாலைவனத்திலும் சோதிக்கப்படுகின்றன. அதன் பிறகு அவை சோதனை பறப்பை வெற்றிகரமாக முடித்து பாகிஸ்தான் ராணுவத்தின் படைகளில் சேருகின்றன என்று அவர் கூறுகிறார்.

புதிய தொழில்நுட்பம் இரண்டு வழிகளில் அளவிடப்படுகிறது அல்லது சோதிக்கப்படுகிறது என்று பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையின் செய்தித் தொடர்பாளர் சல்மான் கான் கூறுகிறார்.

ஒன்று, இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தும் நபரின் தேவைகள் என்ன என்பது. ஆயுதத்தை தயாரிப்பவர் மற்றும் பயன்படுத்துபவர் இருவரும் சேர்ந்து அதை மதிப்பீடு செய்து, அது தொழில்நுட்ப ரீதியாக சோதிக்கப்படுகிறது.

இது தவிர, பாகிஸ்தானுக்குள்ளேயே உருவாக்க வேண்டும் என்றால், தற்போதுள்ள தொழில்நுட்பம் என்ன, என்னென்ன புதிய பொருட்களை வாங்க வேண்டும் என்ற வகையிலும் மதிப்பீடு செய்யப்படுகிறது.

எந்த நாடுகள் பாகிஸ்தானிடம் ஆயுதங்களை வாங்குகின்றன?

இந்த ஆயுத கண்காட்சியில் துருக்கியின் ஆளில்லா விமானங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்கள் துருக்கி ராணுவத்துடன் கூடவே அதன் நட்பு நாடுகளாலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட நபரை குறிவைப்பது முதல் ஏவுகணையை ஏவுவது வரை இவை பயன்படுத்தப்படுகின்றன.

இது தவிர, சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் பல வகையான ஆளில்லா விமானங்கள் மற்றும் புதிய ஆயுதங்கள், இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. அவற்றில் புதிய ட்ரோன்களின் மாதிரிகளும் உள்ளன. சீனாவின் ஆளில்லா விமானத்தில் பல வகையான ஆயுதங்களை பொருத்தமுடியும்.

உலக அளவில் ராணுவ ஆயுதங்களை தயாரித்து விற்கும் மற்றும் வாங்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று.

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை 16க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக குளோபல் இன்டஸ்ட்ரியல் அண்ட் டிஃபென்ஸ் சொல்யூஷனின் தலைமை நிர்வாக அதிகாரி அசத் கமால் கூறுகிறார்.

வங்கதேசம், இலங்கை, மத்திய ஆசிய நாடுகள், மலேசியா, ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா, காங்கோ, தென் அமெரிக்க நாடான பெரு போன்றவை இதில் அடங்கும்.

ஷாப்பர்-2 ஏற்றுமதியிலும் இந்த நிறுவனம் ஆர்வமாக உள்ளது. அதே நேரத்தில், தங்களின் ‘அபாபில் தொடர்’ விரைவில் பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் என்றும், சில வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் அதில் ஆர்வம் காட்டியுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை கூறுகிறது.

பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை, முப்பது கோடி டாலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆயுதங்களை நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது என்று அதன் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version