பிரித்தானிய அரசின் சம்மதமின்றி, ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த பிரித்தானிய உச்ச நீதிமன்றம் தடை
ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்து பிரித்தானிய அரசின் சம்மதமின்றி மீண்டும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு பிரித்தானிய உச்ச நீதிமன்றம் இன்று (23) தடை விதித்துள்ளது.
பிரிட்டனிலிருந்து ஸ்கொட்லாந்து தனிநாடாக பிரிந்து செல்வது தொடர்பாக 2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து மக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 55 சதவீதமானோர் பிரிவினைக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், ஸ்கொட்லாந்து தனிநாடாக வேண்டுமா எனக் கேட்டு, அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் ஸ்கொட்லாந்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்கெட்லாந்தின் ஆளும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி (எஸ்என்பி) அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
பிரித்தானிய அரசின் சம்மதமின்றி இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது .
இது தொடர்பாக பிரித்தானிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
இதன் தீர்ப்பு இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன்படி, பிரித்தானிய அரசின் சம்மதமின்றி பிரிவினை தொடர்பாக ஸ்கொட்லாந்து அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த முடியாது என உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளனர்.
பிரித்தானிய உச்ச நீதிமன்த்தின் தலைவரான ரொபர்ட் றீட், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் பிரித்தானிய பாராளுமன்றத்துக்கே உள்ளது எனத் தெரிவித்தார். இவரும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது,
ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் மதிப்பதாகவும், ஆனால், தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன்
சுயநிர்ணய உரிமையானது அடிப்படையானதும் பிரிக்கப்பட முடியாததுமான உரிமை என ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் வாதிட்டனர். ஸ்கொட்லாந்துடன், கியூபெக் மற்றும் கொசோவோவையும் அவர்கள் தொடர்புபடுத்தினர்.
ஆனால், சுயநிர்ணய உரிமை தொடர்பான சர்வதேச சட்டமானது முன்னாள் காலனித்துவ நாடுகளுக்கு அல்லது இராணுவ அடக்குமுறைக்குட்ட அல்லது, அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் மறுக்கப்பட்ட குழுக்களுக்கே பொருந்தும் என பிரித்தானிய உச்ச நீதிமன்றத்தின் தலைவர் ரொபர்ட் றீட் கூறினார்.
கொவிட் -19 பிரச்சினைகள் தணிந்தபின், ஸ்கொட்லாந்தில் சட்டபூர்வமான சர்வஜன வாக்கெடுப்பு நட்ததப்படும் என 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்கொட்லாந்து பாராளுமன்றத் தேர்தல்களின் போது நிகோலா ஸ்டர்ஜன் தலைமையிலான ஸ்கொட்லாந்துதேசிய கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.