கனடா 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடியேற்றங்களை அனுமதிப்பதாக இலக்கு நிர்ணயித்துள்ளது. வயது முதிர்ந்த பேபி பூமர் தலைமுறையால் (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறப்பு விகிதம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பிறந்த தலைமுறையினர்) அதன் பொருளாதாரத்தில் எஞ்சியிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கனடா குடியேற்றத்தை எதிர்பார்க்கிறது. ஆனால், இவ்வளவு வெளிநாட்டவர்களின் வருகையை அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொள்ளவில்லை.
நவம்பர் மாதத் தொடக்கத்தில், கூட்டாட்சி அரசு 2025ஆம் ஆண்டுக்குள், ஓராண்டுக்கு ஐந்து லட்சம் குடியேறுபவர்கள் என்ற கணக்கில் 15 லட்சம் குடியேற்றங்களை வரவேற்கும் ஒரு தீவிரமான திட்டத்தை அறிவித்தது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனில் குடியேறுகிறவர்கள் எண்ணிக்கையைவிட 8 மடங்கும், அமெரிக்காவில் குடியேறுவோர் போல 4 மடங்கும் கனடாவில் குடியேற்றம் நடக்கும்.
பல புதிய குடியேற்றங்களை வரவேற்பதில் கவலைக்குரிய விஷயங்களும் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது.
குறையும் பிறப்பு விகிதம்
பல ஆண்டுகளாக, மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தை வளர்த்துகொள்வதற்காக கனடா குடியுரிமை இல்லாமல் காலவரையறையின்றி நாட்டில் தங்குவதற்கு உரிமையுள்ள நிரந்தர குடியிருப்பாளர்களை ஈர்க்க முயன்று வருகிறது.
கடந்த ஆண்டு, அந்நாடு 405,000 நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்றது. இது அதன் வரலாற்றில் மிக அதிகமான எண்ணிக்கை.
பல மேற்கத்திய நாடுகளைப் போலவே, கனடாவிலும் வயதானோரின் மக்கள் தொகை மற்றும் குறைவான பிறப்பு விகிதம் உள்ளது. அதாவது நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டு வர வேண்டும்.
குடியேற்றம் செயலூக்கம் கொண்ட மக்கள்தொகையின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. அது 2032ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்புக்குப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் தனித்துவமான பகுதி
இன்று, நான்கு கனடியர்களில் ஒருவர் புலம்பெயர்ந்தவராக நாட்டிற்கு வந்தவராக உள்ளார். இது ஜி7 நாடுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கை. “உலகின் உருகிக் கொண்டிருக்கும் பகுதி” என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் 14% மட்டுமே குடியேறியவர்கள்.
மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானியான ஜெஃப்ரி கேமரூன், கனடா போன்ற பல நாடுகள் குறைந்த பிறப்பு விகிதங்கள், வயதான மக்கள்தொகை போன்றவற்றை எதிர்கொண்டாலும், எந்தவொரு குடியேற்ற முறையின் வெற்றியும் மக்கள் ஆதரவைப் பொறுத்தே அமையும் என்று நம்புகிறார்.
“குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் காரணியாக பெரும்பாலான நாடுகளில் பொதுமக்களின் கருத்து இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
கனடா குடியேற்ற திட்டம்
அமெரிக்காவில் தெற்கு எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இருக்கும் வேலைவாய்ப்புகளைவிட அதிகமான புலம்பெயர்ந்தோர் இருப்பது குறித்துப் பரவலான கவலை ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், கனடாவில் வரலாற்றுரீதியாக குடியேற்றத்திற்கு மிக அதிகமான ஆதரவு இருந்துள்ளது.
“கனடாவுக்கான குடியேற்றம் அரசாங்கத்தால் நன்கு நிர்வகிக்கப்படுகிறது, நாட்டின் நலன்களுக்கு அது பங்களிக்கும் வகையில் நிர்வகிக்கப்படுகிறது என்பதில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அதற்கு ஒரு காரணமென்று நான் கருதுகிறேன்,” என்று கேமரூன் விளக்குகிறார்.
இருப்பினும், குடியேற்றத்தில் எந்தப் பிரச்னையும் இல்லையென்று இதற்குப் பொருளில்லை.
சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்க எல்லையில் குடியேற்றம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் 2018இல் ஒரு புதிய வலதுசாரி கட்சி தோன்றியது. கனடாவின் மக்கள் கட்சி 2019ஆம் ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின்போது இதை தேசிய உரையாடலின் ஒரு பகுதியாக வைத்திருந்தது.
அரசாங்கம், ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேரை புதிதாகக் குடியேற்றும் (2021ஆம் ஆண்டை விட 25% அதிகம்) தனது தீவிர இலக்குகளை அறிவித்தபோது, தனது சொந்த குடியேற்ற வரம்புகளை நிர்ணயிக்கும் உரிமை பெற்ற கியூபெக் மாகாணம், ஆண்டுக்கு 50,000 பேருக்கு மேல் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெளிவுபடுத்தியது. நாட்டின் மக்கள்தொகையில் 23% பேர் வாழும் கியூபெக் மாகாணம், 10% வெளிநாட்டவரை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.
கியூபெக் பிரதமர் பிரான்சுவா லெகோல்ட், அதிகமான புலம்பெயர்ந்தோர் வருவது இந்த மாகாணத்தில் பிரெஞ்சு மொழியை பலவீனப்படுத்தும் என்று தான் கவலைப்படுவதாகக் கூறினார்.
“50,000 பேர் குடியேறும்போதே கூட பிரெஞ்சு மொழியின் வீழ்ச்சியைத் தடுப்பது கடினம்,” என்று அவர் கூறினார்.
கனடாவில் வளர்ச்சிக்கு அதிக இடம் இருக்கலாம் என்பது உண்மையாக இருந்தாலும், சில இடங்கள் அதிக அழுத்தத்தை உணர்கின்றன. நாட்டின் சுமார் 10 சதவீத மக்கள் வசிக்கும் டொரன்டோ, வான்கூவர் போன்ற பெரிய நகரங்கள், மலிவு விலையில் வீட்டுவசதியைப் பெறுவதில் நெருக்கடியைச் சந்திக்கின்றன.
ஏறக்குறைய பாதிப் பேர் (49%) இந்த இலக்குகள் மிக அதிகம் என்று வாதிட்டனர், 31% பேர் இது சரியான இலக்கு தான் என்று வாதிட்டனர்.
கனடிய அணுகுமுறை
பொருளாதார குடியேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது மேற்கத்திய உலகில் கனடா தனித்துவமாக இருப்பதற்கான மற்றொரு காரணம். நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களில் பாதிப் பேர் திறமையின் அடிப்படையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டுக்குள் இந்த அளவு 60 சதவீதத்தை எட்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
கனடாவில் கட்டமைப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதும் இதற்கான காரணத்தில் ஒரு பகுதி என்று கேமரூன் விளக்குகிறார்.
கனடா, 1960களில் ஒதுக்கீட்டு முறையிலிருந்து புள்ளிகள் அடிப்படையிலான அமைப்புக்கு மாறியது. இந்த முறை கனடாவின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் உயர்-திறன் வாய்ந்த புலம்பெயர்ந்தோருக்கு முன்னுரிமை அளித்தது.
“அதே கொள்கை இன்றும் வழிநடத்துகிறது,” என்று பிபிசியிடம் அவர் கூறினார்.
கனடா குடியேற்ற திட்டம்
பிரிட்டனில், நிரந்தர குடியிருப்பாளர்களில் நான்கில் ஒருவருடைய காலவரையறையின்றித் தங்குவதற்கான உரிமை, சற்று அதிகமாகச் செய்யும் பொருளாதாரரீதியிலான பங்களிப்பால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அமெரிக்காவில், 20% கிரீன் கார்டுகள் மட்டுமே அந்தக் காரணத்திற்காக வழங்கப்படுகின்றன. இரண்டு நாடுகளும் பொருளாதாரரீதியிலான புலம்பெயர்ந்தோரின் விகிதத்தை அதிகரிக்க நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ளன. பெரும்பாலான பொருளாதார குடியேற்றங்களில் அவர்களுடைய முதலாளிகள் நிதியுதவி செய்ய வேண்டும்.
கனடாவில், வேலைவாய்ப்போடு வருவது உங்களுடைய மொத்த புள்ளிகளில் கணக்கில் எடுக்கப்படும். ஆனால் அது அவசியம் என்றில்லை.
கனடா தனது இலக்கினை அடைய முடியுமா?
கனடா மற்ற பெரிய நாடுகளைவிட திறமையான புலம்பெயர்ந்தோரை வரவேற்பதோடு மட்டுமின்றி, 2021இல் 20,428 அகதிகளை ஏற்றுக்கொண்டு, அகதிகள் குடியேற்றத்திற்கான சிறந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
அந்நாடு எதிர்காலத்திற்கான லட்சிய இலக்குகளை நிர்ணயித்திருந்தாலும், அது எப்போதும் தனது சொந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை வரலாறு காட்டுகிறது.
2021ஆம் ஆண்டில், கனடா சுமார் 59,000 அகதிகளை குடியேற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தது. இது முன்னர் ஏற்றுக்கொண்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகம்.
கனடிய பொது ஒளிபரப்பு நிறுவனமான சிபிசிக்கு அளித்த பேட்டியில், குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள கோவிட் பேரிடர் தொடர்பான எல்லை மூடல் காரணமாகப் பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறினார்.
2023ஆம் ஆண்டளவில், 76,000 அகதிகளை குடியேற்ற கனடா இலக்கு வைத்துள்ளது.