இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள சீனா தொடர்ந்து தயங்கிக் கொண்டு இருப்பதற்கான காரணம் இதுதான்.
அதாவது இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக கடன் மறுசீரமைப்பு முறையைப் பின்பற்றுவதால் சீனா அதனை பின்பற்ற தயங்குகிறது.
அதாவது மேலைத்தேய நாடுகள் பின்பற்றும் ஒரு முறையை தாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்பது சீனாவின் வாதமாகும்.
அதுமட்டுமின்றி இலங்கையுடன் கடன் மறு சீரமைப்பு செய்து கொள்ளப்படும் பட்சத்தில் தான் கடன் வழங்க இருக்கின்ற ஏனைய நாடுகளுடனும் கடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டி ஏற்படும் என்பதாலும் அதற்கு சீனா தயங்குகிறது.
இலங்கையை மீட்க முழுமையான உதவி வழங்குவதாக கூறுகின்ற சீனா கடன் மறு சீரமைப்பு செய்து கொள்வதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்காமல் இருக்கின்றது.
நாணய நிதியத்துடன் பேச்சு
இலங்கை தற்போது எதிர்க்கொண்டிருக்கின்ற டொலர் நெருக்கடியை சமாளிப்பதற்கும் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேற்கொள்வதற்காகவும் இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் ஒரு நீண்டகால அடிப்படையிலான கடன் உதவியை எதிர்பார்த்திருக்கின்றது.
அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி வழங்கப்படும்போது சர்வதேச நம்பிக்கையை இலங்கை மீண்டும் பெற்று சர்வதேச நாடுகளிடமும் சர்வதேச நிறுவனங்களிடமும் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அந்தவகையில் சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் கடந்த ஆறு மாத காலமாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற நிலையில் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகஸ்தர் மட்டத்திலான தரப்பினருடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அந்த முடிவை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுவதுடன் அங்கு அது நிறைவேற்றப்பட வேண்டும்.
ஆனால் அந்த முடிவு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவில் நிறைவேற்றப்படுவதற்கு ஒரு முக்கியமான விடயத்தை செய்ய வேண்டியிருக்கின்றது.
அது என்ன? இலங்கையானது ஏற்கனவே இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் இலங்கையிடம் பிணைமுறிகளை பெற்றுக்கொண்டு கடன் வழங்கிய சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும்.
கடன் மறுசீரமைப்பு செய்து அந்த ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும் பட்சத்திலேயே இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும்.
கடன் மறுசீரமைப்பு முறைகள்
கடன் மறுசீரமைப்பு என்பது இலங்கைக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பாக ஒரு நிவாரண நடைமுறையை பின்பற்றுவதற்கு இணங்குதலை குறிக்கிறது.
அதாவது ஏற்கனவே வழங்கிய கடன்களுக்கான வட்டி வீதங்களை குறைத்தல், கடனை செலுத்துவதற்கான காலத்தை அதிகரித்தல் மற்றும் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கிய கடன்களிலிருந்து ஒரு தொகையை குறைத்தல் போன்றவற்றை செய்வதே கடன் மறுசீரமைப்பு எனப்படுகின்றது.
கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வது என்பது இலகுவானதல்ல. இலங்கைக்கு கடன் வழங்கிய சகல நாடுகள், நிறுவனங்கள், வங்கிகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டும். பல நாடுகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு கடன் வழங்கிய சகல நாடுகள், நிறுவனங்கள், வங்கிகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான பேச்சுக்கள் இலங்கையினால் நியமிக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்றன. பல தரப்புக்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
சீனாவின் தயக்கம்
ஆனால் சீனா இன்னும் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதற்கு தயார் என்று அறிவிக்கவில்லை. சீனா சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த செயற்பாடுகளுக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்து இருக்கிறது.
ஆனால் கடன் மறுசீரமைப்பு செய்ய விருப்பமா இல்லையா என்பதனை அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? இது முக்கியமாகும்.
இந்த காரணத்தை அறிந்துகொள்வது முக்கியமாகவுள்ளது. பொதுவாக சீனா தான் கடன் வழங்கிய எந்தவொரு நாட்டுடனும் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்வதில்லை.
இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக கடன் மறுசீரமைப்பு முறையைப் பின்பற்றுவதால் சீனா அதனை பின்பற்ற தயங்குகிறது.
அதாவது மேலைத்தேய நாடுகள் பின்பற்றும் ஒரு முறையை தாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்பது சீனாவின் வாதமாகும் என்பது கருதப்படுகின்றது.
ஆனால் சீனா உட்பட சகல நாடுகளும் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ளும் பட்சத்தில் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு புதிய நீண்டகால கடனை (2.9 பில்லியன் டொலர்) வழங்கும். இலங்கை கடன்களை மீள்செலுத்த முடியாது என்று வங்குரோத்து நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதால் கடன்மறுசீரமைப்பு என்பது கட்டாயமாகின்றது.
எனவே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் இந்த செயற்பாட்டில் சீனா முக்கியமான நாடாக இருக்கிறது. சீனா என்ன செய்யப்போகிறது என்பதே மிக மிக முக்கியமாக இருக்கின்றது.
இந்தியா ஜப்பான் மற்றும் ஏனைய கடன் வழங்கிய நாடுகள் ஆசிய அபிவிருத்தி வங்கி உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் கூட இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள தயாராகி விட்டன. அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டன.
இதற்கு சீனா இதுவரை தயக்கம் காட்டியே வருகிறது. இது தொடர்பில் இலங்கை ஏற்கனவே சீனாவுடன் இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றது.
இந்நிலையில் சீனா இலங்கையுடன் கடன் மறு சீரமைப்பு செய்து கொள்ள இணங்கும் பட்சத்தில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள ஒரு நாடு தயங்கினாலும் நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்காது.
எனவே சீனாவின் முடிவிலேயே இலங்கையில் இந்த சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் நிலை தங்கியிருக்கின்றது. சீனா என்ன செய்யப்போகிறது ?
ரொபட் அன்டனி