இலங்கை பெண்களை ஓமனில் விற்பனை செய்த குற்றச்சாட்டப்பட்டுள்ள ஓமனிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய மூன்றாவது செயலாளர் ஈ.துஷான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13ம் தேதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஓமனின் இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய மூன்றாவது செயலாளர் ஈ.துஷானை, இலங்கை அரசாங்கம் பணிநீக்கம் செய்தது.

இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட துஷானின் ராஜதந்திர கடவுச்சீட்டு, ரத்து செய்யப்பட்டு, அவரை நாட்டிற்கு மீண்டும் வருகைத் தருமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த அதிகாரி, ஓமனின் மஸ்கட் நகரிலிருந்து இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத் தந்த அவரை, விமான நிலைய வளாகத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிகாரியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து, இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஓமனில் நடந்தது என்ன?

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஓமனுக்கு வேலைவாய்ப்புக்களுக்கு சென்ற பெண்களை பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்தி வந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு இந்த மாத முதல் பகுதியில் தகவல் கிடைத்திருந்தது.

இதையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல், வர்த்தக விசாரணை மற்றும் சமுத்திர குற்றச் செயல் விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி, சுற்றுலா விசாவின் மூலம் ஓமனுக்கு பெண்களை அழைத்து சென்று, அங்கு பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவொன்று ஓமன் நோக்கி பயணித்திருந்தது.

பல்வேறு இன்னல்களை அனுபவித்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தமது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை, தாம் கடமையாற்றிய தொழில் வழங்குநர்கள் பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனால், குறித்த பெண்களுக்கு மீண்டும் தாயகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் தொழில் ஈடுபடுத்தல், அதிக வேலைகளை செய்ய வைத்தல், துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளமை, விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் பல இலங்கையர்கள் தொடர்புப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், அண்மையில் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதேவேளை, ஆட்கடத்தல் சம்பவத்துடன் இலங்கை அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளதாக ஓமனிலுள்ள பெண்கள் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.

இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களில் ஓமனிலுள்ள இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய மூன்றாவது செயலாளர் ஈ.துஷானும் ஒருவராவார். இந்த நிலையிலேயே, குறித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, நாட்டிற்கு வரவழைக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஓமனில் இலங்கை பெண்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம், பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி இலங்கை பெண்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version