மனநலம் குன்றிய தனது 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக கூறப்படும் தந்தைக்கு 107 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து இந்திய கேரளா மாநில பத்தனம்திட்டாவில் உள்ள போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டாவில் ஒரு 45 வயது நபரின் மனைவி நீண்ட காலத்திற்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்த பின்னர், 13 வயது மனநலம் பாதித்த மகளை தந்தை வளர்த்து வந்துள்ளார். அப்போது பல சந்தர்ப்பங்களில் மகள் என்றும் பாராமல் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சிறுமி தனது பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் தனது பாடசாலையில் உள்ள ஆசிரியர்களிடமும் இதைப் பற்றி கூறிய பின்னரே இந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி பல சந்தர்ப்பங்களில் அவரது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் கேரளா மாநில பத்தனம்திட்டாவில் உள்ள போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் ஜோன், குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று அறிவித்துள்ளார்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் நீதிமன்றம், குற்றவாளிக்கு 107 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 4 லட்சம் இந்திய ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version