ராமேஸ்வரம் அருகே வேதாளை மீனவ கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தண்ணீர் கேன்களில் அடைக்கப்பட்ட வெள்ளை நிற பவுடர் என்னவென்று தெரியாமல் கடந்த இரண்டு நாட்களாக ராமேஸ்வரம் தீவு பரபரப்பாக இருந்தது.

இந்த நிலையில், அந்த வெள்ளை பவுடர் அதிக விலைக்காக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த விவசாய உரம் என்று கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக படகு மூலம் சமையல் மஞ்சள், கஞ்சா, கடல் அட்டை, விவசாய உரம், கடல் குதிரை உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் ரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து உரம் கடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இலங்கைக்கு கடத்த இருந்த விவசாய உரம்

வேதாளையில் தண்ணீர் கேனில் பிடிபட்ட வெள்ளை பவுடர் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடலோர பாதுகாப்புக் குழும கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் புதன் கிழமை மாலை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த 28ஆம் தேதி இரவு 8 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த பஜிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது வாகனத்தில் கீழக்கரை சங்குளிகாரத் தெருவைச் சேர்ந்த சர்பராஸ் நவாஸ், ஜெயினுதீன் ஆகியோர் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கு இடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கு இடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால் அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள்.

மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதைப்பொருளோ வெடி மருந்தோ இல்லையென்பது விசாரணையில் தெரிய வந்தது.

மேற்படி நபர்கள் விவசாய உரத்தை மிக அதிக பண மதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரிய வந்தது.

இருப்பினும் இந்தச் செயல் சுங்கத்துறை சட்ட மீறலின் கீழ் வருவதால் மேற்படி நபர்கள் இருவரும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version