இந்தியா இதுவரை காலமும் இரசியாவின் படைக்கலன்களில் பெரிதும் தங்கியிருந்தது. இரசியாவிடமிருந்து வாங்கிய தொழில்நுட்பம் இந்திய உள்நாட்டுப் படைக்கல உற்பத்தியில் பாவிக்கப்படுகின்றது.
இந்தியாவி போர்த்தளபாட கொள்வனவில் 70% முதல் 85% வரை இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் படைக்கலன்களும் இரசியாவில் இருந்து வாங்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.
உக்ரேனில் இரசியா படும் பாட்டைப் பார்க்கும் போது இந்தியப் படையின் வலிமை கேள்விக்கிடமாக உள்ளது.
பாதுகாப்புச் செலவு
ஆண்டு தோறும் உக்ரேன் பாதுகாப்பிற்காக $5.4பில்லியனையும் பாக்கிஸ்த்தான் $10.3பில்லியனையும் செலவிடுகின்றது.
அதேவேளை இந்தியா $49.6பில்லியனையும் இரசியா $154பில்லியனையும் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் செலவிடுகின்றன.
இந்தியாவின் பாதுகாப்புச் செலவு பாக்கிஸ்த்தானிலும் பார்க்க ஐந்து மடங்காகவும் இரசியாவின் பாதுகாப்புச் செலவு உக்ரேனிலும் பார்க்க 28மடங்கு செலவு செய்கின்றது.
உக்ரேனுக்கும் இரசியாவிற்கும் இடையிலான பாதுகாப்புச் செலவு இடைவெளியிலும் பார்க்க பாக்கிஸ்த்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இடைவெளி மிகச்சிறியதே! உக்ரேனைக் கைப்பற்ற இரசியா படும் பாட்டைப் பார்க்கும் போது பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரைக் கைப்பற்ற இந்தியா மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
போர்த்தாங்கிகள்.
இந்தியாவின் போர்த்தாங்கிகளின் பெரும்பான்மையானவை இரசியாவின் T-72, T-90 ஆகும்.
உள்நாட்டு உற்பத்தி அர்ஜுண் தாங்கிகளும் இந்தியாவிடம் உள்ளன. இந்தியாவிடமுள்ள 1100 T-90 MBT போர்த்தாங்கிகளில் 310 இரசியாவில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்யப்பட்டவை.
ஏனையவை இரசியவினதும் பிரான்ஸினதும் உதவியுடன் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட T-90 பீஷ்மா தாங்கிகளாகும்.
உக்ரேன் போரில் இரசியா தனது 2840 தாங்கிகளில் 1200ஐ இழந்துள்ளது. இந்த இழப்பு உக்ரேனியர்களால் அழிக்கப் பட்டதாலும் சேதப்படுத்தப் பட்டதாலும் கைப்பற்றப் பட்டதாலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் சிலவற்றை உக்ரேனியர்கள் கைப்பற்றியுள்ளனர். எரிபொருள் இன்றி நின்ற இரசிய தாங்கியை உக்ரேனிய விவசாயி உழவு வண்டியில் கட்டி இழுத்து சென்றமை காணொலியாக வெளிவந்து இரசியர்களின் மானத்தை கப்பலேற்றியது.
இவற்றில் பெரும்பாலானவை சிறிய ஆளிலி விமானங்கள் மூலமாகவும் அமெரிக்காவின் ஜவலின் ஏவுகணைகளாலும் அழிக்கப்பட்டன.
துருக்கியின் TB-2
உக்ரேனில் இரசிய தாங்கிகளின் அழிப்பில் பெரும் பங்கு வகித்தவை துருக்கியின் TB-2 ஆளிலி விமானங்களாகும்.
துருக்கி அவற்றை பாக்கிஸ்த்தானுக்கு விற்பனை செய்துள்ளது. அவை பாக்கிஸ்த்தான் மூலமாக கஷ்மீரில் செயற்படும் தீவிரவாத அமைப்புக்களின் கைகளுக்கும் போய்ச் சேரலாம்.
அதனால் இந்திய தாங்கிகளின் வலிமை கேள்விக்குறியாகியுள்ளது.
துருக்கி பாக்கிஸ்த்தான் உறவு இந்தியாவிற்கு பாதகமாக அமையும்
உக்ரேன் துருக்கியின் ஆளிலிகளைப் பாவித்து இரசியாவின் பார ஊர்திகளையும் போர்த்தாங்கிகளையும் பெருமளவில் அழித்தது.
இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையில் அரசுறவியல் முரண்பாடு உள்ளது. கஷ்மீர் பிரச்சனையில் துருக்கி அதிக அக்கறை காட்டுகின்றது.
பாக்கிஸ்த்தானுக்கு துருக்கி தன் ஆளிலிகளை விற்பனை செய்யலாம். உக்ரேன் போர் அனுபவத்தை வைத்து துருக்கி தனது ஆளிலிகளை மேம்படுத்தலாம்.
அவை பாக்கிஸ்த்தானி கைகளுக்கு மட்டுமல்ல கஷ்மீர் விடுதலைக்கு போராடும் தீவிரவாத அமைப்புக்கள் கைகளுக்கும் போகலாம்.
வானாதிக்கம் செய்ய முடியாத இரசியா
இரசியாவால் இதுவரை உக்ரேனில் வானாதிக்கம் செய்ய முடியவில்லை. அதே நிலை இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கு எதிரான போரில் உருவாகலாம்.
சீனாவிற்கு எதிராக தாக்குதல் செய்வதற்கு தஞ்சாவூர் வான்படைத்தளத்தில் இரசியாவின் சுக்கோய்-31 விமானங்களை இரசிய அனுமதியுடன் இந்தியாவில் உருவாக்கி அவற்றிற்கு SU-31 MKI எனப் பெயரிட்டு நிறுத்தியுள்ளது.
இரசியப் போர் விமானங்கள் உக்ரேனில் செய்ய முடியாததை சீனாவிற்கு எதிராக செய்ய முடியுமா? உக்ரேனிடம் அமெரிக்கத் தயாரிப்பு F-16 போர்விமானங்கள் இல்லை ஆனால் பாக்கிஸ்த்தானிடம் 85 F-16 போர்விமானங்கள் உள்ளன.
எஸ்-400
இரசியாவின் வான் பாதுகாப்பு முறைமை
இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை பல சவால்களுக்கு நடுவில் இந்தியா வாங்குகின்றது.
இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையையும் தாண்டி உக்ரேனின் விமானங்களும் ஏவுகணைகளும், ஆளிலிகளும் இரசிய நிலப்பரப்பினுள் எல்லையை தாண்டி பல கிமீ வரை சென்று தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்தியாவின் வான் பாதுகாப்பு முறைமை சீனாவின் ஒலியிலும் பார்க்கப் பன்மடங்கு வேகத்தில் பாயும் சீனாவின் ஏவுகணைகளுக்கு தாக்குப் பிடிக்குமா?
ஈரானின் செலவு குறைந்த ஆளிலிகள்(Drones)
உக்ரேனியப் போரில் பெரிதும் நோக்கப்பட்டவை ஈரானிய மலிவான ஆளிலி விமானங்களாகும்.
இந்தியாவும் பாக்கிஸ்த்தானும். பாக்கிஸ்த்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் போர் நடந்தால் ஈரான் பாக்கிஸ்த்தானிற்கு இரகசியமாக தனது ஆளிலிப் போர்விமானங்களை விற்பனை செய்யும்.
உக்ரேன் போரில் பாவிக்கப்பட்ட Shahed-136 dronesகளிலும் பார்க்க தொழில்நுட்ப மேம்பாடு கொண்ட தனது ஆளிலிகளை ஈரான் பாக்கிஸ்த்தானுக்கு விற்பனை செய்வது இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவின்ன் ஜவலின் ஏவுகணைகளைப் போல் சீனாவும் Hongjian-12 என்னும் தோளில்வைத்து ஏவைக் கூடிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது.
அவை பெயர் குறிப்பிடப்படாத நாடு ஒன்றிற்கு 2020இல்ச் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
அது பாக்கிஸ்த்தானாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவை கஷ்மீர் “மீட்புப் போரில்” இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
2021-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதிய பாக்கிஸ்த்தானிய படைத்துறையின் உச்சத் தளபதி கமார் ஜாவிட் பஜ்வா உக்ரேனுக்கு சென்று உக்ரேன் எப்படி தனது படையினரையும் படைக்கலன்களையும் இரசிய ஆக்கிரமிப்பை எதிர் கொள்ள நிறுத்தியுள்ளது என்பதைப் பற்றி ஆய்வு செய்தார்.
உக்ரேனின் பல போர்த்தாங்கிகள் உட்பட்ட பல படைக்கலன்கள் எப்படி இயக்கப்படவுள்ளன என்பதையும் அவதானித்தார்.
இரசியாவிற்கு உலக அரங்கில் இருக்கும் வலிமை இந்தியாவிற்கு இல்லை
5900 அணுக்குண்டுகள், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிரந்தர உறுப்புரிமை, உலக எரிபொருள் சந்தையில் காத்திரமான பங்கை வகிக்கும் வலிமை, உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பு ஆகியவற்றைக் கொண்ட இரசியாவிற்கு இருக்கும் உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய வலிமை இந்தியாவிற்கு இல்லை.
எல்லாவற்றிலும் மேலாக இரசிய படையினரிலும் பார்க்க இந்தியப் படையினர் அதிக நாட்டுப்பற்றுடனும் அர்ப்பணிப்புடனும் போர் புரியக் கூடியவர்கள்
-வேல்தர்மா-