வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 110 பில்லியன் ரூபா நிலுவை தொகை செலுத்தப்படவுள்ளது.

மாதாந்தம் 10 மில்லியன் ரூபாவை எயார் லைன்ஸ் நிறுவனம் தற்போது செலுத்தி வருகிறது என மின் சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 110 பில்லியன் ரூபா நிலுவை தொகை செலுத்தப்படவுள்ளது.

இந்த நிலுவை தொகையை பெற்றுக் கொள்ள பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் 10 மில்லியன் ரூபா நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் 10 மில்லியன் ரூபா நிலுவை தொகை செலுத்தப்படவில்லை.

ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 30 பில்லியன் ரூபா நிலுவை தொகையை செலுத்தியுள்ளது. கடன் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க முடியாது என எயார் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன,நட்டமடையும் ஸ்ரீ லங்கன் எயார் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் மாதாந்தம் பல இலட்சம் ரூபா சம்பளம் பெறுகிறார்கள்.

நிலுவை தொகையை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை மாத்திரம் முன்னெடுக்க கூடாது நிலுவை கட்டண தாமதத்திற்கு தண்டபணம் அறவிடப்பட வேண்டும்.

ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் பல பில்லியன் ரூபாவை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தாத காரணத்தினால் கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது,இந்த சுமை சாதாரண மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுக் கொள்ள இந்த அரசாங்கம் தான் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.தற்போது முறைமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தற்போது கடனுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version