தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முதல் இரு குற்றச்சாட்டுக்களான 1940களில் கண்டிய சிங்களத் தலைமைகளே தரவந்த சமஷ்டியை எட்டி உதைத்தது யார்?

65:35என்ற ஜன பரம்பலுக்கு நியாயமே அற்ற 50:50 என்ற கோதாரி கோரிக்கையை முன்வைத்து பிரித்ததானியக்காரனே கைவிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார்?

என்பவற்றைப் பொறுத்தவரை மனோகணேசனின் கருத்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் தூரநோக்கு தரிசனம் அற்று செயற்பட்டுள்ளனர் என்பது தான்.

கொழும்பில் தமது சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சமே அதற்குக் காரணம் என்றும் அவர் இக்கட்டுரையாளரிடம் தெரிவித்திருந்தார். மனோகணேசனின் இக்கருத்துகளிலும் உண்மைகள் இல்லாமல் இல்லை.

சமஷ்டிக் கோரிக்கை 1920களில் எழுச்சியடைந்த கோரிக்கை. அப்போது தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் வளர்ச்சியடைந்திருக்கவில்லை.

ஆனாலும் முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்குமுறை இருந்தது. 1915ஆம் ஆண்டு சிங்கள – முஸ்லிம் கலவரமும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலைமை தமிழர்களுக்கும் ஏற்படலாமென தமிழ்த் தலைவர்கள் கருதியிருக்க வேண்டும். பாதுகாப்புக் கவசங்களை கட்டியெழுப்பியிருக்க வேண்டும்.

அது நடைபெறவில்லை. 1920களின் ஆரம்பத்தில் பிரதிநிதித்துவ பிரச்சினை வந்தபோது தமிழ் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறை தெரியத்தொடங்கியது.

அதன்போதாவது விழிப்படைந்திருக்கலாம். 1930களிலும் 1940களிலும் இந்திய வம்சாவழியினருக்கு எதிரான ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

அதன்போதும் தமிழ்த் தலைவர்கள் விழிப்படையவில்லை. 1949ஆம் ஆண்டு தந்தை செல்வா சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தாராயினும் அது காலம் கடந்ததாக இருந்தது.

அக்காலத்தில் தலைவர்கள் சரியான முடிவை எடுத்திருந்தாலும் தமிழ் மக்கள் ஆதரித்திருப்பார்கள் எனக்கூற முடியாது.

மக்கள் ஒடுக்குமுறையைத் தொட்டுணரக்கக்கூடிய நிலை வரும்போது தான் விழிப்படைந்து ஆதரிக்கத் தொடங்குவர்.

தமிழ்ச் சூழலில் மக்கள் பங்கேற்பு அரசியல் பலவீனமாக இருந்தமையும் விழிப்படைவதைத் தாமதப்படுத்தியது.

தந்தைசெல்வா 1949ஆம் ஆண்டு சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தாலும் 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் வரும் வரை தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை. 1952ஆம் ஆண்டு தேர்தலில் தந்தைசெல்வாவே தனது சொந்தத் தொகுதியான காங்கேசன்துறைத் தொகுதியில் தோல்வியடைந்திருந்தார்.

தனிச்சிங்களச் சட்டத்தை விடக்கொடிய ஒடுக்குமுறையாக இருந்தது சிங்களக் குடியேற்றங்கள் தான்.

கல்லோயாத்திட்டம் சுதந்திரத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்டாலும் சுதந்திரத்தின் பின்னரே சிங்கள மக்கள் குடியேறினர்.

இதற்குத் சமாந்தரமாக திருகோணமலைக் குடியேற்றங்களும் சுதந்திரத்தைத் தொடர்ந்தே முடுக்கி விடப்பட்டன.

இக்குடியேற்றங்கள் மக்கள் வாழாத காட்டுப் பகுதிகளில் இடம்பெற்றமையினால் மக்கள் தொட்டுணரக்கூடியதாக இருக்கவில்லை.

திருகோணமலை நகரக் குடியேற்றங்கள் தொட்டுணரக்கூடியதாக இருந்தாலும் புற்றுநோய்போல வெளித் தெரியாமல் வளர்ந்ததால் அடையாளத்தை ஆரம்பத்தில் காணமுடியவில்லை.

அடையாளம் தெரிந்தபோது அது தமிழ் மக்களின் கைகளுக்கு அப்பால் சென்றிருந்தது.

சமஷ்டி விவகாரத்தில் தந்தைசெல்வா சற்று முந்திக்கொண்டாலும் ஏனைய தலைவர்கள் மக்களுக்கு பின்னாலேயே நின்றனர்.

பொதுவாகத் தலைவர்கள் முன்னே மக்கள் பின்னே என்பது தான் வழமையாக இருந்தது. தமிழ்ச் சூழலில் மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே என்பதாகத் தான் வரலாறு இருக்கின்றது.

மக்களொரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்து செயற்படத் தொடங்கி நீண்டகாலத்தின் பின்னரே தலைவர்கள் அதனை கையிலெடுக்கும் நிலை உள்ளது.

தனிநாட்டுப் போராட்டத்தை தமிழ் இளைஞர்கள் 1968இலேயே எடுத்திருந்தனர். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி எட்டு வருடம் கழித்து 1976இலேயே அந் நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

எனவே மனோகணேசனின் குற்றச்சாட்டுக்களிலும் சில நியாயங்கள் இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

மனோகணேசனின் 3ஆம், 4ஆம், 5ஆம் குற்றச்சாட்டுக்கள் இலங்கை – இந்திய ஒப்பந்தம், 13ஆவது திருத்தம் இந்தியத் தலையீடு என்பவற்றுடன் தொடர்புடையவை. எனவே அம்மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து ஆராயலாம். அவரது மூன்று குற்றச்சாட்டுக்களும் இவைதான்.

1987இல் வடக்கு – கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை ஆரம்பித்துவைத்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை, மாகாணசபைகளை எட்டி உதைத்தது யார்?

இன்று “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்று 13ஐ ஆவது முழுமையாக அமுல் செய்யுங்களென ஓலமிடுவது யார்?

இந்திய நாட்டு பிரதமராக இருந்த – இருக்கவிருந்த ராஜீவையே போட்டுத்தள்ளிவிட்டு இப்போது இந்திய அரச தலைவர்களிடம் அதிகாரிகளிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைப்பது யார்?

இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

இதன் அடிப்படையில் 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி அரசியல் யாப்பிற்கான 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் யாப்பின் 17ஆம் அத்தியாயத்தின் “அ” பிரிவாகவும் உறுப்புரை 154 “அ” பிரிவாகவும் இத் திருத்தம் சேர்க்கப்பட்டது.

அதேவேளை மாகாணசபை முறையின் நடைமுறை செயற்பாடுகளுக்காக 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாணசபை சட்டமும் இதே தினத்தில் நிறைவேற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

எனவே மாகாணசபை முறையையும் அதனுடன் தொடர்பான விவகாரங்களையும் இலங்கை இந்திய ஒப்பந்தம், 13ஆவது திருத்தம், மாகாணசபைகள் சட்டம் என்பவற்றுடன் இணைத்தே புரிந்துகொள்ளப்படல் வேண்டும்.

முதலில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் பிறந்த களச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். 1985ஆம் ஆண்டு திம்பு மாநாடு இடம்பெற்றது.

இது தோல்வியில் முடிவடைந்தது. இதற்குப் பின்னர் விடுதலை இயக்கங்களை கைவிட்டுவிட்டு இந்தியா விவகாரத்தை தானே நேரடியாக கையாள முற்பட்டது. அதாவது அனுசரணையாளன் என்ற நிலையிலிருந்து விலகி பங்காளனாக மாறத் தொடங்கியது. தனிநாட்டுப்போராட்டத்தைக் கைவிடும்படி அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் கடுமையான அழுத்தங்கள் இந்திய அரசினாலும், இந்திய உளவுப் பிரிவினாலும் கொடுக்கப்பட்டன.

திம்பு மாநாடு முடிவடைந்து அடுத்தநாள் அன்ரன் பாலசிங்கம், சத்தியேந்திரா போன்றவர்களின் நாடுகடத்தலிலிருந்து இந்த அழுத்தங்கள் ஆரம்பமாகின.

ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அழுத்தங்களுக்கு பணிந்துபோயின. விடுதலைப்புலிகள் மட்டும் பணியவில்லை.

அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் இந்தியாவில் இருக்க பிரபாகரன் மட்டும் அழுத்தங்களுக்கு பணியக்கூடாது என்பதற்காக தாயகம் திரும்பினார்.

அதேநேரம் சமாந்தரமாக இலங்கை அரசிற்கும் தன்னுடன் ஒப்பந்தத்திற்கு வருமாறு இந்தியா அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அழுத்தங்களுக்குப் பணிந்து ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு சம்மதிக்க மீண்டும் கடுமையான வகையில் விடுதலை இயக்கங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க இந்தியா தொடங்கியது.

விடுதலைப் புலிகள் தவிர ஏனைய இயக்கங்கள் ஒப்பந்தத்தை ஏற்றன. பிரபாகரன் தாயகத்தில் இருந்தமையினால் பெரிய அழுத்தங்களைக் கொடுக்க முடியவில்லை.

ஒப்பந்தம் பற்றி எதுவும் பேசாமல் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றது என சூழ்ச்சிகரமாக பிரபாகரன் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டார். அங்கு ஒருவகை தடுப்புக் காவலிலேயே அவர் வைக்கப்பட்டார்.

ஒப்பந்தத்தை ஏற்கும்படி இந்திய உளவுப் பிரிவினா, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் என்போர் வற்புறுத்திய போதும் பிரபாகரன் ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லை.

தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜீ.ஆரைக் கொண்டு முயற்சித்த போதும் அதுவும் வெற்றி பெறவில்லை.

இறுதியில் ஒப்பந்தத்திற்கு முதல்நாள் நள்ளிரவு ராஜீவ்காந்தி நேரடியாகவே பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். ஒப்பந்தத்தை ஏற்க பிரபாகரன் மறுத்தார்.

“வடக்கு – கிழக்கு மாகாணம் நிரந்தரமாக இணைக்கப்படவில்லை. சிங்கள குடியேற்றங்கள் உள்ள கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவதை தாம் ஏற்க முடியாது” என்றெல்லாம் பிரபாகரன் கூறினார்.

அதற்கு பதில் அளித்த ராஜீவ்காந்தி “சிங்கள மக்களை சமாழிப்பதற்காகவே தற்காலிக இணைப்பு எனக் கூறப்பட்டது.

அது நிரந்த இணைப்பாக இருக்கும் அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஒருபோதும் நடக்காது” என்றும் கூறினார்.

இந்த உத்தரவாதத்தை எழுத்தில் தரும்படி கேட்டபோது ராஜீவ் காந்தி அதற்குப் பின்னடித்தார்.

எவ்வாறாவது இந்திய அரசின் தடுப்பிலிருந்து விலகி தாயகம் செல்ல வேண்டும் என்பதற்காகவே ஒப்பந்தத்திற்கு பிரபாகரன் எதிர்ப்பைக் காட்டவில்லை.

ஹொட்டலுக்கு திரும்பிய பிரபாகரன் “உத்தரவாதம் எவற்றையும் இந்தியா நிறைவேற்றப்போவதில்லை” எனக் குறிப்பிட்டார்.

இங்கே மனோகணேசன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் வடக்கு – கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை ஆரம்பித்து வைத்தது எனக் கூறுகின்றார்.

இந்த தற்காலிக இணைப்பு பற்றி 13ஆவது திருத்தத்தில் எதுவும் கூறவில்லை. பாராளுமன்றம் ஏதேனும் ஒரு சட்டமூலம் தீர்மானிக்கலாம் என்றுமட்டும் கூறப்பட்டிருந்தது. உண்மையில் இந்த தற்காலிக இணைப்புக் கூட அரசியல் யாப்பு அந்தஸ்தையோ, பாராளுமன்ற சட்ட அந்தஸ்தையோ பெறவில்லை.

வெறும் வர்த்தமானி அறிவிப்பாகவே இருந்தது. இந்த வர்த்தமானி அறிவிப்பே நீதிமன்றம் தற்காலிக இணைப்பைக் கூட பிரிப்பதனை இலகுவாக்கியிருந்தது. இவ்வாறு தெளிவாகக் கூறப்படாததினால் ஓர் அரசியல் விவகாரம் நீதிமன்ற பொருள்கோடல் விவகாரமாக குறுக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் மாகாண சட்டத்தின் 42ம் பிரிவின் 37(1), (4) உப பிரிவுகளின் கீழ் ஜனாதிபதியினால் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டமை அப்போது அமூலில் இருந்த அவசரகால விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்டமையினால் சரியான நிரந்த சட்டவலுவை கொண்டிருக்கவில்லை.

இதனால் வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பு முறையானதல்ல எனக் குறிப்பிடப்பட்டது இங்கே சட்டத் தவறே நடந்திருக்கின்றது. இந்தியா நினைத்திருந்தால் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து இத் தவறினை திருத்தி மீண்டும் வடக்கு – கிழக்கினை இணைத்திருக்கலாம்.

தமிழ் மக்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பங்காளிகள் அல்லர். தமிழ் மக்களின் பங்களிஅந்தஸ்தை இந்தியா பலவந்தமாக தான் எடுத்துக்கொண்டது.

ஒரு வகையில் பலவந்த நம்பிக்கைப் பொறுப்பாளனாக இருந்தது எனலாம். அந்தப் பொறுப்பில் நேர்மையாகவோ, அறநெறிகளின் படியோ இந்தியா நடக்கவில்லை.

இந்த சீத்துவத்தில் ஒரு தற்காலிக இணைப்பு வடக்கு – கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை எவ்வாறு கொடுத்தது என்பது மனோகணேசனுக்குத்தான் வெளிச்சம்.

இன்றும் கூட வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றி பேசுவதற்கு இந்தியா தயாராகவில்லை. வடக்கு – கிழக்கு பிரிப்பு யதார்த்தமானது அதற்கு இணங்கிப்போகவேண்டும் என்றே தமிழ் மக்களுக்கு போதிக்க முற்படுகின்றது.

மனோகணேசன் இது விடயத்தில் கையை நீட்டவேண்டியது இந்தியாவை நோக்கியே ஒழிய தமிழ்த் தேசிய சக்திகளை நோக்கியல்ல.

13ஆவது திருத்தத்தின் படி மாகாணசபைகளுக்கு சுயாதீன இருப்பு இல்லை. மத்திய அரசில் தங்கிநிற்கும் இருப்பே உண்டு அதாவது மத்திய அரசு தயவுபண்ணினால் மட்டும் மகாகாணசபைகள் செயற்படலாம். இல்லையேல் வெறும் பெயர்ப் பலகையாக இருக்கவேண்டியதுதான்.

மகாணசபைகளுக்கு போதியளவு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டவற்றில் சட்டம் இயற்றுவதற்குக் கூட பாராளுமன்றம் சட்டங்களை இயற்றிக் கொடுக்க வேண்டும் தவிர மகாணசபை நியதிச் சட்டங்களை இயற்றுவதற்கு ஆளுநர், சட்டமா அதிபர், உயர் நீதிமன்றம், ஜனாதிபதி, பாராளுமன்றம் என்று ஐந்து நிறுவனங்கள் தடையாக உள்ளன.

பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்திற்கு தடைகள் பெரிதாக இல்லை. ஆனால் மாகாண சபைகளின் சட்டவாக்க அதிகாரத்திற்கு தடைகளோ அளவிற்கு அதிகமானது.

மாகாண நிறைவேற்றுத்துறை அதிகாரம் முதலமைச்சர்களிடமோ, மாகாண அமைச்சரவையிடமோ இல்லை.

மாறாக ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரிடமே உள்ளது. டொனமூர் யாப்புப்போல பொறுப்பு இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கவில்லை. அதிகாரம் இருந்த இடத்தில் பொறுப்பு இருக்கவில்லை.

மாகாண நீதித்துறை அதிகாரப் பங்கீட்டுக்கு உட்படுத்தப்படவேயில்லை அது மத்திய நீதித்துறையின் ஒரு பகுதியாகவே இருந்தது.

இந்நிலையில் 13ஆவது திருத்தமும் அதன் வழியான மாகாண சபைகளும் இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளியாகவே இல்லை என்பதே உண்மை ஆகும்.

13ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் தமிழ் மக்கள் பெரிய ஒப்பாரி எதனையும் வைக்கவில்லை சில தமிழ்க் கட்சிகள் மட்டும் இந்தியாவின் அழுத்தத்தினால் அதற்காக குரல் எழுப்பின.

பிரதான கட்சிகளான தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதற்கு வெளியே தான் நின்றன. மனோகணேசனும், ரவூப்ஹக்கீமும் இணைந்து குரல் எழுப்பின.

சம்பந்தன் இதில் தலையிட்டு சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தவுடன் ரவூப்ஹக்கீம் மட்டுமல்ல மனோகணேசனும் பின்வாங்கினார்.

ரவூப்ஹக்கீம் பின்வாங்கியதில் நியாயம் இருக்கின்றது. ஆனால் மனோகணேசன் பின்வாங்கியதில் எந்த நியாயமும் இருக்கவில்லை.

இது விடயத்தில் தலைவர் தொண்டமான் பின்பற்றிய அரசியல் நிலைப்பாட்டை கூட பின்பற்ற மனோகணேசனால் முடியவில்லை.

மனோகணேசன் தென்னிலங்கை தமிழ் அரசியலுக்குரிய அளவுகோலினால் வடக்கு – கிழக்கு தமிழ் அரசியலையும் அளக்க முற்படுகின்றார். அதனைக் கைவிடுவது அவருக்கும் நல்லது. தமிழ் மக்களுக்கும் நல்லது.

 

Share.
Leave A Reply

Exit mobile version