இலங்கையின் 75வது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

2023ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவு பெற்றதன் பின்னர், இனப் பிரச்னைக்கு தீர்வை வழங்கும் வகையிலான அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி, சர்வகட்சிகளின் பிரதிநிதிகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்த ரணில், இனப் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது குறித்து தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

அனைவரும் ஒன்றிணைய அழைப்பு

”இந்த நாட்டில் நிலவும் பிரச்னையை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு இனப்பிரச்சினை என்பதா அல்லது வேறு ஏதாவது பெயரைச் சொல்வதா என்பது முக்கியமல்ல. எமக்கு தேவைப்படுவது இப்பிரச்சினைகளுக்கான தீர்வேயாகும்.

இதற்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடுவதற்கு நாடாளுமன்றத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. அதற்காகவே கட்சித் தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பிரச்னை தொடர்பில் வடக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கலந்துரையாடியுள்ளனர்.

இப்பிரச்னையை இரண்டு பகுதிகளின் கீழ் கலந்துரையாடலாம்.

முதலாவதாக, காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அவர்கள் தொடர்பில் செய்யப்படும் விசாரணை. பயங்கரவாதத் தடைச் சட்டம், அதே போன்று காணி தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன.

இரண்டாவதாக, அதிகாரப் பகிர்வு தொடர்பான சட்டப் பணிகளைச் செய்வதற்குத் தேவையான ஏற்பாடு.

இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சரும் நீதி அமைச்சரும் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துகின்றனர்.

அதற்கமைய, காணாமல் போனோர் தொடர்பிலும் அரசியல் கைதிகள் தொடர்பிலும் அறிக்கையொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம். அதன் பின்னர் எம்மால் அதிகாரப்பகிர்வு குறித்து பேச முடியும்.

75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது சாத்தியமா?

உயர் நீதிமன்ற நீதிபதி நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் அச்சிடப்படும். அந்த அறிக்கையில் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் கையளிக்கப்பட்ட அறிக்கைகளின் பரிந்துரைகளையும் நாம் இதன்போது பரிசீலிப்போம்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல்களும் இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களும் பிரதான இரண்டு விடயங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அங்கு நாம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, உதுலாகம ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்படி, அனைத்து அறிக்கைகளிலும் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருந்தும் வெளிநாட்டுப் பொறிமுறைகளின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதையே அவை சுட்டிக்காட்டியுள்ளன.

இதற்கமைய, உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தீர்வுகளை வழங்குவதாக நாம் வாக்குறுதியளித்திருந்தபோதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதி கூறியதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நவாஸ் ஆணைக்குழுவை நியமித்தார்.

இதற்கு முந்தைய ஆணைக்குழுக்களின் ஆலோசனைகளை உள்வாங்கி இதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே அந்த ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய இப்பொறிமுறையை கொண்டு வருவதற்கு எமக்கு பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு தரப்பினரும் கூட இப்பொறிமுறையைக் கொண்டு வருவதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில படைப்பிரிவுகள் பல்வேறு வகையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.

சில படைப்பிரிவுகளுக்கு ஐ.நா நடவடிக்கைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.

எவ்வாறானாலும் அதுபோன்றதொரு ஒழுங்குமுறையை இதுவரை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

 

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். தென்னாபிரிக்காவுடனும் இது தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாம் முன்வைப்போம். இந்தக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல நல்ல முன்மொழிவுகள் கொண்டுவரப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

இனப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில், இலங்கையுடன் தென்னாபிரிக்கா இணைந்து செயற்பட்டு வருவதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

”இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான செயல்முறை ஒழுங்கு நீதியமைச்சிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்போதும், காணாமல் போனோர் அலுவலகம் நீதி அமைச்சின் கீழேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அனைத்து ஆவணங்களையும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

காணாமல் போனவர்களுக்கான இழப்பீடாக ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

சொத்து இழப்பீடு குறித்தும் தற்போது நாம் பரிசீலித்து வருகிறோம். வடக்கில் யுத்தம் காரணமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை இழந்த சுமார் 11,000 பேர் வடக்கில் இருந்தனர்.

அவற்றை நாம் மீண்டும் பெற்றுக் கொடுத்தோம். நீதியமைச்சின் கீழ் வட மாகாணத்தில் பல இணக்கப்பாட்டு மத்தியஸ்த நிகழ்வுகளை நாம் முன்னெடுத்தோம்.

இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தற்போதும் செயற்பட்டு வருகிறது. இவ்விடயத்தில் எமக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் ஆதரவளித்து வருகின்றது.” என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இனப் பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் காலம், குறுகியதாக இருந்தாலும், இது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

”அடிப்படையில் எங்கள் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள். அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள், இன்னும் சிறையில் உள்ளவர்கள். அதேபோன்று, நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், அது விடுவிக்கப்பட வேண்டிய தேவை.

இது தொடர்பான நிறைவேற்றுத்துறைக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அது உரியவர்களுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார். ஜனவரி மாதத்திற்குள் அதை முடிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இரண்டாவது விடயம், ஏற்கனவே சட்டத்திலும், அரசியலமைப்பிலும் இருக்கின்ற அதிகார பகிர்வு சம்பந்தமான விடயங்களை எப்படி அமல்படுத்துவது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பன குறித்து ஜனவரி மாதத்தில் ஒரு தினத்தில் சந்தித்து, தீர்க்கமான முடிவொன்று எடுக்கலாம் என ஜனாதிபதி கூறினார்.

மூன்றாவது நீண்டகாலமாக இருக்கின்ற புதிய அரசியலமைப்பு சம்பந்தமான விடயம். அதிகாரங்களை பகிர்வது உட்பட எல்லா விடயங்களுக்குமான விடயம். இந்த விடயத்தை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியதில்லை. இது தொடர்பாக பல அறிக்கைகள் இருக்கின்றன. இணக்கப்பாடுகள் இருக்கின்றன.

வரைவுகள் கூட இருக்கின்றன. அவற்றை எல்லாம் சேர்த்து, எப்படி புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது குறித்து ஜனவரி மாதத்திலேயே நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஏனென்றால், ஜனாதிபதியே ஒரு காலக்கேட்டை வைத்திருக்கின்றார்.
இலங்கை நாடாளுமன்றம்

அடுத்த வருடம் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்னதாக நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படுமா, இல்லையா என்பது குறித்து ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும் என்று சொல்கின்றார்.

இந்த ஜனவரி மாதத்திலே நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளிலிருந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

அல்லது முடியாத என்று பெப்ரவரி 4ம் தேதிக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

மிக குறைந்த கால கட்டமாக இருந்தாலும், அதற்குள் இந்த விடயங்கள் தொடர்பாக பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு அனைவரும் முயற்சி எடுப்போம் என்று சொல்லியிருக்கின்றோம்.” என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள ஆவணங்களை அரசியலமைப்பின் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

”வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டும். காணிகளை கையகப்படுத்துவது, காணாமல் போனோரின் பிரச்சினை, சிறை கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான பிரச்சினைகள் என மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

நிலத்திலே இருந்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே முதலாவது. இரண்டாவது சட்டத்தின் ஊடாக எமக்கு ஏற்கனவே தரப்பட்டுள்ள உரிமைகளை நாங்கள் பெறக்கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகள் இருக்கின்றன. மாகாண சபைகளை நாங்கள் இயக்காமல் இருக்கின்றோம்.

 

அதற்கு அதிகாரம் வழங்காமல் இருக்கின்றோம். அதிகாரம் வழங்கினால், தான் காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்ற காரணத்தை கூறியுள்ளோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது சம்பந்தமாக நாங்கள் பல ஆவணங்களை தயாரித்துள்ளோம்.

அதை அரசியலமைப்பின் கொண்டு வர வேண்டும் என்பது குறித்தும் கலந்துரையாட வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

75வது சுதந்திர தினத்திற்கு முன்பாக குறைந்த பட்சம், 13வது திருத்தத்தையேனும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

”75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக, குறைந்தபட்சம் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

அதன் பிறகு, அனைத்துக் கட்சி மாநாடு மற்றும், தேவைப்பட்டால், சிவில் அமைப்புகளும் பங்கேற்று அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு செல்லலாம்.

விக்டர் ஐவன் போன்ற சிவில் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே எம்மை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அந்த மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கான பிரதான பிரச்சினை அவர்களின் காணிகள் வேறு சிலரால் கையகப்படுத்தப்பட்டமையாகும்.

ராணுவம் மட்டுமன்றி ஏனைய அரச நிறுவனங்களும் காணிகளை கையகப்படுத்தியுள்ளன.

குறிப்பாக வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் இவ்வாறு காணிகளை கையகப்படுத்தியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல, சிங்கள சமூகத்திற்கும் ஒரு பிரச்சினை ஆகும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரத்தில், சில மத ஸ்தலங்களின் சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்த முயற்சித்தது.

சில இடங்களில் பொலிஸார் தங்கியுள்ளனர். இவ்விடயத்தில் மக்களுக்குப் பிரச்சினை உள்ளது.

எனவே இது சஹரான் அல்லது அவரது குழுவினருக்கு சொந்தமான சொத்துக்கள் அல்ல, அவை ஏனைய மத ஸ்தானங்களுக்கு சொந்தமானவை.” என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எந்த மத ஸ்தலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால் தமக்கு அறிவிக்குமாறு கூறியுள்ளார்.

அத்துடன், தற்போது சில முஸ்லிம் அமைப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும், சில அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

இனவாதத்தை சமூகத்திலிருந்து அகற்றுவதற்கான புதிய சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

”இந்த கலந்துரையாடல் இன்று மிகவும் முக்கியமானது. இந்த கலந்துரையாடலுக்கு காலக்கெடு கிடைத்ததில் மகிழ்ச்சி. இத்தகைய இலக்குகளைக் கொண்ட திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

ஒரு நாடு ஒற்றுமையாக இருக்க, ஒற்றுமை இருக்க வேண்டும். மக்கள் சமூகத்தின் ஒற்றுமையின் மூலமே நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியும். நம் நாட்டின் சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்கள் சமமாக வாழ்கின்றனர்.

எனவே, அரசியல் அமைப்பில் சாதி, மதத்தை பயன்படுத்தக் கூடாது. அந்த விஷ விதையை அகற்ற வேண்டும். இனம், மதம் என்று அரசியலில் ஈடுபடுபவர்களை ஒழிக்க வேண்டும். அத்தகைய சமூகம் புனரமைக்கப்பட வேண்டிய காலகட்டமே இது. அதன் மூலம் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்.

இனவாதத்தை சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இனவாத கருத்துக்களில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்.

இல்லையெனில் வேறு நாட்டை உருவாக்க முடியாது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகங்கத்துக்கும் நாம் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

இந்த பிரச்சினைகளை நமது உள்நாட்டுப் பொறிமுறையில் தீர்க்க முடியும். இந்த திட்டத்தை தொடங்குவதுடன், அதனை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.

எனவே ஜனாதிபதி ஆரம்பித்து வைத்த சர்வகட்சி மாநாட்டை வெற்றிகரமாகத் தொடர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.”” என எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

75வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது சாத்தியமா என்ற கேள்வி தற்போது அனைவரது மனதிலும் எழுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜாவிடம், பிபிசி தமிழ் வினவியது.

”அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த போகின்றார். அதற்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற வேண்டிய தேவை இவருக்கு இருக்கின்றது.

அதனால், தமிழ் முஸ்லிம் மக்களை அரவணைக்கும் வகையிலான ஒரு திட்டத்தை முன்னெடுக்கின்றார்.

அதில் முக்கியமான ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். ஒற்றை ஆட்சியின் கீழ் தான் தீர்வு என்ற விடயத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துகின்றார். சிங்கள மக்கள் கோபப்படாத விடயங்களையே அவர் செய்து வருகின்றார்.

சிங்கள் மக்களையும் சமாளித்து, தமிழ் மக்களையும் அரவணைக்கும் வகையில் ஒரு முயற்சியை காண்பிக்கின்றாரே தவிர, இது பிரச்சினைக்கான தீர்வாக இருக்காது. சுதந்திர தினத்திற்கு முன்பாக தீர்வு கிடைக்கும் வாய்ப்பு இல்லை.” என அவர் கூறினார்.
மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கு கீழ் உள்ள இந்த அரசாங்கத்தின் ஊடாக, இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் சாத்தியம் உள்ளதா என பிபிசி தமிழ், மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜாவிடம் வினவியது.

”முதலில் நாடாளுமன்ற அதிகாரம் இருக்க வேண்டும். இந்த பிரச்சினையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கின்றது. அவருடைய அரசியல் வரலாற்றில், பலர் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டோம் என எண்ணுகின்றார்.

மஹிந்த ராஜபக்ஸவை போன்று அவருக்கும் மனதில் அவ்வாறான எண்ணம் இருக்கின்றது. அதனால், அவர் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க முயற்சிப்பார்.

எனினும், தீர்த்து வைக்க முயற்சிப்பதற்கு நாடாளுமன்ற அதிகாரம் அவருக்கு கிடையாது. நாடாளுமன்ற பெரும்பான்மை இருந்தால் மாத்திரமே அடுத்த கட்ட முயற்சிக்கு செல்ல முடியும். அரசியலமைப்பு திருத்தம் அல்லது வேறு விடயத்தை முன்னெடுக்க பெரும்பான்மை தேவைப்படும். நாடாளுமன்றத்திலுள்ள விமல் வீரவங்ச வரவில்லை.

எதிர்கட்சியிலுள்ள சிலர் வரவில்லை. ஜே.வி.பி வரவில்லை. பல பிரிவுகளாக எதிர்ப்புக்கள் அங்கு இருக்கின்றது. நாடாளுமன்ற அதிகாரம் இருக்கின்ற ஒரு தரப்பிற்கு தான் இந்த விடயத்தை செய்ய முடியும்.

ஆனால், இப்போதுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அப்படி இருந்தால் பரவாயில்லை. அந்த கட்சியிலுள்ளவர்கள் தற்போது பிரிந்துள்ளார்கள்.

அவர்கள் ஆதரவு வழங்கும் வாய்ப்பு இல்லை. பிரச்சினையை தீர்ப்பது என்பது ரணிலுக்கு கஷ்டமான விடயம்” என அவர் பதிலளித்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version