பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகார விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
சி.ஐ.டி.யின் பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவு இந்த விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், இதுவரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அறிவியல் தடயங்களின் அடிப்படையில் விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், முக்கியமான சந்தேகத்துக்குரிய கோணமொன்றில் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் தகவல்கள் வீரகேசரிக்கு வெளிப்படுத்தின.
அதன்படி, கொலை செய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், அவருடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரச்சினை இருப்பதாக கூறப்படும் பிரபல ஆங்கில மொழி மூல கிரிக்கட் வர்ணனையாளரும் இலங்கை கிரிக்கட் சபையின் முன்னாள் ஊடக செயலருமான பிரையன் தோமஸ், ஷாப்டரின் மனைவி, ஷாப்டரை தேடி பொரளை மயானத்துக்கு சென்ற அவரது வர்த்தக குழுமத்தின் பணிப்பாளர் ஆகியோரின் தொலைபேசிகளை விசாரணையாளர்கள் தமது பொறுப்பிலெடுத்து சிறப்பு பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதன் பெறுபேறுகள் பெரும்பாலும் கிடைக்கவுள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மர்மங்களை அவிழ்க்க முடியும் என விசாரணையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளிக்கு சொந்தக் காரர் ஆவார்.
பொரளை பொது மயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார்.
இந் நிலையில் கடந்த 15 ஆம் திகதி பிற்பகல் 2.06 மணிக்கு பிளவர் வீதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து காரில் தினேஷ் ஷாப்டர் வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.
பிளவர் வீதி வீட்டிலிருந்து அவரது கார் நேராக பொரளை பொது மயானத்தை நோக்கியே சென்றுள்ளமை தெரியவந்துள்ளதுடன் வீட்டுக்கும் மயானத்துக்கும் இடையே 42 சி.சி.ரி.வி. கமராக்களின் காட்சிகள் சி.ஐ.டி.யினரால் சேகரிக்கப்பட்டுள்ளன.
அந்த காட்சிகள் நேரம் தொடர்பில் ஒப்பீடு செய்யப்பட்டு, சி.ஐ.டி.யின் டிஜிட்டல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் ஊடாக ஆராயப்பட்டு வருகின்றது.
அத்துடன் இதுவரை சுமார் 32 பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் பிரயன் தோமஸ், ஷாப்டரின் மனைவி, பணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்குவதுடன், ஊடகவியலாளர் சமுதித்தவிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
சமுதித்த சமரவிக்ரம, அவரது யூ ரியூப் அலைவரிசையில் முனென்டுத்த நேர்காணல் தொடர்பில் இந்த வாக்கு மூலம் 2 மணி நேர விசாரணையின் பின்னர் பெறப்பட்டதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
விசாரணைகளின் முக்கிய கட்டமாக ஷாப்டரின் குடும்பத்தாரிடம் வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகளை சி.ஐ.டி.யினர் ஆரம்பித்துள்ளனர். ஷாப்டரின் இறுதிக் கிரியைகள் நிறைவுறும் வரை காத்திருந்த சி.ஐ.டி.யினர், இறுதிக் கிரியைகள் நேற்று (18) நடந்து முடிந்த நிலையில் இந்த விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, சி.ஐ.டி.யின் விசாரணைகளில், கடந்த 15 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு, ஷாப்டர் கையடக்கத் தொலைபேசியிலிருந்து , பிரயன் தோமசுக்கு ‘ நீ வரும் வரை நான் காத்திருக்கின்றேன்.’ என குறுஞ்செய்தி ஒன்று அனுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதற்கு பிரயன் தோமஸ், ‘ நான் உன்னை சந்திக்க விரும்பவில்லை. உனக்கும் எனக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை..’ என பதில் அனுப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
தொலைபேசி கோபுர தகவல்கள் பிரகாரம், ஷாப்டரின் தொலைபேசியிலிருந்து குறுஞ்சிய்தியானது, பொரளை மயானத்தில் வைத்தே அனுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி அந்த குறுஞ்செய்தியை ஷாப்டரை கொலை செய்தவர் அல்லது கொலை செய்த கும்பல் அனுப்பியதா என்ற பிரபல சந்தேகம் எழுத்துள்ளது.
அத்துடன் குறித்த நேரத்தில் பிரயன் தோமஸ் அவரது வீட்டிலேயே இருந்துள்ளமை தெரியவந்துள்ள நிலையில், பிரயன் தோமஸை கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக காட்டும் இதுவரை எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் அதனால் அவரை இதுவரை கைது செய்யவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் கொலையாளிகளை கண்டறிய முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில், கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ஷாப்டரின் மனைவி ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலத்தை மையப்படுத்தி மேலதிக வாக்கு மூலம் ஒன்றினை விசாரணையாளர்கள் தாக்கல் செய்துகொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், இந்த படுகொலை குறித்த குற்றவாளிகளை அடையாளம் காண அறிவியல் தடயங்களை மையப்படுத்தி, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டி.ஜி.எச். பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.