வாக்னர் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் ரஷ்ய சிறைக்கைதிகளிடம் பேசுவது தொடர்பாக இணையத்தில் கசிந்த காட்சி

யுக்ரேனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வர்த்தகம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிரானது என்றும் வாக்னர் மீது மேலும் தடைகள் அறிவிக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எனினும், ஆயுத விற்பனை தொடர்பான தகவல்களை வட கொரியாவும் வாக்னர் குழுவும் மறுத்துள்ளது.

யுக்ரேனில் 1000 முதல் 20,000 வாக்னர் கூலிப்படையினர் முகாமிட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக சிரியாவிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் செயல்பாட்டில் உள்ள இந்த குழு, போர் குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும்ஈடுபட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

“யுக்ரேனில் தங்களது ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு உலகம் முழுவதும் ஆயுத விற்பனையாளர்களை வாக்னர் குழு தேடி வருகிறது” என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வாக்னர் உறுப்பினர்கள்

“வாக்னருக்கு முதல்கட்ட ஆயுதங்களை வட கொரியா வழங்கிவிட்டது என்பதை நாங்கள் உறுதி செய்ய முடியும், இந்த ஆயுதங்களுக்கான தொகையும் செலுத்தப்பட்டு விட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.

வட கொரியாவில் இருந்து காலாட்படை ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை கூலிப்படை குழு பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.

வாக்னர் குழு யுக்ரைனில் மாதத்திற்கு 100 மில்லியன் டாலருக்கும் மேலாக (இந்திய மதிப்பில் ரூ. 826 கோடிக்கும் அதிகமாக) செலவு செய்வதாக கிர்பி கூறினார்.

இந்த குழு இப்போது அதிகாரத்தில் உள்ள ரஷ்ய ராணுவத்திற்கு போட்டியாக இருப்பதாக அவர் கூறினார்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி வாஷிங்டனின் மதிப்பீட்டை பிரிட்டன் ஏற்றுக்கொள்வதாக கூறினார். “அதிபர் (விளாடிமிர்) புடின் உதவிக்காக வட கொரியாவிடம் செல்வது ரஷ்யாவின் விரக்தி மற்றும் தனிமைப்படுத்தலின் அடையாளம்” என்று ஜேம்ஸ் கிளவர்லி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

எனினும், வாக்னர் குழுவின் உரிமையாளர் எவ்ஜெனி பிரிகோஜைன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு, இவற்றை வதந்தி என்றும் ஊகங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்த அறிக்கைகளை ஆதாரமற்றது என்று கூறியுள்ளார்.

எங்களின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, ஆயுதம் தொடர்பாக வட கொரியா மற்றும் ரஷ்யா இடையே எந்த பரிவர்த்தனையும் ஏற்படவில்லை என்று, அந்நாட்டு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

2014 இல் ரஷ்யா கிரிமியாவை இணைத்தபோது வாக்னர் குழு முதலில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

அதன் உரிமையாளர், பிரிகோஜைன் “புடினின் சமையல்காரர்” என்று அழைக்கப்படுகிறார். அவர் கிரெம்ளினி சமையல் செய்பவராக இருந்து இருந்து உயர்ந்ததால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பல பின்னடைவுகளைச் சந்தித்ததால் வாக்னரின் செல்வாக்கும் இருப்பும் கடுமையாக வலுவடைந்துள்ளது.

2022 மார்ச் மாதத்தில், வாக்னர்கள் யுக்ரேனுக்கு 1000 நபர்களை மட்டுமே அனுப்பியதாக நம்பப்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கை 20,000ஐ கடந்து அதிகரித்துள்ளதாகவும், களத்தில் உள்ள ரஷ்ய படையின் எண்ணிக்கையில் இது 10 சதவீதம் என்றும் பிரிட்டன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்ய சிறைகளில் உள்ள குற்றவாளிகளை தங்களது குழுவில் வாக்னர் இணைந்துகொள்கிறது.

நவம்பர் 2022-க்கு முந்தைய இரண்டு மாதங்களில் ரஷ்ய சிறைகளில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை 23,000-க்கும் அதிகமாக குறைந்துள்ளது என தரவு ஒன்று கூறுவதாக பிரிட்டன் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்த காலகட்டத்தில் வாக்னர் குழு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பல குற்றவாளிகள் வாக்னருடன் இணைந்ததாக நம்பப்படுகிறது – இருப்பினும் துல்லியமான எண்கள் இல்லை.

குழுவில் இணைந்து பணியாற்றும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதோடு ஆறு மாதங்கள் பணியாற்றிய பின்னர் அவர்களது தண்டனையும் குறைக்கப்படும் என்று அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version