முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய அனுமானத்தை ஏற்படுத்த அவருடைய பேசும் பாணியை நாம் அதிகம் கவனிக்கிறோம்.

அதற்கு மட்டுமல்ல, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பேசும் விதத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அரசியல் தலைவர்கள், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணையை அவர்களின் பேச்சு நடை, தொனி போன்றவற்றின் அடிப்படையிலேயே நாம் தேர்வு செய்கிறோம்.

அதற்கு என்ன காரணம்? ஏனென்றால், நாம் நினைப்பதை விட நம் குரல் நம்மைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொல்கிறது.

நீங்கள் வார்த்தைகளைப் பேசுகிறீர்கள், உங்கள் குரலின் மூலம் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறீர்கள், ஆனால் உங்கள் குரலில் உங்களது உயிரியல் நிலை, ஆளுமை மற்றும் சமூக அந்தஸ்தும் வெளிப்படுகிறது என்று மான்ட்பெல்லியர் பல்கலைக்கழக மொழியியல் ஆராய்ச்சியாளர் மெலிசா பார்கட் டிஃப்ராட்ஸ் கூறுகிறார்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றும் உங்களது நிதி நிலைமை என்ன என்பதும் உங்கள் குரலில் வெளிப்படுகிறது.

 

மேலும், மன ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உங்கள் குரல் வெளிப்படுத்துகிறது. அதாவது, உங்கள் குரலின் தரம் உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தருகிறது.

குரலின் தரம் குறித்து நாம் எதிர்பார்ப்பது என்ன? உதாரணமாக, நமக்கான தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கிறோம்.

இது தொடர்பான ஆய்வு முடிவுகள், கணீர் குரல் கொண்ட பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதாகக் கூறுகின்றன.

கணீர் குரல் கொண்டவர்கள் மிகவும் திறமையானவர்களாகவும், நம்பகமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நமது குரலும் உச்சரிப்பும் மாறுகிறது. நமக்கு ஒத்த குரல் கொண்டவர்களையே நண்பர்களாக நாம் தேர்ந்தெடுக்கிறோம்.

‘சாதாரண உரையாடலில் மற்றவரின் குரலுக்கு ஏற்ப நமது குரலையும் தொனியையும் மாற்றுவது இயல்பானது” என்கிறார் லியோன் பல்கலைகழக உயிரியல் நெறியாளர் கட்டார்ஷினா பிசாசின்கி.

ஒருவர் மெதுவாகப் பேசினால் நாமும் மெதுவாகப் பேசுவோம். வேகமாக பேசினால் நாமும் வேகமாக பேசுவோம். நம்மிடம் இருக்கும் இந்தச் சிறப்பு, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது.

சில உச்சரிப்புகள் மற்றவர்களை அதிகம் ஈர்க்கக் கூடியவை என்று சொல்ல முடியுமா?

கணீர் குரல் அரசியல்வாதிகளை எப்படி பிரபலமாக்குகிறதோ, அதே போல ஆண்கள் மீதும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது என்று நீண்ட காலமாக எண்ணப்படுகிறது.

“ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அவர்களது குரல் சத்தத்துடன் நேர்மாறான தொடர்புடையது, அதாவது, ஒருவருக்கு கணீர் குரல் இருந்தால், அவரது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருக்கும்” என்கிறார் மெலிசா பார்கட் டிஃப்ராட்ஸ்.

டெஸ்டோஸ்டிரோன் ஆண்களுக்கு நிறைய நன்மைகளைத் தருகிறது என்பதை நாம் அறிவோம். ஆண்களின் இனப்பெருக்க செயல்பாட்டில்கூட அது சம்பந்தப்பட்டிருக்கிறது. ஓர் ஆணின் குரல் கணீரென இருந்தால், அவருக்கு அதிக துணைகள் கிடைக்கலாம்.

கணீர் குரல் பெண்களை ஈர்க்குமா

 

கணீர் குரல் கொண்ட ஆண்கள் பெண்களை அதிகம் ஈர்க்கிறார்கள் என்று அண்மைக்காலங்களில் உயிரியலாளர்கள் கூறுவதன் காரணமும் இதுதான்.

இந்தக் கருதுகோளின் அடிப்படையில் பெண்களின் குரலை மிகவும் ஈர்ப்புடையதாக்குவது எது என்பதை நிரூபிக்க முடியுமா?

உலகெங்கிலும் உள்ள பல்வேறு குரல்களை ஆய்வு செய்தபோது, கணீர் குரல் கொண்ட பெண்கள் விரைவாக துணையை கண்டுபிடிப்பது தெரியவந்தது.

பெண்களது குரலின் சுருதி அதிகமாக இருப்பது அவர்களின் வயது மற்றும் அழகை காட்டுகிறது என்பது தெளிவாகிறது.

 

இது தொடர்பான ஆராய்ச்சியில் பெண்கள் தங்களது ஆண் நண்பர்கள் அல்லது துணையுடன் இருக்கும் போது தங்கள் குரலின் சுருதியை அதிகரிப்பது தெரியவந்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இது மாறியுள்ளதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது பெண்கள் தங்கள் குரலின் சுருதியை குறைக்கிறார்கள்.

இது தொடர்பாக மெலிசா பார்கட் டிஃப்ராட்ஸ் ஓர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் சில பெண்களை குறிப்பிட்ட ஆணுடன் ஆறு நிமிடங்கள் பேச வைத்து, அந்த நபரை அவர் விரும்புகிறாரா அல்லது இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கான சாதனத்தை வைத்திருந்தார். அதுமட்டுமின்றி அவரது குரலும் பதிவு செய்யப்பட்டது.

பதிவான குரலை அவர்களின் சொந்தக் குரலுடன் ஒப்பிட்டு, விரும்பும் ஆண்களிடம் பேசும்போது பெண்களின் குரலில் சுருதி குறைவதையும், விரும்பாத ஆண்களிடம் பேசும்போது சுருதி உயர்வதையும் கண்டறிந்தார்.

அதே போல மென்மையான குரல் கொண்ட பெண்களை ஆண்கள் விரும்புவதும் தெரியவந்தது.

பிரெஞ்சு ஆண்கள் மற்றும் பெண்களிடம் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில் குறைந்த சுருதி கொண்ட பெண்களால் பிரெஞ்சு ஆண்கள் ஈர்க்கப்படுவது கண்டறியப்பட்டது.

“நாம் நீண்ட காலமாக குழப்பத்தில் இருந்தோம், இப்போது இதில் ஒரு கலாச்சார மாற்றத்தைக் காண்கிறோம்.

இது மிகவும் சுவாரஸ்யமானது. ஏனென்றால் நாங்கள் பிரெஞ்சு ஆண்களில் பார்த்ததை முன்பு மற்ற கலாச்சாரங்களில் பார்க்கவில்லை” என்கிறார் மெலிசா பார்கட் டிஃப்ராட்ஸ்.

 

Share.
Leave A Reply

Exit mobile version