குஜராத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு HIV தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`சங்கர் காம்ப்ளே` என்ற குறித்த நபர் தனியார் நிறுவனமொன்றில் சாரதியாகப் பணியாற்றி வருகின்றார். இவருக்குத் திருமணமாகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகின்றது.

இந்நிலையில் சங்கர் அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் தமது திருமண உறவை முறித்துக்கொள்வதற்கு முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளனர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்தின் பின்னர் மனைவியின் பிரிவை ஏற்க முடியாமல் தவித்த சங்கர் தனது மனைவியிடம் ”மீண்டும் தன்னுடன் வந்து வாழுமாறு வற்புறுத்தியுள்ளார்.

எனினும் அவரது மனைவி அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் அவரைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து ”தன்னை இறுதியான ஒரு முறை சந்திக்குமாறும், இனிமேல் இவ்வாறு வற்புறுத்த மாட்டேன்” எனவும் மனைவியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த மனைவியை, சங்கர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று அவரை கட்டி அணைத்து தனது சட்டையில் மறைத்து வைத்திருந்த சிரிஞ்சைப் பயன்படுத்தி அப்பெண்ணுக்கு எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை செலுத்தியுள்ளார்.

ஊசி செலுத்தப்பட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அந்த பெண், சுயநினைவுக்கு வந்த பின்னர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், சங்கரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ”தனது மனைவியைப் பழிவாங்குவதற்காகவே இவ்வாறு செய்ததாகவும், வெப்சீரிஸை பார்த்து இத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்காக வைத்தியசாலையொன்றின் HIV பிரிவில் உள்ள நோயாளி ஒருவரிடமிருந்து பரிசோதனைக்காக மாதிரியை சேகரிக்கும் மருத்துவமனை ஊழியர் போல் நடித்து இரத்தத்தை சேகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version