அவ்வப்போது நாம் இணையத்தில் வலம் வரும் போது நம்மை சுற்றி நடக்கும் பல வியப்பான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
அதே போல இயல்பான ஒரு விஷயத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வினோதமாக ஏதாவது விஷயங்களை சிலர் செய்யும் போது அது பெரிய அளவில் இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாக மாறும்.
அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்கும் ஏதாவது தனிப்பட்ட ஆசை என ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும்.
அப்படித்தான் ஜப்பானில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு சிறுவயது முதல் விலங்குகள் என்றால் கொள்ளை பிரியம் என தகவல்கள் கூறுகின்றது.
அதிலும் ஓநாய் என்றால் அந்த இளைஞருக்கு பெரிய அளவில் விருப்பம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க தொடங்கிய அந்த இளைஞர், தான் ஓநாய் போல மாற வேண்டும் என்றும் சமீபத்தில் விருப்பப்பட்டுள்ளார்.
தனது விருப்பத்தை சிறந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவரிடம் கூற, ஜப்பானில் உள்ள பிரபல ஆடை அலங்காரம் நிறுவனம் ஒன்று இதற்கான பணிகளிலும் இறங்கி உள்ளது. சுமார் 50 நாட்கள் வரை எடுத்து அந்த இளைஞரின் உயரம் உள்ளிட்ட பல விஷயங்களை கருத்தில் கொண்டு பார்த்து பார்த்து ஓநாய் உடை ஒன்றை உருவாக்கி உள்ளது.
அந்த உடையை அணிந்த பின் அச்சு அசலாக ஒரு ஓநாய் போலவே அந்த நபர் தென்படுகிறார்.
ஓநாய் போலவே நடந்தும் காட்டிய அந்த நபரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.
அதைப் பார்ப்பதற்கு ஒரு மனிதர் போல இல்லாமல், ஓநாய் போலவே உள்ளதாகவும் பலரும் ஆச்சரியத்திலும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த உடைக்காக இந்திய மதிப்பில் சுமார் 18.5 லட்சம் ரூபாயையும் அவர் செலவு செய்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து பேசும் அந்த இளைஞர், சிறு வயது முதலே விலங்குகளுக்கு அடிமையாக இருந்ததாகவும் ஒரு நாள் ஓநாய் போல் உடையணிந்து அதை போலவே மாற முடிவெடுத்ததாகவும் அதனால் தற்போது மேற்கொண்ட முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைத்து ஆசையும் நிறைவேறியதாக பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.