செய்தியாளர்களுடன் வாக்குவாதம், ரஃபால் வாட்ச், காயத்ரி ராகுராமின் குற்றச்சாட்டு, கோவை காது மெஷின் என அண்மைக்காலமாக பாஜக தலைவர் அண்ணாமலையை சுற்றி சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

அண்ணாமலையை சுற்றும் சர்ச்சைகள்

தமிழக பாஜகவின் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலையை கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டார்.

தலைவராக பதவிவேற்ற நாள் முதல் எதிர்கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பது, அதிரடியான கருத்துக்களை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவது என லைம் லைட்டில் இருந்து வருகிறார் அண்ணாமலை.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு வங்கியை இரட்டை இலக்கமாக மாற்ற வேண்டும் முனைப்புடன் செயல்பட்டு வரும் அண்ணாமலை, சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் உள்ளாகி வருகிறார்.

குறிப்பாக அண்மையில் நடைபெற்ற சூர்யா சிவா – டெய்சி ஆடியோ விவகாரம், அண்ணாமலையின் நண்பர் கார்த்திக் கோபிநாத்தின் கைது விவகாரம், ரஃபால் வாட்ச் சர்ச்சை, காயத்ரி ராகுராமின் குற்றச்சாட்டு என பல்வேறு விவகாரங்களில் அண்ணாமலையின் பெயர் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

 

அண்ணாமலை மீது புகார் தெரிவித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டு இருந்த டிவிட்டர் பதிவில், பாஜக மீதும் அதன் தேசிய தலைவர்களான மோதி, அமித்ஷா மீதும் மதிப்பு இருப்பதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.

‘ஆங்ரி ஃபேர்ட்’ அரசியல்

காயத்ரி ரகுராமின் இந்த பதிவு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “சர்ச்சைகளின் நாயகனாக அண்ணாமலை திகழ்கிறார்.

காயத்ரி ரகுராமுக்கு முன்பே அண்ணாமலையின் தலைமை குறித்து பலரும் புகார் கூறியிருக்கிறார்கள்.

ஆபாச ஆடியோ, வீடியோ கலாசாரம் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இப்போதுதான் தலை தூக்கி இருக்கிறது. அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் முன்வைக்கும் குற்றச்சாட்டில் இது தவிர தனிப்பட்ட நோக்கமோ, ஆதாயமோ இருப்பதாக நான் கருதவில்லை,” என்று கூறினார்.

அண்ணாமலையில் தலைமைப்பண்பில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறிய அவர், இதற்கு முன்பாக பாஜகவில் தலைவராக இருந்த யாரும் இது போல நடந்து கொண்டதில்லை எனத் தெரிவித்தார்.

“முன்னாள் பாஜக தலைவரான இல.கணேசன் சிறந்த தமிழ் பற்றாளர், கலைஞரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் பண்பாளராக அவர் இருந்தார். 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் பணியாற்றிய போது செய்தியாளர்களுடன் மோதல் போக்கு இருந்தது கிடையாது” என்று பிபிசி தமிழிடம் தராசு ஷ்யாம் கூறினார்.

அண்ணாமலையை போன்று செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தலைவரை தனது 40 ஆண்டுகால பத்திரிகை அனுபவத்தில் பார்த்ததில்லை என்றும், ஆங்ரி ஃபேர்ட் அரசியல் வெற்றியை தேடி தராது, விசிறிகளை வேண்டுமானால் உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் பாஜகவுக்கு, புதிய தலைவர் வந்தால் தான் அந்த நோக்கம் நிறைவேறும்,” எனத் தெரிவித்தார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

அண்ணாமலையின் நடவடிக்கைகள் தொடர்பாக பாஜக கட்சி வட்டாரத்தில் பேசிய போது, தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பிபிசி தமிழிடம் பேசிய அந்த கட்சியின் நிர்வாகி, “கட்சியில் உள்ள சீனியர்களை ஓரம் கட்டும் வேலைகளில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார்.

தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைமையுடனும் இணக்கம் இல்லாத ஒரு போக்கையே அண்ணாமலை கடைபிடித்து வருகிறார்.

இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தேசிய தலைமைக்கு புகார் தெரிவித்து இருக்கும் நிலையில், தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் வேண்டும் என்ற குரல் கட்சிக்குள்ளேயே எழத்தொடங்கி இருக்கிறது,” எனத் தெரிவித்தார்.
‘அண்ணாமலைதான் தலைவர்’

உட்கட்சிக்குள் அண்ணாமலையின் தலைமைக்கு எதிராக குரல் ஒலிக்க தொடங்கி இருப்பது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பாஜகவின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், இந்த தகவலை முற்றிலும் மறுப்பதாக தெரிவித்தார். “தேசிய கட்சியான பாஜகவில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன.

அதில் இருக்கும் அனைவரையும் எப்போதும் திருப்தி படுத்தும் வகையில் தலைவராக இருப்பவரால் செயல்பட முடியாது.

கட்சிக்குள் ஒரு சில மாற்றுக்கருத்து இருந்தாலும், அண்ணாமலை தான் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை தலைவராக செயல்படுவார்,” என்று அவர் கூறினார்.

அண்ணாமலையின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத எதிர்கட்சிகள் தான் இது போன்ற கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக பரப்பி வருவதாக கரு.நாகராஜன் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version