அண்மையில் தொலைக்காட்சி செவ்வி ஒன்றில், எல்லே குணவன்ச தேரர் இலங்கை இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறார்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் சதித் திட்டத்தில் இராணுவத்தின் பங்கும் இருந்தது என்பது அவரது முக்கியமான குற்றச்சாட்டாகும்.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக, கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட போராட்டம் தீவிரமடைந்து, ஜூலையில் உச்சக் கட்டத்தை எட்டியது.

அதையடுத்து ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடி, சிங்கப்பூரில் இருந்து கொண்டே பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, அரகலய போராட்டத்தை அவசரகாலச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றைக் கொண்டு அடக்கி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் எல்லே குணவன்ச தேரர், இராணுவத்தின் மீது ஆட்சிக்கவிழ்ப்பு சதிக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் என்பது ஒரு நாட்டைப் பொறுத்தவரையில் மிகவும் பாரதூரமான ஒன்று.

இவ்வாறான சதித் திட்டங்களுடன் தொடர்புடையவர்களுக்கு, பல நாடுகள் விசாரணையின்றி மரணதண்டனை விதிக்கின்ற வழக்கத்தையும் கொண்டிருக்கின்றன.

இத்தகையதொரு குற்றச்சாட்டு இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டிருப்பது முக்கியமானது.

ஏனென்றால் இதுவரை காலமும், இராணுவம் என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் பாதுகாக்கப்படும், ஒன்றாகத் தான் இருந்து வந்திருக்கிறது.

தமிழருக்கு எதிரான போரில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதெல்லாம், அதனை சிங்கள பௌத்த பேரினவாதம் நிராகரித்து வந்திருக்கிறது.

எல்லே குணவன்ச தேரர் போன்ற பௌத்த பிக்குகளும், சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளும், இராணுவம் அப்பழுக்கற்றது, அதன் மீது அபாண்டமான குற்றச்சாட்டு கூறப்படுகிறது என்றே கூறி வந்திருக்கின்றனர்.

இன்று வரை அவர்கள் அந்த நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றனர். இறுதிப் போரின் போது நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்கு நீதி கோரும் முயற்சிகளை அவர்கள் சிறுமைப்படுத்தியே வந்திருக்கின்றனர்.

ஆனால், இப்போது, ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னால் இராணுவம் இருந்தது, முக்கியமான இராணுவ அதிகாரிகள் இருந்தனர் என்று அவர்கள் கூற முற்படுகின்றனர்.

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் என்பதால், இராணுவத்தைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டை அவர்கள் எடுத்திருந்தனர்.

இராணுவம் பெரும்பாலும் சிங்கள பௌத்தர்களால் நிரம்பியது என்பது மட்டும் அதற்குக் காரணம் அல்ல, பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற இனவாத நோக்கமே முக்கியமான காரணமாக இருந்தது.

தமிழின அழிப்பு, தமிழின அடக்குமுறையை சிங்கள பௌத்த பேரினவாதம் தனது உச்சபட்ச அரசியல் இலக்காக வைத்திருக்கிறது.

அதனால் தமிழர்கள் மீது அநீதியை நிகழ்த்திய படையினரை சிங்கள பௌத்த பேரினவாதம் பாதுகாத்தது. ஆனால், தங்களுக்கு தேவையான- தங்களால் கொண்டாடப்பட்டவர் ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

மக்கள் போராட்டத்தை அடுத்து தங்களின் செல்வாக்கு வீழ்ந்து விடும் என்பதால் கோட்டாவிடம் இருந்தும் ராஜபக்ஷவினரிடம் இருந்தும் விலகியோடியவர்களால் கூட, கோட்டாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இன்றைக்கும் கோட்டா அரசு வீழ்த்தப்பட்டதை எதிர்க்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களாலேயே அவர் சிங்கள பௌத்த பேரினவாத பிரதிநிதியாக ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டவர்.

தமிழர்களுக்கு எதிரான போரை வென்று, சிங்கள இனத்தின் வெற்றியின் சின்னமாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவை, ஆட்சியில் இருந்து அகற்றியதை எல்லே குணவன்ச தேரர் போன்றவர்கள் இன்றும் எதிர்க்கிறார்கள்.

ஆட்சிக்கவிழ்ப்புக்கு இராணுவமும் பின்னணியில் இருந்தது, இந்த சதித்திட்டத்தில் இராணுவ அதிகாரிகளும் பங்கெடுத்தனர் என்ற எல்லே குணவன்ச தேரரின் குற்றச்சாட்டு மிக முக்கியமான ஒன்று.

ஒரு நாட்டின் இராணுவம் நாட்டையும், அரசாங்கத்தையும் பாதுகாக்க கடமைப்பட்டது.  போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போது, இராணுவம் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

ஆனால், அரசியலமைப்பு ரீதியாக அரசாங்கத்தைப் பாதுகாக்கும் கடப்பாடு தங்களுக்கு இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்திருந்தார்.

ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தவறானதாக இருந்தாலும், அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு இராணுவத்துக்கு இருக்கிறது.

இவ்வாறான நிலையில், ஆட்சிக்கவிழ்ப்பில் இராணுவ அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தனர் என்றும், போர்க்குற்றச்சாட்டுகளை வைத்து அவர்களை அமெரிக்கத் தூதுவர் தங்களின் பக்கம் இழுத்துக் கொண்டார் என்றும், எல்லே குணவன்ச தேரர் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே விமல் வீரவன்சவும், கோட்டாபய ராஜபக்ஷவை பதவி கவிழ்ப்பதில், அமெரிக்க தூதுவர் முக்கிய பங்கு வகித்தார் என்று, கூறியிருந்தார்.

கோட்டாவின் ஆட்சிக்கவிழ்ப்பில் அமெரிக்கத் தூதுவருக்கு பங்கிருந்தது என்றால், அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை.

அதுபோல, இராணுவத்தின் மீது குற்றம்சாட்டுபவர்களும் அதற்கெதிரான ஏன் நடவடிக்கை எடுக்க முனையவில்லை? என்ற கேள்வி உள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக இராணுவம் அல்லது இராணுவ அதிகாரிகள் சதி செய்வது பாரதூரமான விடயம். அவ்வாறிருந்தும், அதனை பொறுத்துக் கொள்வது அல்லது மூடி மறைப்பது அதைவிடப் பாரதூரமானது.

இவ்வாறான நிலை, நாட்டை பாகிஸ்தான் போன்ற நிலைக்குள் தள்ளி விடும்.  கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தில் இராணுவத்தின் பங்கு அதிகம் இருந்தது. அது ஆபத்தானதாக சுட்டிக்காட்டப்பட்ட போதும், அரசாங்கம் அதனை மறுத்தது.

ஆனால் இப்போது, ஆட்சிக்கவிழ்ப்பில் இராணுவம் பங்கெடுத்தது என்ற குற்றச்சாட்டு வருகிறது.

ஏற்கனவே, கடந்த மே மாதம் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுகளை இராணுவம் நிறைவேற்றத் தவறியதா என்ற சர்ச்சையும் நீடிக்கிறது.

அப்போது ஜனாதிபதியின் உத்தரவுகளை இராணுவம் புறக்கணித்தது என்றும், கூறப்பட்டது.

அது தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் குறைபாடுகள் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போதே, கடந்த ஆண்டு மே மாத இறுதியில் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதி பதவியில் இருந்து, அகற்றப்பட்டு, முப்படைகளின் பிரதானியாக மட்டும் தொடர்கிறார்.

அதேவேளை, மே 13ஆம் திகதி வன்முறைகளின் போது ஜனாதிபதியின் உத்தரவு மீறப்பட்டதா என்பது குறித்து விசாரணைக் குழுவொன்றை நியமிக்க உத்தரவிடக் கோரி ஆளும்கட்சியினர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெனரல் சவேந்திர சில்வா, ஜெனரல் கமல் குணரட்ன போன்றவர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

அதாவது, கோட்டாவின் அரசாங்கத்தைப் பாதுகாக்கும் கடப்பாட்டை நிறைவேற்ற பாதுகாப்பு அமைப்புகள் தவறி விட்டன என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

போருக்குப் பின்னர், இராணுவத்தைப் பாதுகாப்பதில் அவர்கள் பெரியளவில் கவனம் செலுத்தியிருந்தனர். ஆனால் அதே அரசாங்கத்தைப் பாதுகாக்க இராணுவம் தவறியிருந்தால், அதற்கான காரணம் என்ன?

கோட்டாவின் மீது அல்லது அவரது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லையா?. இந்த இடத்தில் எல்லே குணவன்ச தேரர் முக்கிய காரணம் ஒன்றை முன்வைத்திருக்கிறார்.

போர்க்குற்றச்சாட்டுகளை வைத்து, அமெரிக்க தூதுவர் இராணுவ அதிகாரிகளைத் தம் பக்கம் இழுத்துக் கொண்டார் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

போர்க்குற்றச்சாட்டுகளினால் இலங்கை இராணுவம் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத் தடைவிதித்திருக்கிறது. இன்னும் பலருக்கு வீசா மறுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க இராணுவ அதிகாரிகள் ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஒத்துழைத்திருக்கின்றனர் அல்லது ஒத்துழைத்திருப்பார்கள் என்பது தான் எல்லே குணவன்ச தேரரின் குற்றச்சாட்டு.

இந்தக் கட்டத்தில் தமிழர் தரப்பு ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டும்.

ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய இராணுவ அதிகாரிகளின் உதவியைப் பெற்றிருந்தால், அது எவ்வாறு பொறுப்புக்கூறலுக்காக அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும்? தமிழர் தரப்பு முக்கியமாக சிந்திக்க வேண்டிய விடயம் இது.

Share.
Leave A Reply

Exit mobile version