நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை முதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தானாக முன்வந்து, 2022 நவம்பரில் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, “இலங்கை தனது 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் 2023 பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்பதாக, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்” என்று கூறியதுடன், தமிழர் தரப்பை அதற்கான பேச்சுவார்த்தைக்கும் அழைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, டிசெம்பர் 2022இல், இது தொடர்பிலான சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து, நாளை முதல் தமிழ்த் தரப்புடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகத் திட்டமிடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், தமிழ்த் தரப்பின் ஒரு தரப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தாம் முன்வைத்துள்ள மூன்று பூர்வாங்கக் கோரிக்கைகளான, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான வகைகூறல், வடக்கு-கிழக்கில் அரசபடைகள் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தல் ஆகியன நிறைவேற்றப்படாவிட்டால், தாம் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றவதா, வேண்டாமா என்பது தொடர்பில், முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
வடக்கு-கிழக்குத் தமிழர் தலைமைகளின் பேச்சுவார்த்தை ஆற்றல் பற்றி சௌமியமூர்த்தி தொண்டமான் சொன்ன கருத்தை பலமுறை பதிந்திருக்கிறேன்.
காரணம், அதில் உண்மை இருக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததும், முதன் முதலாக அரசாங்கத்தின் திட்டமிட்ட அடக்குமுறைக்கு ஆளானவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள்.
இலங்கைக்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள் வந்த 200ஆவது ஆண்டு இது. சுதந்திர இலங்கைக்கான குடியுரிமைச் சட்டத்தை வரைந்த டி.எஸ் சேனநாயக்க தலைமையிலான அரசாங்கம், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை; அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள்.
இந்திய வம்சாவளி மக்கள், குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர் இந்நாட்டில் அனுபவித்த அடக்குமுறைகளும் துன்பங்களும் கொஞ்சநஞ்சமல்ல.
ஆனால், இந்திய வம்சாவளி மக்களின் தலைமைகள், தமது பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள, முற்றுமுழுதான எதிர்ப்பு நடவடிக்கை என்ற தீவிர நிலைப்பாட்டை எடுக்காமல், விட்டுக்கொடுப்புகளுடனான ஒத்தியைபு அணுகுமுறையைக் கையாண்டார்கள்.
பாடசாலைகள் இல்லாத மலையகத் தோட்டப்புறங்களில் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.
வீடுகளற்றிருந்த தோட்டத் தொழிலாளருக்கு வீடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்பட்டன. பாடசாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டது.
ஏதோ ஒரு வகையிலேனும், கொஞ்சம் கொஞ்சமாகவேனும், கடந்த ஏழரை தசாப்தங்களில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேறியிருக்கிறது.
அடுத்த தலைமுறை தோட்டத்தொழிலுக்குள் சுருங்காது, கல்வி, வணிகம் என மிகவும் முன்னேறியிருக்கிறது.
2003இல், அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினையாக இருந்த குடியுரிமைப் பிரச்சினையும். அன்றைய ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில், யோகராஜன் தலைமையில் தீர்க்கப்பட்டது.
இந்திய வம்சாவளித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், கடந்த ஏழரை தசாப்தத்தில் மலையகம் முன்னேறியிருக்கிறது.
அப்படியானால் அவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் தமக்கான அரசியல் அணுகுமுறையை சரியாகக் கையாண்டிருக்கிறார்கள்.
Thondaman
செல்வா, ஜீ.ஜீ, தொண்டா என முத்தலைவர்களைக் கொண்டமைந்த தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாறியபோது, ‘இது எமது மக்களுக்கான தேவையோ, பாதையோ இல்லை’ என தொண்டமான் அன்று விலகி, தனி வழி சென்றது, அவர்களைப் பொறுத்தவரையில் சரியான முடிவாகவே இருக்கிறது.
மலையக அரசியலினது அடிப்படையாக, ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக குடியுரிமைப் பிரச்சினைதான் இருந்தது.
ஆனால், அது தீர்க்கப்படும் வரை, நாம் மற்றவற்றைப் பற்றி பேசமாட்டோம் என்றோ, அது தீர்க்கப்படும் வரை தமது மற்றைய அபிவிருத்தித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான அரசியலைச் செய்யமாட்டோம் என்றோ மலையகத் தலைமைகள் வங்குரோத்து அரசியலை முன்னெடுக்கவில்லை.
அவர்கள் தமக்கான அடைவுகளைக் கொஞ்சம்கொஞ்சமாக அடைந்துகொள்ளும் அரசியல் அணுகுமுறையைக் கையாண்டார்கள். இன்றும் அதையேதான் கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.
இதை ஒரு வகையாக, கூடுதல்முறைவாத (incrementalism) அணுகுமுறை எனலாம். ‘கூடுதல்முறைவாதம்’ என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஓர் உத்தியாகும்.
இது ஒரு முழுமையான தீர்வை, ஒரே நேரத்தில் அடைய முயல்வதை விட, காலப்போக்கில் சிறிய, அதிகரிக்கும் மாற்றங்களைச் செய்வதனுடாக, நீண்டகாலத்தில் தீர்வை அடைந்துகொள்வதை வலியுறுத்துகிறது.
ஒரு பிரச்சினையில், சம்பந்தப்பட்ட தரப்பினர் முரண்பட்ட இலக்குகளைக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளில், அல்லது பிரச்சினை சிக்கலானதாகவும் எளிதில் தீர்க்கப்பட முடியாத சூழ்நிலையிலும் இந்த அணுகுமுறை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
சிறிய, அடையக்கூடிய படிகளில் கவனம் செலுத்துவதன் மூலம், தரப்புகள் அதிகமாக அல்லது குழப்பமடையாமல் ஒரு தீர்மானத்தை நோக்கி முன்னேறலாம்.
நம்பிக்கையை கட்டியெழுப்பவும் எதிர்கால ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை நிறுவவும் உதவுகிறது.
எவ்வாறாயினும், தரப்புகள் செயல்முறையைத் தொடர்வதற்கும் தேவையான சமரசங்களைச் செய்வதற்கும் உறுதியளிப்பது முக்கியம்.
ஏனெனில், அடைவுகளின் அதிகரிப்பின் வேகம் மெதுவாக இருக்கலாம். ஆகவே நீண்டகாலம், பொறுமை, விடாமுயற்சி என்பன இந்த அணுகுமுறைக்கு இன்றியமையாதன.
வடக்கு-கிழக்கு தமிழர் தலைமைகளைப் பொறுத்தவரையில், அவை 2009இற்கு முற்பட்ட அணுகுமுறையிலிருந்து இன்னும் பெரிதும் மாறவில்லை என்பதுதான் திண்ணம்.
ஓர் ஆயுதம் தாங்கிய இயக்கத்தால் முன்னெடுக்கப்படும் ‘தனிநாட்டு’ விடுதலை அரசியலுக்கும், ஒரு ஜனநாயக அரசியல் கட்சியால் முன்னெடுக்கப்படும் ‘அதிகாரப்பகிர்வு’ கோரும் அரசியலுக்கும், அடிப்படையில் நிறைய வேறுபாடு இருக்கிறது.
ஆகவே, 2009இற்குப் பின்னரான தமிழர் அரசியல், மீளக்கட்டமைப்பு செய்யப்பட வேண்டிய அத்தியாவசியத் தேவை இருக்கிறது.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலான அணுகுமுறையும், அடிப்படையிலேயே மாற வேண்டிய நிர்ப்பந்தம், 2009இற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகியும், தமிழர் அரசியலில் அந்த மாற்றம் இடம்பெறவில்லை.
இன்னும் தனிநாட்டுக் கனவை, எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், தமிழ் மக்களிடையே பகட்டாரவாரப் பேச்சாக விதைக்கும் வங்குரோத்து அரசியல், இன்னமும் இங்கு முன்னெடுக்கப்படுகிறது என்பது கவலைக்குரியது.
பூகோள அரசியல் பற்றிய பேசுபவர்கள் கூட, மாறிவரும் உலக ஒழுங்கையும், புதிய உலக ஒழுங்கில் பலவான்களாக மாறிவரும் இந்தியா, சீனா போன்ற நாடுகளையும், பிரிவினை தொடர்பிலான அவர்களது அணுகுமுறைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாது, வெறும் வாய்ச்சொல் கனவாக ‘தனிநாடு’ பற்றிப் பேசுவதெல்லாம் அடிப்படையில் நேர்மையற்ற செயலாகும்.
இலங்கையின் இனப்பிரச்சினை, இலங்கைக்குள்தான்; இலங்கை அரசாங்கத்தோடு பேசித்தான் தீர்க்கப்பட முடியும்.
எந்த இரட்சகனும் பூமிக்கு இறங்கிவந்து, “இந்தா தனிநாடு; இந்தா சமஷ்டியாட்சி” என்று தூக்கித்தந்துவிடப் போவதில்லை. இந்த யதார்த்தத்தை, தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களும் புரிந்து கொள்வது அவசியம்.
இன்று, இலங்கையின் மிகப் பின்தங்கிய மாகாணங்களாக வடக்கும் கிழக்கும் இருக்கின்றன. இது மாற வேண்டுமென்றால், தமிழ் மக்களின் அரசியல் அணுகுமுறை மாற வேண்டும்.
அது தீர்க்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார். 2009இற்குப் பின்னர், “இனப்பிரச்சினையா, அப்படியென்றால் என்ன? நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்” எனச் சப்பைக்கட்டு அரசியல் நடத்திய பேரினவாத ஜனாதிபதிகள்தான் இருந்தார்கள்.
2009இற்குப் பின்னர், மைத்திரிபால சிறிசேன உட்பட, எவரும் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை!
தனிப்பட்ட ரீதியிலும், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதை ரணில் விரும்புவார். ஏனென்றால் அது மட்டும்தான் அவர் வரலாற்றில் இடம் பிடிப்பதற்குள்ள ஒரே வாய்ப்பு.
ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு மிகக் கவனமாகவும், இராஜதந்திரமாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைகளுக்காக, தமிழரின் அரசியலின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுவிடக் கூடாது.
கொள்கைத் தெளிவு வேண்டும். அதே போல அதனை அடைந்துகொள்ளும் சாதுரியமும் இராஜதந்திரமும் வேண்டும்.
இல்லையென்றால், இந்தக் கொள்கைகள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கும்.
இது பத்திரிகையில் அறிக்கை விட்டு, அரசியல் செய்வதற்கான நேரமல்ல. தமிழர் தரப்பு, தமிழ் மக்களுக்கான அடைவுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம்.
இல்லாவிட்டால், வாய்ச்சொல் சவடால்களை விட்டுக்கொண்டும், சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்த பேசிக்கொண்டும், அறிக்கைகள் விட்டுக்கொண்டும், சர்வதேச நாடுகளுக்கு விஜயம் செய்துகொண்டும் தமிழ் அரசியல்வாதிகள் காலத்தை ஓட்ட, வறுமையிலும் துன்பத்திலும், தமிழ் மக்கள் உழன்று சாக வேண்டிய நிலையைத்தான் இந்த வங்குரோத்து அரசியல் தரும்.
-என்.கே அஷோக்பரன்–