காஞ்சிபுரத்தில் ஆண் நண்பர் கண்ணெதிரே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு
காஞ்சிபுரத்தில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரை, அவரது ஆண் நண்பர் கண்ணெதிரில், முகக்கவசம் அணிந்த 5 நபர்கள் மிரட்டி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஐந்து நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களை விசாரணை செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர், நண்பர்களின் உதவியால் மீட்கப்பட்டனர் என்றும் தற்போது அவர்கள் காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண்ணுக்கு நடைபெற்ற பாலியல் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், ஐந்து நபர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண், அவரது ஆண் நண்பர் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருவதாகவும் அவர்கள் இதற்கு முன்னதாக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
”காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவியும் அவரது நண்பரும் பிபிஏ மற்றும் பி.காம் படித்து வருகின்றனர். அவர்கள் அடிக்கடி நகரின் புறநகர் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்றுள்ளதாகக் கூறுகின்றனர்.
இந்த முறை, பெங்களூரு – புதுச்சேரி சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் தெரு விளக்குகள் இல்லாத பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு காலி மனை ஒன்றும் உள்ளது.
அங்கு சென்ற இவர்களை மது அருந்திக் கொண்டிருந்த இரண்டு நபர்கள் மிரட்டியுள்ளனர். அந்த நபர்கள் மேலும் மூன்று நபர்களை அழைத்துள்ளனர். ஐந்து நபர்களும் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பெண் இரண்டு நபர்களை அடையாளம் கண்டுள்ளார், மற்றவர்களை விசாரணை மூலம் கண்டறிந்தோம், அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர் என்பதால் அவர்களைக் கண்டறிவதில் சிரமம் இருந்தது,” என்று துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தெரிவித்துள்ளார்.
பாலியல் வல்லுறவுக்கு ஆளானது குறித்து நண்பர்களிடம் தெரிவித்த பின்னர், அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றனர் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் முதலில் புகார் தர முன்வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான மன நல ஆலோசனையை வழங்க வேண்டும் என்றும் வழக்கில் விசாரணை துரிதமாக நடைபெற்றால்தான் விரைவில் நீதி கிடைக்கும் என்றும் கூறுகிறார் பெண்ணிய செயற்பாட்டாளர் சுகந்தி.
தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் ஒரு நாளில் சுமார் 86 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடைபெறுவதாகவும், ஒரு மணிநேரத்தில் பெண்களுக்கு எதிரான 49 குற்றங்கள் நடைபெறுவதாகவும் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார் சுகந்தி.
”தமிழ்நாட்டில், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இதுவரை 10 ஆண்டுகளுக்கு மேலும் வழக்கு நடக்கும் சம்பவங்கள் உள்ளன. அதனால், இதுபோன்ற வன்கொடுமை வழக்குகளில் விசாரணையைத் துரிதப்படுத்துவதுதான் சிறந்தது. சமீபத்தில் நாங்கள் கையாண்ட ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வழக்கு நிறைவு பெற்றது.
வழக்கு தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பலவிதமான அச்சுற்றுத்தலைகளைச் சந்திக்கின்றனர். காஞ்சிபுரம் மாணவி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். அவர் தமிழ்நாட்டின் நிர்பயா, அவருக்குப் போதிய பாதுகாப்பு தரப்படவேண்டும்,” என்கிறார் சுகந்தி.