மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 காளைகளை அடக்கி 7 லட்சம் மதிப்பிலான கார் ஒன்றைப் பரிசாக வென்ற விஜய் என்ற மாடுபிடி வீரர், இனி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

 

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட காளையின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

 

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

 

11 சுற்றுகளாக…

காளையை அடக்கும் விஜய்

இதையடுத்து இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இணையம் மூலம் பதிவு செய்துகொண்டவற்றில் 1004 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

அனுமதி பெற்ற காளைகளில் சில பரிசோதனையில் நிராகரிப்பட்டன. இது தவிர, மாலை 5 மணிக்கு போட்டியை முடிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்ததால், இறுதியாக 737 காளைகள் களமிறக்கப்பட்டன. சுற்றுக்கு 25 மாடுபிடி வீரர்கள் வீதம் 11 சுற்றுகளாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

 

முதல் 10 சுற்றுகளில் தலா 3 சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 11வது சுற்றில் கலந்துகொண்டனர்.

மிரட்டிய காளைகளை அடக்கிய வீரர்கள்

பல காளைகள் வீரர்களுக்குச் சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டிப் பறக்கவிட்டன. அப்படிப்பட்ட காளைகளுக்கு விழாக் குழுவினர் பரிசுகளை வழங்கினர். இதேபோன்று காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகளை வழங்கினர்.

கார் – பைக் பரிசு

இரண்டாவது பரிசு பெற்ற கார்த்திக்

போட்டியில் மொத்தம் 28 காளைகளை அடக்கிய மதுரை ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய்க்கு முதல் பரிசாக 7லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்பட்டது.

இரண்டாவதாக 17 காளைகளைப் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாவதாக 13 காளைகளைப் பிடித்த விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்குப் பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது.
சிறந்த காளை தேர்வு

முதல் பரிசு பெற்ற காளைக்குப் பரிசு

போட்டியில் சிறப்பாக விளையாடிய காளையின் உரிமையாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காமேஷ் என்பவருக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்ட மாட்டின் உரிமையாளர் வில்லாபுரம் ஜி.ஆர்.கார்த்தி என்பவருக்கு வாஷிங்மெஷின் வழங்கப்பட்டது.

மூன்றாவது சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட மாட்டின் உரிமையாளர் மதுரை அவனியாபுரம் லோடுமேன் முருகனுக்கு பசுமாடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

 

போட்டியில் மாடு குத்தியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள், சிறுவர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 61 பேர் காயமடைந்தனர். இவர்களில் சுமார் 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

“இனி விளையாடப் போவதில்லை”

28 காளைகளை அடக்கிய விஜய்,  பேசும்போது, “எனது கனவு நிறைவேறிவிட்டதால் இனி எனது தம்பிகளுக்கு மாடுபிடி பயிற்சியளிக்கப் போகிறேன்,” என்றார்.

 

மேலும் இது பற்றிப் பேசிய அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டாம் பரிசாக மோட்டார் சைக்கிள்கள் பரிசாகப் பெற்றேன்.

இப்போது முதல் இடத்தைப் பிடித்ததில் என் கனவு நிறைவேறிவிட்டது. நான் அடுத்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களமிறங்க போவதில்லை.

இதன்பிறகு நான் என் தம்பிகளுக்கு மாடுபிடி பயிற்சி அளித்து அவர்களை சிறந்த மாடுபிடி வீரர்களாக உருவாக்குவேன்.

எனது பெற்றோர், உறவினர்கள் அனைவருமே எனக்கு தொடக்கம் முதல் உறுதுணையாக இருந்தனர்.

அவர்கள் எனக்கு அளித்த ஆதரவால் மட்டுமே என்னால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது. நான் தற்போது மின்வாரியத்தில் கேங்மேனாகப் பணியாற்றி வருகிறேன். எனக்கு வேலையில் பதவி உயர்வு கொடுத்தால் மிகவும் மகிழ்வேன்,” என்று கூறினார் விஜய்.

 

சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்ட காளையின் உரிமையாளர் காமேஷின் சகோதரர் ராஜா கூறுகையில், “எங்களது காளை இந்த ஆண்டு முதல் பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் காளையின் பெயர் வீரன்.

அது இந்த ஆண்டு சிறந்த காளையாகத் தேர்வாகும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எங்கள் அனைவருக்கும் இது இன்ப அதிர்ச்சி. இதற்கு நாங்கள் கொடுத்த பயிற்சி மட்டுமே காரணம் அல்ல. காளையின் திறமையே முக்கியக் காரணமாக உள்ளது,” எனத் தெரிவித்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version