உக்ரைனுக்கு கனரக பீரங்கிகளை வழங்க பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷியா கூறி உள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ரஷியா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி, உக்ரைனை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுப்பதற்காக கனரக பீரங்கி வாகனங்களை வழங்கும்படி மேற்கத்திய நாடுகளுக்கு கோரிக்கை வைத்தது.

அதன்படி உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

முதல் மேற்கத்திய நாடாக கனரக பீரங்கிகளை வழங்க பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. வரும் வாரங்களில் சக்திவாய்ந்த 14 சேலஞ்சர்-2 பீரங்கிகள் மற்றும் பீரங்கி தாக்குதலுக்கு பயன்படும் நவீன தளவாடங்களையும் அனுப்புவதாக பிரிட்டன் சனிக்கிழமை கூறியது.

இது ரஷியாவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. பிரிட்டன் நாடு தங்களின் ரஷிய எதிர்ப்பு இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாக உக்ரைனை பயன்படுத்துவதாக, ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.

மேலும், பிரிட்டன் உக்ரைனுக்கு அனுப்பும் சேலஞ்சர்-2 பீரங்கிகள், மற்ற கவச வாகனங்களை போன்று தாக்குதலில் தீப்பற்றி எரியும் என்றும் ரஷியா எச்சரித்துள்ளது.

பிரிட்டன் மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய புதிய ஆயுதங்கள் போர்க்களத்தில் நிலைமையை மாற்றாது என்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version