பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியான வாரிசு படமும், துணிவு படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருப்பதாக அந்தப் படங்களைத் தயாரித்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம், வாரிசு படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு எழுந்துள்ளது.
நன்றி தெரிவித்த வாரிசு படக்குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியானது.

இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளதையடுத்து வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ உடன் படத்தில் நடித்த சரத்குமார், ஷாம், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய நடிகர் சரத் குமார், “வாரிசு திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் விஜய்க்கு அப்பாவாக நடித்தது மகிழ்ச்சி,” என்று பேசினார்.

அவரின் உரையில் நடிகர் விஜய்யை ‘சூப்பர் ஸ்டார்’ எனக் குறிப்பிட்டு சரத்குமார் பேசியது

நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு

“சூப்பர் ஸ்டார் என்பது பட்டம்தான், அது பெயர் பொறித்த பட்டயம் அல்ல. அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டாராக இருந்தார். பிறகு ரஜினி சூப்பர் ஸ்டாராக ஆனார்.

இந்தத் தலைமுறையில் தம்பி விஜய் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். வசூல் ரீதியாக விஜய்க்கு தான் அதிக வியாபாரம் நடக்கிறது,” என சென்னயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணையாளர் சீமான் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தம்பி விஜய்க்கு பெண்கள், குழந்தைகள் என அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஏன் ஒரு தமிழர் சூப்பர் ஸ்டாராக வருவதை உங்களால் தாங்க முடியவில்லை. விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினியும் ஒப்புக் கொள்வார்,” என சீமான் பேசினார்.

பொங்கல் வசூல் என்ன சொல்கிறது?

நடிகர் விஜய் நடிக்கும் படங்களுக்குக் கிடைக்கும் அதிக வரவேற்பும் அவரின் படங்களின் வசூலைக் குறிப்பிட்டு தான் சீமான் அவரை சூப்பர் ஸ்டார் எனக் கூறி இருக்கிறார்.

பொங்கல் பண்டிகைக்குக்கு வெளியான நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் எவ்வளவு வசூலைப் பெற்றுள்ளது என்ற எண்ணிக்கையின் மூலம் இது குறித்து அறிந்து கொள்ள முடியும்.

பொங்கலுக்கு ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் முதல் 6 நாட்களில்(ஜனவரி 16ஆம் தேதி வரை) உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தனது டிவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இது மட்டுமின்றி, வாரிசு திரைப்படத்தில் ஓ.டி.டி. விற்பனையும், தொலைக்காட்சி உரிமம், பாடல்களுக்கான உரிமம் என மற்ற தளங்களின் விற்பனையை சேர்க்கும்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், இந்த வாரத்தின் இறுதி வரை வாரிசு திரைப்படத்திற்கு தியேட்டர்களில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வாரிசு திரைப்படத்தின் தியேட்டர் வசூல் அதிகரிக்கும்.

துணிவு பட வசூல்

வாரிசு திரைப்படத்தின் வசூலுடன் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் வசூலும் ஒப்பீடு செய்யப்படுகிறது.

இந்தப் படத்தை தயாரித்துள்ள ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘துணிவு’ படம் உலகம் முழுவதும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது. ஆனால் படத்தின் வசூல் குறித்து எந்தத் தகவலையும் துணிவு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இப்போது வரை வெளியிடவில்லை.

சில நாட்களுக்கு முன்பு வாரிசு திரைப்படக்குழு ‘பொங்கல் வின்னர்’ என்ற தலைப்புடன் வாரிசு பட போஸ்டரை பகிர்ந்து இருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாக துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ‘தி ரியல் வின்னர்’ என்ற துணிவு படத்தின் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த இரண்டு படங்களையும் தியேட்டர்களின் விநியோகம் செய்து வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம், இந்த இரண்டு பட போஸ்டர்களை பதிவிட்டு துணிவு, வாரிசு இரண்டு படங்களுமே பொங்கல் வெற்றிப் படங்கள் எனப் பதிவிட்டிருந்தது.

எனினும், துணிவு படத்தின் வசூல் குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் திரைப்படங்களின் வசூல் தொடர்பாகக் கண்காணிப்பதாகக் கூறி பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் என்று சமூக ஊடகங்களில் பதிவிடும் நபர்களில் ஒருவர், துணிவு படம் இப்போது வரை 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மற்றொரு பதிவில், துணிவு படம் லாபத்தை ஈட்டி விட்டதாகவும் வியாபார ரீதியாக இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படம் துணிவு ஒரு நபர் பதிவிட்டுள்ளார்.

வாரிசு திரைப்படத்தின் வசூலை ஒப்பிட்டு நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என அழைக்கும் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் சார்பில் எந்த விளக்கமும் தற்போது வரை அளிக்கப்படவில்லை.

உண்மை நிலவரம் என்ன?

வாரிசு துணிவு

வாரிசு, துணிவு படங்களின் வசூல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பல பதிவுகள் வரும் நிலையில், இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம், “தமிழ்நாட்டில் இரண்டு திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்னும் 10 நாட்கள் வரை தியேட்டர்களின் இரண்டு படங்களையும் காண மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

என்னால் என்னுடைய தியேட்டரின் வசூலைக் கூற முடியும். மொத்த தியேட்டர் வசூல் குறித்து என்னால் சரியான தகவலைத் தர முடியாது.

ஆனால், வசூல் தொடர்பாக முழு விவரமும், படத்தை விநியோகித்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும், வாரிசு – துணிவு பட தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே தெரியும்.

அவர்கள் வெளியிடும் தகவல்தான் துல்லியமாக இருக்க முடியும்,” என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version