இலங்கை அரசாங்கத் தலைவர்கள் வழமையாக கூறுகின்ற ஆனால், தவறாமல் மீறிவந்திருக்கின்ற ஒரு  உறுதிமொழியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்தில்  கடந்தவாரம்  தைப்பொங்கல் விழாவில்  வழங்கியிருந்தார்.

” அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை  ஒரிரு வருடங்களில் கட்டங்கட்டமாக  அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும்.வடக்கில் மாத்திரமல்ல, தெற்கிலும் முதலமைச்சர்கள் அது நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று கோரினார்கள் ” என்று அவர் கூறினார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு கடந்த மாதம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டிய விக்கிரமசிங்க அதன் முதற்சுற்றையடுத்து தமிழ் அரசியல் தலைவர்களுடன் தனியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த சூழ்நிலையில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டிருக்கிறது.

13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பது இலங்கையின் நலன்களுக்கு உகந்தது என்று ஏற்கெனவே பல தடவைகள் கூறிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வருவதற்கு முன்னதாக இந்த உறுதிமொழி ஜனாதிபதியிடமிருந்து வந்ததிருப்பதும் கவனிக்கத்தக்கது.

கடந்த மாதத்தைய மகாநாட்டுக்கு பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்கிரமசிங்கவுடன் நான்கு தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இறுதியாக பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக அவர்கள் பேசினார்கள். இறுதி அரசியல் இணக்கத்தீர்வொன்று குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துகின்ற அதேவேளை, அவசியமான ஒரு முதற்படியாக, (1987 ஜூலை இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து கொண்டுவரப்பட்ட) 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூட்டமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்திக்கேட்டுக்கொண்டது.

அது மாத்திரமல்ல, வடக்கு, கிழக்கில் தமிழர்களின் நிலங்கள் படையினராலும் அரசாங்க திணைக்களங்களினாலும்  சுவீகரிக்கப்படுதல், நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனார் விவகாரம் போன்ற உடனடிப்பிரச்சினைகளுக்கும் துரிதமான தீர்வைக்  காணும் விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவேண்டும்  என்று கூட்டமைப்பு ஒரு வார காலக்கெடுவையும் விதித்தது.

ஆனால், அந்த விவகாரங்களில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் ஒரு முட்டுக்கட்டை நிலையை அடைந்திருக்கின்றன.

இந்த இடைப்பட்ட நாட்களில் கூட்டமைப்பிலும் பிளவு ஏற்பட்டு புதிய கூட்டணி  அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் இனப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தரப்பு பங்கேற்று எந்த  கோலத்தில் இருக்கும் என்ற  கேள்வியும் எழுகிறது.

ஜனாதிபதியின் பொங்கல்விழா உறுதிமொழி குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ” 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக கடந்த காலத்தில்  பல ஜனாதிபதிகள் கூறினார்கள்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அது ஒரு தீர்வு அல்ல. ஆனால், குறைந்தபட்சம்  அரசியலமைப்பில் ஏற்கெனவே இருப்பதையாவது  அவர்களால் நடைமுறைப்படுத்தமுடியும்.அதைக்கூட அவர்கள் செய்யவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இறுதியாக ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பில் கூட்டமைப்பு உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஐந்து விசேட செயற்பாடுகளை  குறிப்பிடும் ஆவணம் ஒன்றைக் கையளித்தது.தேசிய காணி ஆணைக்குழுவையும் மாகாணப் பொலிஸ் படையையும் அமைத்தல் ;  மாகாணசபைகளிடம் இருந்து எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளக்கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் ;  பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும் நிருவகிப்பதற்கு தேவையான நிருவாக அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குதல் போன்ற கோரிக்கைகளே அந்த ஆவணத்தில் உள்ளன.முதலில் அவர்கள் அந்த செயற்பாடுகளை  முன்னெடுக்கவேண்டும். அல்லாவிட்டால், அரசாங்கத்துடன் வெறுமனே  பேச்சுவார்த்தைகளை தொடருவதில் அர்த்தம் எதுவுமில்லை என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஜனாதிபதி தமிழ் தலைவர்கள் எதிர்பார்ப்தைப் போன்று துரிதமாக அந்த செயற்பாடுகளை  முன்னெடுக்கத் தயாராக இல்லை அல்லது அவரால்  முடியவில்லை.

ஓரிரு வருடங்களில் கட்டங்கட்டமாக 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதைப் பற்றியே அவர் பேசுகிறார்.

அதேவேளை, தமிழர்களின் அக்கறைக்குரிய உடனடிப் பிரச்சினைகள் தொடர்பிலாவது குறைந்தபட்சம் முன்னேற்றம் ஏற்படாதபட்சத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைளில் தொடர்ந்து பங்கேற்பதை தமிழ்த் தலைவர்களினால்  தங்கள்  மக்கள் மத்தியில் நியாயப்படுத்தமுடியாது என்பதும்  உண்மையே.

அதுவும் ஊள்ளூராட்சி தேர்தல்களில் தனியாக போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்ததை அடுத்து இறுதியாக எஞ்சியிருந்த பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ) தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் (பளொட்)  வேறு  கூட்டணியை அமைத்திருக்கும் பின்புலத்தில் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தரை தமிழ் அரசியல்வாதிகள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே  நடந்துகொள்வர் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு தேர்தலை எதிர்நோக்கவிருக்கும் நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக விமர்சனங்களைச் செய்வதற்கு  அவர்கள் வாய்ப்புக்களை தேடிக்கொண்டிருப்பார்கள்.

தமிழ் அரசியல் சமூகத்துக்கிடையில் ஏற்பட்டிருக்கும் புதிய பிளவை தனக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்திக்கொள்வதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க அவதானம் செலுத்தத் தவறமாட்டார் எனலாம்.

அதனால்தான் போலும் முதலில் இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்துப் பேசிய அவர் இப்போது 13 வது திருத்தத்தை ஒரிரு வருடங்களில் கட்டங்கட்டமாக  நடைமுறைப்படுத்துவது பற்றி யாழ்ப்பாணத்தில் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி கூட்டிய மகாநாட்டில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் 13  வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு எந்த எதிர்ப்பையும் வெளிக்காட்டவில்லை.

இந்தியாவினால் இலங்கை மீது  பலவந்தமாக திணிக்கப்பட்டதே அந்த திருத்தமும் மாகாணசபைகளும் என்பதே சிங்கள அரசியல் சமுதாயத்தின் பொதுவான அபிப்பிராயமாக இருந்துவரும் நிலையில் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் அந்த திருத்தம் தொடர்பில் முன்னைய காலகட்டங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையை அனுகூலமான முறையில்  விக்கிரமசிங்க பயன்படுத்துவதே விவேகமானது.ஆனால், அதற்கான அரசியல் துணிவாற்றல் அவரிடம் இருக்கவேண்டும்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற வேளைகளில் எல்லாம் ‘ நாடு பிளவடையப் போகின்றது ‘ என்று கூச்சலிட்டு சீர்குலைப்பதையே  வழக்கமாகக் கொண்ட கடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அண்மைக்காலமாக அமைதியாக இருந்தன.ஆனால், அவை மீண்டும் தலைகாட்டத்தொடங்குகின்றன.

13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவடையும் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை செய்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.

ராஜபக்சாக்களின் விசுவாசிகளாக செயற்பட்டுவந்த வீரவன்ச மற்றும் உதய  கம்மன்பில போன்ற அரசியல்வாதிகள் தற்போது  பிரிந்து தனியாகக் கூட்டணிகளை அமைத்து உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்நோக்கத்தயாராகியிருக்கிறார்கள்.

தென்னிலங்கை மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கும் அத்தகைய அரசியல்வாதிகள் மீண்டும் ஆதரவைப் பெறுவற்கு அவர்களுக்கு பழக்கப்பட்டுப்போன நச்சுத்தனமான  இனவாதப் பிரசாரத்தையே  ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்பது நிச்சயம்.

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவும் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிப்பதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆணை கிடையாது என்றும் காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.

நாளடைவில் மேலும் பல சிங்கள கடும்போக்கு சக்திகள் வெளிக்கிளம்புவதைக் காணக்கூடியதாக இருக்கும்.

கடந்த 36 வருடங்களாக மாகாணசபைகள்  நடைமுறையில் இருந்துவருகின்ற போதிலும், அரசியலமைப்பில் உள்ளவாறு  அவற்றுக்குரிய அதிகாரங்களை வழங்குவதற்கு ஏதுவாக 13  வது திருத்தம் உருப்படியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உண்மையில் இது ஒரு அரசியலமைப்பு  மீறலாகும்.அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்துகின்ற சக்திகளுக்கும் நடைமுறைப்படுத்துவதாக உறுதிமொழியை  வழங்கிவிட்டு அதை மீறிவந்திருக்கின்ற அரசாங்க தலைவர்களுக்கும்  இடையில் என்ன வேறுபாடு  இருக்கிறது?

கடந்த முன்றரை தசாப்தங்களாக பதவியில் இருந்துவந்திருக்கும் சகல அரசாங்கங்களுமே திட்டமிட்ட முறையில் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை   உறுதிசெய்துகொண்டன என்றுதான் கூறவேண்டும்.

இதை  இந்திய தலைநகரில் வைத்து முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க ஒரு தடவை  வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்.

இந்தியாவிடம் இருந்து வலியுறுத்தல்கள் வந்த  சந்தர்ப்பங்களில் 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்வது குறித்தும் மகிந்த ராஜபக்ச பல தடவைகள் உறுதியளித்ததும் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஒருவர்தான் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஒருபோதுமே உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ கூறாதவர். அவரிடம் அந்த அளவுக்காவது ஒரு  ‘ நேர்மை ‘ இருந்தது.

இப்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அதுவும் ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற பலத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டு கூறுகிறார்.

இதுவரையில் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத காரியத்தை அவரின் அரசாங்கம் செய்துகாட்டும் என்று தமிழ் மக்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-வீரகத்தி தனபாலசிங்கம்

Share.
Leave A Reply

Exit mobile version