காதலனோடு பேசவைப்பதாகக் கூறி சென்னை மாணவியிடமிருந்து 45 சவரன் தங்கநகைகளை ஏமாற்றிய பஞ்சாப் இளைஞர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர், சீனியர் மாணவன் ஒருவனைக் காதலித்திருக்கிறார். அந்தக் காதலில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் மாணவி மனவேதனயடைந்தார்.
அதனால், அவர் தன்னுடைய காதலை யாராவது சேர்த்து வைக்க உதவுவார்களா என இணையதளத்தில் தேடியிருக்கிறார்.
அப்போது “How to bring back Ex” என்ற செயலியை மாணவி பார்த்திருக்கிறார். பின்னர் அதை ஓப்பன் செய்து பார்த்தபோது, அதில் பிரேக் அப் காதல் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.
அதை பூர்த்தி செய்த மாணவியிடம், வாட்ஸ்அப் காலில் ஒருவர் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார்.
அவர் தன்னை பிரபலமான ஜோதிடர் என்றும், `உன் காதலை சேர்த்து வைக்க உதவுகிறேன்’ என்றும் கூறியிருக்கிறார்.
அதனால் மாணவி, மிகவும் மகழ்ச்சியடைந்திருக்கிறார். இதையடுத்து மாணவியுடன் அந்த ஜோதிடர் அடிக்கடி வாட்ஸ்அப் காலில் பேசி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் மாணவியிடம் பேசிய ஜோதிடர், தன்னுடைய பெயரை அணில்குமார் என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதோடு, `பிரேக் அப் காதலை சேர்த்து வைக்க சில பூஜைகள் செய்ய வேண்டும்.
அதற்கு சில லட்சம் ரூபாய் வரை செலவாகும்’ என மாணவியிடம் ஜோதிடர் அணில்குமார் கூறியிருக்கிறார்.
அதற்கு சம்மதித்த மாணவி, `என்னிடம் பணம் இல்லை, வீட்டில் தங்கநகைகள் இருக்கின்றன. அதைத் தருகிறேன்.
எப்படியாவது என்னுடைய காதலைச் சேர்த்து வைத்துவிடுங்கள்’ என்று ஜோதிடரிடம் கண்ணீர்மல்க கெஞ்சியிருக்கிருக்கிறார்.
இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் 15 சவரன் தங்கநகைகளை சென்னை விமான நிலையத்தில் வைத்து மாணவி அணில்குமாரிடம் கொடுத்திருக்கிறார்.
அதன்பிறகு பூஜைகள் செய்து வருவதாகவும், `விரைவில் உன்னுடைய காதலன் உன்னோடு பேசிவிடுவான்’ என்றும் அணில்குமார் மாணவிக்கு நம்பிக்கை கொடுத்து வந்திருக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் மாணவியை மீண்டும் தொடர்பு கொண்ட ஜோதிடர் அணில்குமார், `பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன.
ஆனால் இன்னும் உன்னுடைய காதலன் மனம் மாறவில்லை. காதலனை மனமாற விடாமல் சில தீய சக்திகள் தடுக்கின்றன.
அதற்காக சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும். அதற்கு ஆறு லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது’ என்று அணில்குமார் மாணவியிடம் வாட்ஸ்அப் காலில் பேசியிருக்கிறார்.
இதையடுத்து மாணவி மீண்டும் வீட்டிலிருந்து சுமார் 30 சவரன் தங்கநகைகளை எடுத்து, டிசம்பர் மாத இறுதியில் அணில்குமாரிடம் கொடுத்திருக்கிறார்.
அதை வாங்கிக் கொண்ட அணில்குமார், மீண்டும் ஜனவரி 10-ம் தேதி மாணவியை வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு, `இன்னும் உன் காதலன் மனமாறவில்லை.
அதனால் வெளிநாட்டுக்குச் சென்று பூஜை செய்ய வேண்டும். அதற்கு 17 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
இந்த பூஜையை செய்து விட்டால், உன் காதலன் உன்னைத் தேடி வந்துவிடுவான்’ என்று நம்பிக்கையாக அணில்குமார் மாணவியிடம் பேசியிருக்கிறார்.
அணில்குமார்
அதையடுத்து, `அவ்வளவு ரூபாய் என்னிடம் இல்லை. ஆனால் வீட்டில் அம்மாவின் தங்கநகைகள் இருக்கின்றன. அதைத் தருகிறேன்’ என்று மாணவி கூறியிருக்கிறார்.
இந்தச் சமயத்தில் மாணவியின் அம்மா, பீரோவில் வைத்திருந்த தங்கநகைகளை எடுத்திருக்கிறார்.
அதில் சுமார் 45 சவரன் தங்கநகைகள் மாயமாகியிருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
உடனே மாணவியிடம் தங்கநகைகள் குறித்து விசாரித்திருக்கிறார். அதற்கு அவர், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி சமாளித்திருக்கிறார்.
அதனால் மாணவியின் அம்மா, தங்கநகைகள் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க முடிவு செய்திருக்கிறார்.
இந்தத் தகவலைத் தெரிந்த மாணவி, தன்னுடைய அம்மாவிடம் உண்மையைச் சொல்லியிருக்கிறார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் அம்மா, விமான நிலைய காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகாரளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் பாண்டி, மாணவி அளித்த தகவலின்படி தங்கநகைகளை வாங்கிய ஜோதிடர் குறித்து விசாரித்தார். அப்போது மாணவியிடம் பேசிய செல்போனின் சிக்னல் பஞ்சாப்பைக் காட்டியது.
மாணவி ஏமாற்றப்பட்ட தகவலை இன்ஸ்பெக்டர் பாண்டி, காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
இதற்காக நகைகளை இழந்த மாணவியிடம், பஞ்சாப் ஜோதிடர் அணில்குமாரிடம் வழக்கம் போல பேசும்படி கூறியது போலீஸ் டீம். அதன்படி மாணவியும் பேசி வந்தார்.
அப்போது அணில்குமார், 17 லட்சம் ரூபாயைக் கேட்டார். உடனே போலீஸார், மாணவியிடம் பணத்துக்குப் பதில் தங்கநகைகளைத் தருகிறேன் என்று கூறும்படி தெரிவித்தனர்.
அதை மாணவி, ஜோதிடர் அணில்குமாரிடம் கூறியதும், அவரும் ஓகே என்று கூறினார்.
இதையடுத்து ஜனவரி 20-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து 17 லட்சம் ரூபாய்க்கான தங்கநகைகளை மாணவியிடமிருந்து பெற்றுக் கொள்வதாக அணில்குமார் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினார்.
உடனடியாக போலீஸார் மஃப்டியில் அன்றைய தினம் மாணவியை அழைத்துக்கொண்டு விமான நிலையத்துக்குச் சென்றனர்.
போலீஸார் விரித்த வலையில் ஜோதிடர் அணில்குமார், அவரின் சித்தப்பா சுகன்தீப் பார்கவி ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.
அவர்களிடமிருந்து எட்டரை லட்சம் ரூபாய் பணம், 54 கிராம் தங்கநகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் அணில்குமார் ஜோதிடர் இல்லை என்பது தெரியவந்தது.
பணத்தை மீட்டுக் கொடுத்ததோடு மகளுக்கு கவுன்சலிங் அளித்த விமான நிலைய போலீஸாருக்கு, மாணவியின் பெற்றோர் கண்ணீர்மல்க நன்றிகளைத் தெரிவித்தனர்.