மட்டக்களப்பு  நகரப்பகுதியில்   உள்ள வீடு ஒன்றில் செய்வினை இருப்பதாக தெரிவித்து பூஜை தட்டில் பணமும் தங்க ஆபரணம் வைத்து பூஜை செய்து செய்வினையை அகற்றி தருவதாக பூஜை தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபா பணமும் தங்க மோதிரம் ஒன்றையும் திருடிச் சென்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் பூசாரி ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (24 ஜனவரி) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை கடுக்காய்முனையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் 22 ம் திகதி மட்டக்களப்பு நகர் பகுதியில் குடியிருந்து வாழ்ந்துவரும் அறிமுகமானவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது அந்த வீட்டின் பகுதியில் செய்வினை செய்திருப்பதாகவும் நான்  நாககன்னி தெய்வம் ஆடி அதனை அகற்றி தருவதாக பெண் போலி பூசாரி தெரிவித்ததையடுத்து வீட்டின் உரிமையாளரும் பூஜை செய்ய உடன்பட்டார்.

இதனையடுத்து அன்றைய தினம் இரவு செய்வினையை அகற்றுவதற்கான பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது பூஜை தட்டில் 60 ஆயிரம் ரூபா பணமும் தங்க ஆபரணங்கள் வைக்கவேண்டும் என கோரியதையடுத்து  அதனை பூஜை தட்டில் வைத்து வெள்ளை துணியால் மூடிகட்டியவாறு பூஜை அறையில் பூஜை நடைபெற்று முடிந்தது.

இதன் பின்னர் பெண் போலி பூசாரி அந்த அறை கதவை மூடிவிட்டு கதவை 10 தினங்களுக்கு திறக்க கூடாது அங்கு நாக கன்னி உலாவருவார் எனவும் 10 தினங்களின் பின்னர் நான் கதவை திறந்து வந்து துணியால்  கட்டிவைக்கப்பட்ட பூஜை தட்டினை  அவிழ்த்து   தருவாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் போலி பூசாரி பெண் தெரிவித்த 10 நாட்கள் முடிந்ததும் அவருக்கு தொலை பேசி அழைப்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து  பூஜை அறைக் கதவை திறந்து  சென்று துணியால் கட்டி வைக்கப்பட்ட பூஜை தட்டினை அவிழ்த்து பார்த்தபோது அங்கு  தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவும் தங்க மோதிரத்தையும் பெண் பூசாரி திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாட்டையடுத்து குறித்த பெண்ணை இன்று கைது செய்ததுடன் இவர் இவ்வாறு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பல வீடுகளில் செய்வினை இருப்பதாகவும் அதனை எடுத்து தருவதாக தெரிவித்து பணம் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற 6 க்கு மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version