2019 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணுவாயுதப் போர் முளூம் அபாயம் ஏற்பட்டதாகவும், அமெரிக்கா தலையிட்டு அதனை தடுத்தது எனவும் அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
சிஐஏவின் தலைவராகவும் பணியாற்றிய மைக் பொம்பியோ, தான் எழுதிய “Never give an inch fighting for the america i love” எனும் நூலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
2019 பெப்ரவரியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பாகிஸ்தானியப் பிராந்தியத்துக்குள் இந்தியப் படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.
காஷ்மீரில் தற்கொலை குண்டுத் தாக்குதலொன்றில் 41 படையினர் கொல்லப்பட்டதையடுத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
பின்னர் இந்திய விமானப் படை விமானமொன்றை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதுடன் விமானியையும் சிறைபிடித்தது.
அப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்புக்காக ட்ரம்புடன் வியட்நாமுக்கு பொம்பியோ சென்றிருந்தார்.
அப்போது தன்னை இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அவசர தொலைபேசி அழைப்பின் மூலம் உறக்கத்திலிருந்து எழுப்பினாரென பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்
‘அணுவாயுத தாக்குதலுக்கான தயார்படுத்தல்களை பாகிஸ்தான் ஆரம்பித்துவிட்டது என அவர் நம்பினார். இந்தியாவும் இது குறித்து சிந்திப்பதாக அவர் எனக்கு தெரிவித்தார்.
‘எதுவும் செய்ய வேண்டாம் எனவும் பிரச்சினையை தீர்க்க ஒரு நிமிடம் அவகாசம் தருமாறும் நான் கோரினேன்’ என பொம்பியோ எழுதியுள்ளார்.
பின்னர் அணுவாயுத தாக்குதல்களுக்கு தயாராகாமல் இருப்பதற்கு இந்தியாவையும் பாகிஸ்தானையும் அமெரிக்க ராஜதந்திரிகள் இணங்கச் செய்தனர் எனவும், ‘ஒரு பயங்கர விளைவைத் தடுப்பதற்கு அன்றிரவு நாம் செய்ததை வேறு எந்த நாடும் செய்திருக்க முடியாது’ எனவும் பொம்பியோ எழுதியுள்ளார்.