ilakkiyainfo

“தமிழர்கள் கோரும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன்” – ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கை தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நடத்தப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மாகாணங்களுக்கு போலீஸ், காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வகையிலான, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இந்த சர்வகட்சி மாநாடு நடைபெற்றது.

 

ஜனாதிபதியின் அழைப்பு

இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத் திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடும் நோக்கில் இந்த சர்வகட்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று முன்தினம் (25) அறிவித்திருந்தது.

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்க மேம்பாட்டு வேலைத்திட்டம் குறித்தே, சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

 


சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்த தலைவர்கள்

பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தி, இந்த சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்திருந்தது.

”அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்வு திட்டத்தை வழங்க ஜனாதிபதி முன்வரவில்லை என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. அதனாலேயே, சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எந்தெந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. ஆனால், ஜனாதிபதியின் அனைத்து விடயங்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அதனாலேயே பிரதான எதிர்கட்சி என்ற வகையில் நாம் மாநாட்டைப் புறக்கணித்தோம்,” என ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளர் உமாச்சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளர் உமாச்சந்திரா பிரகாஷ்

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியும் இந்த மாநாட்டில் நேற்றைய தினம் கலந்துகொள்ளவில்லை.

”முதலில் அரசாங்கத்திற்குள் ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும். அதிகாரப் பகிர்வு தொடர்பிலான ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைக்கு, ராஜபக்ஸ தரப்பினர் விருப்பமா?

தினேஷ் குணவர்தன விருப்பமா? பிரசன்ன ரணதுங்க விருப்பமா? முதலில் இவர்களுக்கு இடையில் இணக்கப்பாடொன்று எட்டப்பட வேண்டும். அரசாங்கத்தின் பக்கத்தில் தேசிய பிரச்னைக்குத் தீர்வை வெளிப்படுத்தும் சட்டமூலமொன்று முன்வைக்க வேண்டும்.

அது முன்வைக்கப்பட்ட பின்னர், கலந்துரையாடல்களை நடத்த முடியும். போலியாக தேநீர் அருந்தி விட்டு, கேக் துண்டொன்றை சாப்பிட்டு, கலந்துரையாடி சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு நாம் இணைய மாட்டோம்,” என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்

சர்வகட்சி மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டொலோ கட்சியும் பங்கேற்றவில்லை.

இந்த விடயம் தொடர்பில் டொலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடம் பிபிசி தமிழ், வினவியது. ”அரசியல் கைதிகளின் விடுதலை, காணி அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்னை என முக்கியமான பொது விடயங்களைக் கூறியிருந்தோம்.

நாம் கோரிய ஒரு விடயம்கூட நடக்கவில்லை. சும்மா இருந்து பேசிவிட்டுச் செல்லக்கூடாது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வந்து, 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு சொல்லியிருக்கின்றார்.

அது சம்பந்தமாகவே இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கலாம். சொல்லப்பட்ட விடயங்கள் ஒன்றுமே நடக்காத இடத்தில் பேச்சுவார்த்தைக்குச் செல்வது வீணானது.

இந்த முக்கிய விடயங்கள் நடந்தால்தான், இனப் பிரச்னைக்கான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியும்,” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கின்றார்.
டொலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்

நேற்றைய சர்வகட்சி மாநாட்டில் புளொட் அமைப்பு கலந்துகொள்ளாமை குறித்து, அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் பிபிசி தமிழ் வினவியது.

”நாங்கள் முழுமையாகப் புறக்கணிக்கவில்லை. அவர் சொன்ன விடயங்களான காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்களை முதலில் செய்து முடித்துவிட்டதன் பின்னர், நாம் கலந்துகொள்வோம். அதுவரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்,” என தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிடுகின்றார்.

மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இந்த சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்திருந்தது.

இது தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

”தேசிய இனப்பிரச்னை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் பேசுங்கள்,’ என நாம் திரும்ப, திரும்ப ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் கோரினோம்.

“எமது பிரச்னைகள் பற்றிப் பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள்.

ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துகளைத் தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்ரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் தொடர்புகளில் வடகிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம்.

ஆனால், மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகள் இன்று ‘தோட்ட வரம்புகளுக்கு’ வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்து தரப்பினரும் அறிய வேண்டும்.

தேசிய இனப்பிரச்னை என்பது இன்று வடக்கு, கிழக்கை மட்டும் மையமாகக் கொண்டதல்ல, அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஓர் எதிரணி கட்சியாக இருந்தாலும்கூட, ‘தேசிய இன பிரச்னை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கிறதா’ என நாம் கேள்வி எழுப்பவில்லை.

தேசிய இன பிரச்னையே இந்நாட்டின் பிரதான பிரச்னை. இந்நாட்டின் எந்தவோர் அரசு தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு.

இந்தக் கருத்தை நாம் நமது வடகிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாற்றி கொண்டுள்ளோம். ஆகவே, இன்று ஜனாதிபதி விக்ரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்,” என மனோ கணேசன் கூறுகின்றார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் நிலைப்பாடு

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

”இந்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதிக்கு முன்னர், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி வழங்கியிருந்தார். எனினும், இதுவரை அவர் எதையும் செய்யவில்லை.

அதுகுறித்து எமது கவலையை வெளியிட்டோம். எனினும், இந்த விடயங்களை தான் நிச்சயமாகச் செய்வேன் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்தார்.

13வது திருத்தம் அரசியலமைப்பில் இருக்கின்ற காரணத்தால், அதை அமல்படுத்தும் பொறுப்பு நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட தனக்கு உள்ளதாக அவர் கூறுகின்றார்.

அதனால், அதை நிறைவேற்றுவேன் எனக் கூறினார். காணி விடுவிப்பு தொடர்பிலும் விரிவாகத் தெளிவூட்டினார். இதை ஒரே நாளில் நடைமுறைக்குக் கொண்டு வர முடியும் என நான் கூறினேன்.

இதை அமலுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து ஆவணங்களும் இருக்கின்றமையால், ஒரு நாள் போதுமானது,” என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர்

 

நல்லிணக்கம் என்ற பெயரில் இனவாதத்தைத் துண்டும் வகையில் சர்வகட்சி மாநாட்டு பேச்சுவார்த்தை அமைந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் குறிப்பிடுகின்றார். ”குறிப்பாக ஒரு விடயத்தைக் கூற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், போலீஸ், காணி அதிகாரங்களை வழங்குவதா என்பது தொடர்பில் இல்லை பேச வேண்டும்.

தமிழ், சிங்களம், முஸ்லிம் யாராக இருக்கட்டும். விவசாயம் செய்யத் தயார் என்றால், அவர்களுக்கு காணிகளை வழங்குங்கள். காணி அதிகாரம் இல்லை. நல்லிணக்கம் என்ற பெயரில், இல்லாத ஓர் இனவாதத்தைத் துண்டும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

நல்லிணக்கம் இல்லை, நல்லிணக்கத்தை இல்லாதொழிக்கும் ஒரு திட்டம் இது. மக்களுக்கு காணி வழங்க வேண்டுமே தவிர, இனவாதமாக காணிகளைப் பகிர்ந்து அளிக்கக்கூடாது. வடக்கு மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு யாரும் எதிர்ப்பு கிடையாது.

ஆனால், காணி அதிகாரம் என்பது வேறொரு விடயம். மக்களிடையே வைராக்கியத்தைத் துண்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. இதை நாம் செய்யக்கூடாது.” என அத்துரெலிய ரத்தன தேரர் குறிப்பிடுகின்றார்.

ரணில் விக்ரமசிங்க

 

முதலில் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே, தேசிய பிரச்னைக்குத் தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவிக்கின்றார்.

”13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஒவ்வொருவரின் கருத்துகளையும் பெற்றுக் கொண்டார்கள். அதனால், விரைவில் நல்லதொரு விடயம் இடம்பெறும். கலந்துரையாடலில் நன்மை உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் இருக்கின்றார்கள். நன்மை இல்லை என அவர்கள் கூறி வருகின்றார்கள்.

நாடு தொடர்பிலும், நாட்டின் பொருளாதாரம் தொடர்பிலும் சிந்தித்து கருத்துகளைத் தெரிவித்தால், நான் நினைக்கின்றேன். இந்த விடயத்தில் நன்மை இருக்கின்றது என நினைக்கின்றேன்.

தேசிய பிரச்னைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க, முதலில் 13வது திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்,” என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவிக்கின்றார்.

நாட்டை பிளவுப்படுத்தும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கூறுகின்றார்.

”13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசப்பட்டது. 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தக்கூடாது என நான் கூறினேன். இது நாட்டைப் பிளவுப்படுத்தும் என்பதற்காகவே இதுவரை இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் இதை நடைமுறைப்படுத்தவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் இதை நடைமுறைப்படுத்தினால், நிச்சயமாக நாடு பிளவுபடும். அவரும் வரலாற்றில் இணைவார். 13வது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளமையால், அதை அமல்படுத்தும் பொறுப்பு தமக்கு உள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்,” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பில் 37 ஆண்டுகளாகக் காணப்படுகின்ற 13வது திருத்தத்தைத்தான் நிச்சயம் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சர்வகட்சி மாநாட்டில் நேற்றைய தினம் உறுதியளித்துள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு, யாராவது 22வது திருத்தமொன்றை புதிதாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்து, 13வது திருத்தத்தை இல்லாது செய்ய வேண்டும் எனக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க, அவ்வாறன்றி தன்மீது கோபப்படுவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

”நான் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். அந்த வகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். எமது அரசியலமைப்பில் கடந்த 37 ஆண்டுகளாக 13ஆவது அரசியல் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நான் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். நான் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும்.

இங்கு என் மீது சத்தம் போடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. எனவே இரண்டில் ஒன்று நடைபெற வேண்டும். 13ஆவது அரசியல் மறுசீரமைப்பை நீக்குங்கள். அல்லது 13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள்.

அதை இல்லாமல் ஒழிக்காவிட்டால், எமக்கு நடுவில் இருக்க முடியாது. ஒன்றில் அதை ஒழிக்க வேண்டும் இல்லையேல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். தனிப்பட்ட பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதை நீக்க முடியும்.

அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தைத் தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அபப்டியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும். ஆனால் இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்துக்கமைய பார்த்தால் நாம் ஒற்றையாட்சியில் இருக்கிறோம்.

அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன்,” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான அ.நிக்சன்

இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான அ.நிக்சனிடம், பிபிசி தமிழ் வினவியது. ”சர்வகட்சி மாநாடு என்பது ஒரு ஏமாற்று வேலை. 13ஐ பற்றி கதைத்துள்ளார். அவ்வளவு தான்.

13ஐ நடைமுறைப்படுத்த, ஏன் சர்வகட்சி மாநாட்டை நடத்த வேண்டும். அரசியலமைப்பில் உள்ள 13ஐ நடைமுறைப்படுத்து வேண்டியது தானே.

இதை நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு. அரசாங்கம் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுவொரு நகைப்புக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது.

காணி, போலீஸ் அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன. வடக்கு மாகாணத்தில் தமிழர்களே போலீஸ் உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும்.

சட்டத்தில் நடைமுறையில் உள்ள விடயத்தை அமல்படுத்துவதற்கு, ஜனாதிபதியின் அதிகாரங்கள் தேவையில்லை.

ஏனெனில், இது ஏற்கெனவே சட்டத்தில் உள்ள விடயம். நிறைவேற்று அதிகாரம் உள்ளமையால், ஜனாதிபதிக்கு அதை அமல்படுத்த முடியும்.

இதற்கு சர்வகட்சி மாநாடு தேவையற்ற ஒன்று. அத்துடன், 13ஐ நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, நாடு எந்த வகையிலும் பிளவுப்படாது,” என அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.

 

Exit mobile version